புதன், 30 நவம்பர், 2016

வெண்பொங்கல் VENPONGAL

வெண்பொங்கல்:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், மிளகு, சீரகம் தலா – ஒரு டீஸ்பூன், நெய்- 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – 20, கருவேப்பிலை – 1 இணுக்கு, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு. மிளகு சீரகத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் களைந்து மிளகு சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் போட்டு குக்கரில் ஆறு கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வேகவைக்கவும். இறக்கி லேசாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்தம்பருப்பு, மிளகு சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டுப் பொரிந்ததும் மிளகுசீரகத் தூள் போட்டு பொங்கலில் கொட்டிக் கிளறி மூடிவைத்து நிவேதிக்கவும்.

செவ்வாய், 29 நவம்பர், 2016

ராஜ்மா சுண்டல். RAJMA SUNDAL.

ராஜ்மா சுண்டல்:-

தேவையான்வை:- ராஜ்மா பீன்ஸ் – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், கொத்துமல்லி – ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- ராஜ்மா பீன்ஸைக் குக்கரில் போட்டு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். சீரகம் கொத்துமல்லி மிளகாய்த்தூள் தக்காளியை விழுதாக அரைக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் ராஜ்மா பீன்ஸை சேர்க்கவும். உதிரானதும் இறக்கி நிவேதிக்கவும்,

வியாழன், 24 நவம்பர், 2016

பட்டர்பீன்ஸ் சுண்டல். BUTTER BEANS SUNDAL.

பட்டர்பீன்ஸ் சுண்டல்.:-


தேவையானவை:- பட்டர்பீன்ஸ் – 2 கப், இஞ்சி – 1 துண்டு, புதினா -  1 கைப்பிடி, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல்-2 டீஸ்பூன், எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பட்டர்பீன்ஸுடன் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். இஞ்சி புதினா தக்காளி மிளகாய்த்தூளை அரைத்து வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டுப் புரட்டவும். லேசாய் எண்ணெய் பிரியும்போது பட்டர்பீன்ஸைப் போட்டு தேங்காய்த்துருவலையும் போட்டு இறக்கவும்.

புதன், 23 நவம்பர், 2016

பாசிப்பருப்பு சுண்டல், MOONG DHAL SUNDAL.

பாசிப்பருப்பு சுண்டல் :-


தேவையானவை:- பாசிப்பருப்பு – 2 கப், காரட் – 1 டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1. உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவிடவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துத் துருவிய காரட் கொழுந்து கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் உப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். நிவேதிக்கவும்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

முளைவிட்ட பயறு டாகோஸ்:- SPROUTED LENTILS TAKOS.

முளைவிட்ட பயறு டாகோஸ்:-


தேவையானவை:- மைதா – 1கப், கார்ன் ஃப்ளோர் – 1கப், எண்ணெய்- பொறிக்கத் தேவையான அளவு, உப்பு – அரை டீஸ்பூன், ஃபில்லிங் செய்ய :- முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், தக்காளி – 2, வயலட் முட்டைக்கோஸ் – 4 இதழ்கள், வெங்காயத்தாள் – அரைக்கட்டு, குடைமிளகாய்- 1, கொத்துமல்லித்தழை- ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – கால்டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய்- 2 டீஸ்பூன்.. தக்காளி கெச்சப் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மைதா, கார்ன் ஃப்ளோரை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து பூரிகளாக சுட்டெடுத்து நடுவில் போட் போல மடக்கி வைக்கவும். முளைவிட்ட பாசிப்பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு தக்காளி, குடைமிளகாய், வெங்காயத்தாளைப் பொடியாக அரிந்து எண்ணெயில் வதக்கி உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவைத்த பயறையும் போட்டு நன்கு கலந்து இறக்கவும். ஒரு தக்காளியையும் வயலட் முட்டைக்கோஸையும் நீளமாக நறுக்கவும். கொத்துமல்லித்தழையைப் பொடியாக அரியவும். டாகோஸில் முதலில் சிறிது தக்காளி முட்டைக்கோஸைத் தூவி பயறு மசாலாவை வைத்து அதன் மேல் சிறிது தக்காளி முட்டைக்கோஸ், கொத்துமல்லித்தழை தூவி கெச்சப்பை சிறிது ஸ்ப்ரே செய்து மடக்கிக் கொடுக்கவும்.

கோதுமை சுண்டல். WHEAT SUNDAL.

கோதுமை சுண்டல்

தேவையானவை:- கோதுமை – 1 கப், வரமிளகாய் – 1, தனியா – ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- கோதுமையைக் களைந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2 கப் நீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். வரமிளகாயையும் தனியாவையும் வறுத்து உப்புடன் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயப் பொடி தாளித்து கோதுமையைக் கொட்டவும் இதில் வறுத்த பொடியைப் போட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

திங்கள், 21 நவம்பர், 2016

சர்க்கரை சாதம். JAGGERY RICE.

சர்க்கரை சாதம்:-


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், வெல்லம்-கால் கிலோ, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, கடலைப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய் – 1 துண்டு பல்லுப் பல்லாக நறுக்கவும். பால் – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு கடலைப்பருப்பு பாலுடன் நாலு கப் நீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெல்லத்தைப் பாகு வைத்து வடிகட்டி வைக்கவும். குக்கரைத் திறந்து சாதத்தை மசித்து வெல்லப்பாகை ஊற்றவும். லேசாக சூடுபடுத்தி பொங்கல் ஒன்று சேர்ந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காயையும் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்,SKANDAR SASHTI RECIPES.

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்:-

1.தினை பருப்புத் தோசை
2.பொரியரிசி மாவுருண்டை
3.கினோவா கிச்சடி
4.வெல்ல பூரி.
5.பாசிப்பருப்பு டோக்ளா
6.அவல் வடை
7.புதினா மல்லி கருவேப்பிலை மோர்
8.இலந்தைப் பழப் பாயாசம்.

1.தினை பருப்புத் தோசை:-

தேவையானவை:- தினை – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், உளுந்தம் பருப்பு – 1 கைப்பிடி, வரமிளகாய் – 4, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, மஞ்சள்தூள்- 1 சிட்டிகை,எண்ணெய் – 20 மிலி.

வியாழன், 17 நவம்பர், 2016

மொச்சை சுண்டல். DRIED BEANS SUNDAL

மொச்சை சுண்டல்:-


தேவையானவை:- மொச்சை – 2 கப், தேங்காய் – 1 துண்டு, வரமிளகாய் – 2, பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுந்து தலா – 1 டீஸ்பூன்.

செய்முறை:- மொச்சையை வறுத்து ஊறப்போடவும். ஆறுமணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்துக் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும். வரமிளகாயுடன் தேங்காய் பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துப் பொடித்து வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து தாளித்து மொச்சையைப் போட்டுக் கிளறி வறுத்த பொடி தூவி இறக்கவும். நிவேதிக்கவும்.

பகாளாபாத், BAGALABATH.

பகாளாபாத்


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால்-1 லிட்டர்,தயிர் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ், மாதுளை முத்துக்கள் தலா – 2 டீஸ்பூன், வெள்ளரி சின்னம் – 1 பொடியாக நறுக்கவும் , காரட் துருவியது – 1 டீஸ்பூன், கொத்துமல்லி - ஒரு கைப்பிடி பொடியாக அரிந்தது, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, மாவடு இஞ்சி- 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பால் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து எடுத்து நன்கு குழைத்து வைக்கவும். ஆறியவுடன் உப்பையும் தயிரையும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகும் பெருங்காயமும் தாளித்துப் போடவும். கிஸ்மிஸ், மாதுளை முத்து, வெள்ளரி, காரட் துருவல்கள், கொத்துமல்லி, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி துருவல்கள் சேர்த்து வெண்ணெயும் போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து நிவேதிக்கவும்.

புதன், 16 நவம்பர், 2016

சோயா பீன்ஸ் சுண்டல்.SOYA BEANS SUNDAL

சோயா பீன்ஸ் சுண்டல்.

தேவையானவை:- சோயா பீன்ஸ் – 2 கப், காரட், குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன் துருவியது, தாளிக்க – கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- சோயாபீன்ஸை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் உப்பு சேர்த்து தேவையான நீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து காரட் குடைமிளகாயை வதக்கவும். இதில் சோயாபீன்ஸைச் சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

எள் சாதம். SESAME RICE.

எள் சாதம்:-


தேவையானவை:- பச்சரிசி சாதம் – 2 கப், கறுப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, உளுந்தம் பருப்பு- 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:- கறுப்பு எள்ளை எண்ணெய் விடாமல் வறுக்கவும். வரமிளகாயையும் உளுந்தம் பருப்பையும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து உப்புடன் எள்ளையும் சேர்த்துப் பொடிக்கவும். ஒரு பானில் எண்ணெய் விட்டுக் கடுகு , உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து இறக்கி சாதத்தை உதிர்த்துப் போட்டு அதில் எள்ளுப் பொடியைப் போட்டுக் கிளறவும். நெய்யை உருக்கி ஊற்றிக் கிளறி நிவேதிக்கவும்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

பச்சை அவரை சுண்டல். GREEN BEANS SUNDAL.

பச்சை அவரை சுண்டல்.


தேவையானவை:- பச்சை அவரை -2 கப், தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு , உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பச்சை அவரையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ( முற்றிய அவரையில் இருக்கும் பருப்பை உரித்து எடுத்துக் கொள்ளவும். ) தக்காளியில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து தாளிக்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரியும்போது வேகவைத்த அவரையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். நிவேதிக்கவும். 

வெள்ளி, 4 நவம்பர், 2016

வெஜிடபிள் ஆம்லெட்:- ( அடை ). கோகுலம், GOKULAM, KIDS RECIPES.

வெஜிடபிள் ஆம்லெட்:- ( அடை )

தேவையானவை :-
பொட்டுக்கடலை மாவு – அரை கப், கடலை மாவு – அரை கப், கார்ன்ஃப்ளோர் – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு கப், துருவிய காய்கறிக் கலவை – ஒரு கப், ( காரட், பீன்ஸ், முட்டைக் கோஸ், நூல்கோல், பீட்ரூட்,) பச்சை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், மிளகு சீரகத் தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-
பொட்டுக் கடலை மாவு, கடலை மாவு, மைதா கார்ன் ஃப்ளோர், உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாகத் துருவிய காய்கறிகள், பெரிய வெங்காயம் கொத்துமல்லித்தழை போட்டு நன்கு கலக்கவும். இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும். பால் தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி ஆம்லெட்டுகளாக சுட்டு திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வேகவைத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும். 

வெஜிடபிள் ஆம்லெட் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவாகும். காய்கறிகள் மற்றும் பொட்டுக் கடலையின் சத்துகள் முழுமையா கிடைக்குது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. பொட்டுக் கடலையில் இரும்புச் சத்து, லைசீன், ஐசோலூசின், ட்ரிப்ஃபோபேன், மற்றும் அரோமேட்டிக் அமினோ அமிலம் ஆகிய அமினோ அமிலங்கள், முழுமையான புரதங்கள் இருக்குது. கடலைப் பருப்பு ஞாபகசக்திக்கு உதவுது. இஞ்சி பூண்டு சீரகம் மிளகுத்தூள் செரிமானத்துக்கு உதவுது. பசியைத் தூண்டுது.

பொட்டுக் கடலையிலும் கடலைப் பருப்பிலும் காய்கறிகளிலும்  இருக்கும் நார்ச்சத்து செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்குது. துத்தநாகம், ஃபோலேட், கால்சியம், புரதச்சத்துகள் நிரம்பியது . எளிதில் கரையக்கூடிய கொழுப்பு சிறிய அளவில் இருக்குது.

70% கலோரீஸ் பொட்டுக் கடலையில் இருந்து கிடைக்குது. இதில் சோடியம், ப்ரோட்டீன், ஃபேட் சிறிய அளவில் இருக்கின்றன. கார்போஹைட்ரேட் 27 சதம் இருக்கு. இதில் கரையாத கொழுப்பு, இனிப்பு, கொலஸ்ட்ரால் எதுவுமே இல்லை.

உடல் ஊட்டத்துக்கும் வளர்ச்சிக்கும் பொட்டுக் கடலையும் கடலைப்பருப்பும் உதவுகின்றன. விட்டமின், மினரல், தாது உப்புகள், கனிமச் சத்துகள் காய்கறிகள், கொத்துமல்லித்தழை  மூலம் கிடைக்குது. பாலில் விட்டமின் பி இருக்கு. கால்சியம் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும் உதவுது.கண்பார்வையைத் தெளிவாக்குது.

அவ்வப்போது இந்த வெஜிடபிள் ஆம்லெட் / அடையைச் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும்.
பர்ப்பிள் கலர் கேபேஜ் சாலட்டை பாராட்டியதற்கு நன்றி  ஆர்.ஜே. ஹரிராஜ், ஆர். ஏ. விஜயபாலா,ஆர். ஜி காயத்ரி, ஆர். ஜே ஜெய்ஹரிதா, செல்வமருதூர். !!!