வியாழன், 24 ஜனவரி, 2019

தக்காளி உருளை திறக்கல்.

தக்காளி உருளை திறக்கல்.

தேவையானவை :-  பெ. வெங்காயம் - 2, தக்காளி - 2, அவித்த உருளைக்கிழங்கு -1, பச்சை மிளகாய் - 2, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு -அரைடீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை -1இணுக்கு.

செய்முறை :-  பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கவும். உருளையை லேசாக உதிர்த்து வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்துபோட்டு கருவேப்பிலை பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதங்கி வரும்போது உதிர்த்த உருளையைப் போட்டு உப்பு மிளகாய்ப்பொடி சேர்த்துக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கி இட்லி தோசையுடன் பரிமாறவும்.
  

செவ்வாய், 1 ஜனவரி, 2019

பூண்டுப் பொடி.

பூண்டுப்பொடி. :-

தேவையானவை :- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, பூண்டு - 4 பல், புளி - 1 சுளை, உப்பு - கால்டீஸ்பூன், கருவேப்பிலை சிறிது. எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வறுத்து இறக்கவும். எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து புளியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். சூடாக இருக்கும்போது பூண்டையும் கருவேப்பிலையையும் போட்டுப் புரட்டவும்.

மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளியைப் போட்டு நன்கு சுற்றி அதன் பின் பருப்புகளைப் போட்டு நைஸாக அரைக்கவும். கடைசியில் பூண்டைப் போட்டுச் சுற்றி இறக்கவும். கருவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கலக்கவும். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் போட்டுப் பிசைந்து உண்ணலாம்.