ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

டீஸ்பூனும் டேபிள் ஸ்பூனும்.

டீஸ்பூனும் டேபிள் ஸ்பூனும்


டீஸ்பூன் டேபிள் ஸ்பூன் என்று சமையல் அளவுகள் எழுதும்போது நிறையப் பேர் அது பற்றி சந்தேகம் கேட்பதுண்டு. கிட்டத்தட்ட நாலு கிராம் அளவு ஒரு டீஸ்பூன். ( 4.2 கிராம் ). 

அரை டீஸ்பூன் என்றால் 2.1 கிராம். 

ஒரு டேபிள் ஸ்பூன் என்றால் 14.3 கிராம். 

நான் என் சமையல் குறிப்புகளில் உத்தேசமாக பொருட்கள் என்றால் 5 மிலிக்கும், எண்ணெய் , நெய் போன்ற திரவங்கள் என்றால் 5 கிராமுக்கும் டீஸ்பூன் எனக்குறிப்பிடுவேன். 

அதே போல் அரை டீஸ்பூன் என்றால் 2.5 மிலி & 2.5 கி. & டேபிள் ஸ்பூன் என்றால் 15 மிலி & 15 கிராம். 

இதையே நீங்கள் இந்த ஸ்பூன்கள் கொண்டும் அளந்து கொள்ளலாம். இதேபோன்ற அளவு ஸ்பூன்கள் கொண்டும். சின்னக் குழிக்கரண்டி, மீடியம் குழிக்கரண்டி, பெரிய குழிக்கரண்டி. 

இந்த ஸ்பூன்களைப் படம் பிடித்துப் போட்டு எழுதணும்னு ரொம்ப நாளா நினைச்சது இப்பத்தான் நிறைவேறி இருக்கு. :) 
  

சனி, 29 ஆகஸ்ட், 2020

காராபூந்தி

காராபூந்தி.


தேவையானவை:- கடலைமாவு - 1 கப், அரிசி மாவு - 1 டீஸ்பூன், சோடாப்பூ - 1 சிட்டிகை ( விரும்பினால் ). மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- ஒரு பேஸினில் கடலைமாவு, அரிசி மாவு, சோடாப்பூ, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலக்கவும். அரை கப் நீரை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்தில் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு குழிக்கரண்டி மாவை முகர்ந்து அரிகரண்டி/பூந்தி தேய்க்கும் கரண்டியில் ஊற்றி அதே குழிக்கரண்டியால் லேசாகத் தேய்த்து முத்துமுத்தாக மாவை எண்ணெயில் விழச்செய்யவும். இன்னொரு அரிகரண்டியால் அவ்வப்போது கிளறிவிட்டுச் சலசலவென வெந்ததும் அரித்து வடிதட்டியில் போடவும். மிளகாய்த்தூளை முன்னே சேர்க்காமல் அனைத்து பூந்தியையும் பொரித்தபின் மொத்தமாகத் தூவிக் குலுக்கியும் வைக்கலாம். இந்த காராபூந்தி தயிர்வடையின் மேல் போட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். இதோடு ஓமப்பொடி, பொரி, பொடியாக அரிந்த வெங்காயம், காய்கறிக்கலவை, தக்காளி சாஸ் மிளகுத்தூள் மல்லித்தழை சேர்த்தும் சாப்பிடலாம்.  தயிரில் போட்டு பூந்தி ரெய்தாவாகச் செய்து ( விரும்பினால் சாட் மசாலா தூவி )சப்பாத்தி நான் போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம். 

  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தக்காளிக் குழம்பு.

தக்காளிக் குழம்பு. 


தேவையானவை :- தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 8 பல், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6 உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க பட்டை கிராம்பு - தலா 2. 

செய்முறை:- தக்காளிகளை முழுதாக ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவு நீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும். அப்படியே இறக்கி வைத்து ஆறியதும் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டை உரித்து வைக்கவும்.

வரமிளகாய் , சோம்பு, தேங்காயை அரைத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப்பருப்பையும் தனியாக அரைத்து வைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு தாளித்துப் பெரிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். அதில் உப்புடன் தேங்காய் அரைத்த கலவையைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். சில நிமிடம் கொதித்தபின் கசகசா முந்திரி அரைத்த கலவையைச் சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்த்து கொதித்து  எண்ணெய் பக்கவாட்டில் பிரிய ஆரம்பிக்கும்போது இறக்கவும். சூடாக சோற்றுடன் அல்லது தோசை இட்லி சப்பாத்தியுடன் பரிமாறவும். 

  

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கோதுமை ப்ரெட் உப்புமா.

கோதுமை ப்ரெட் உப்புமா. 



தேவையானவை:- கோதுமை ப்ரெட். - 6 ஸ்லைஸ். பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1. கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்..

செய்முறை:-கோதுமை ப்ரைட்டை உதிர்க்கவும். பெரியவெங்காயம் பச்சைமிளகாயைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து போட்டு சிவந்ததும் பச்சைமிளகாய் பெரிய வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாக வதங்கியதும் ப்ரட்டைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்துப் பொன்னிறமாக வெந்ததும் மிளகுத்தூள் தூவி வெண்ணெய் சேர்த்துக் கலக்கி இறக்கவும். மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸுடன் பரிமாறவும். 
  

புதன், 26 ஆகஸ்ட், 2020

கோஸ் கொத்துக்கடலை மசால்.

கோஸ் கொத்துக்கடலைமசால்:-


தேவையானவை:- முட்டைக்கோஸ் - 100 கி, ஊறவைத்து வேகவைத்த கொத்துக்கடலை/கொண்டைக்கடலை - 1 கப், பெரியவெங்காயம் -1, தக்காளி- 1, பூண்டு -2 பல், உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.  

செய்முறை:- கோஸையும் வெங்காயம் தக்காளியையும் சதுரத் துண்டுகளாக வெட்டவும். பூண்டைத் தோலுரித்து நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து சோம்பு தாளித்துப் பெரியவெங்காயம், தக்காளி, பூண்டை வதக்கவும். கருவேப்பிலையுடன் கோஸையும் சேர்த்து சிறிது வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் போட்டு நன்கு பிரட்டிவிட்டு வெந்த கொண்டைக்கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும். திறந்து நன்கு கிளறிவிட்டு நீர் சுண்டியதும் இறக்கி தயிர்சாதத்துடன் பரிமாறவும். 
  

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காரட் உருளை மசால்.

காரட் உருளை மசால்


தேவையானவை:- காரட் - 1 உருளை - 1, உப்பு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:- காரட் உருளையைத் தோல் சீவி ஒரு சதுரத் துண்டுகளாக நறுக்கி குக்கரில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் தெளித்து ஒரு விசில் வரும்வரை வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வெந்த கிழங்கு கேரட்டைப் போட்டு இரு நிமிடங்கள் கிளறி எடுக்கவும். இது சப்பாத்தி தோசை, சாதம் ஆகியவற்றுக்குப் பொருத்தமாக ருசியாக இருக்கும். செய்வதும் எளிது. 
  

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பனங்கற்கண்டுப் பால்.

பனங்கற்கண்டுப் பால். 



தேவையானவை:- பால் - ஒரு லிட்டர். பனங்கற்கண்டு - 100 கி.  

செய்முறை:- பாலைக் காய்ச்சிப் பொங்கும் போது அடக்கி வைத்துப் பனங்கல்கண்டைப் போடவும். கரண்டியால் கிண்டி நன்கு கரைந்ததும் வடிகட்டிக் கொடுக்கவும். இது பத்துப் பேருக்குக் கொடுக்கப் போதுமானது. சிவபுராணம், திருப்புகழ் பாராயணம், திருவாசகம் முற்றோதல் செய்ய வரும் அடியவர்கள் காலையிலிருந்து மாலை வரை தெய்வீத் திருப்பாடல்களைப் பாடுவதால் தொண்டை கட்டிக் கொள்ளாமலிருக்க இதைக் கொடுப்பது வழக்கம். பால் அதிக திக்காக இருந்தால் சரிக்குச் சரி நீர் சேர்த்துக் கொள்ளலாம். 
  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அரிசிப் பருப்புச் சாதம்.

அரிசிப் பருப்புச் சாதம். 


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – கால் கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு



செய்முறை:- பச்சரிசியையும் துவரம்பருப்பையும் கழுவி குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து வரமிளகாயையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூளும் கருவேப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்தூள் சேர்த்து சுருள வதங்கியதும் இறக்கி ஆறவைக்கவும். இதில் வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைப் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.
  

புதன், 19 ஆகஸ்ட், 2020

சின்ன வெங்காய சாம்பார்.

சின்ன வெங்காய சாம்பார். 


தேவையானவை:- வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், உரித்த சின்ன வெங்காயம் -20, தக்காளி - 1, புளி - 3 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் இஞ்ச் கட்டி, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் தலா 1 டீஸ்பூன், பெருங்காய்ப் பொடி - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு. கொத்துமல்லித்தழை - சிறிது. 

செய்முறை:- வேகவைத்த துவரம்பருப்பில் உரித்த சின்ன வெங்காயம், சதுரமாக வெட்டிய தக்காளியைப் போட்டுப் பெருங்காயமும் மஞ்சள் பொடியும் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி  ஒரு விசில் வரும்வரை குக்கரில் வேகவிடவும். வெந்ததும் திறந்து லேசாக கரண்டியால் மசித்து விடவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி சாம்பார் பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் பெருங்காயப் பொடி கொத்துமல்லித்தழை தூவி இறக்கி வைத்துக் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்து இட்லி தோசை சாதத்துக்கு உபயோகப்படுத்தவும். 
  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திரட்டுப்பால்.

திரட்டுப்பால்.

தேவையானவை:- பால் - 1 லிட்டர், வெல்லம், கருப்பட்டி - 200 கி, எலுமிச்சை - அரை மூடி. 

செய்முறை:- பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும். நன்கு கொதித்து வரும்போது எலுமிச்சையின் விதையை எடுத்துவிட்டுச் சாறைப் பிழியவும். பால் திரண்டு விடும். சில சமயம் வெல்லம் கருப்பட்டியைப் போட்டாலே திரண்டு விடும். அதன் பின் சிம்மில் வைத்து அரைமணிநேரம் காய்ச்சி சுண்டியதும் இறக்கவும். 

கரண்டியை அதிகம் போட்டுக் கிளற வேண்டாம். அப்போதுதான் திரட்டுப்பால் கூடு கூடாக பாகு சேர்ந்து திரண்டு சுவையுடன் இருக்கும். இல்லாவிட்டால் மாவுபோல் ஆகி விடும். 
    

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தாளிச்ச இடியாப்பம்

தாளிச்ச இடியாப்பம். 

தாளிச்ச இடியாப்பம். 



இதனைச் செட்டிநாட்டுப் பகுதிகளில் தாளிச்ச இடியாப்பன் என்பார்கள். 

தேவையானவை:- இடியாப்ப மாவு - 1 கப் , தயிர் - 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- இடியாப்பமாவை ஒரு பேசினில் போட்டு கால் டீஸ்பூன் உப்பைத் தூவவும். முக்கால் கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும். லேசாக எண்ணெயும் சேர்க்கலாம். நன்கு டைட்டாக இருக்கும்போது மாவை நன்கு பிசைந்து இடியாப்பக் கட்டையில் போட்டு இட்லிச் சட்டியில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து வைக்கவும். 

தயிரை சிறிது நீர் சேர்த்துக் கடைந்து மாவில் தெளித்துப் பிசறி விடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு  உளுந்து தாளித்துப் பெரியவெங்காயம் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து மீதி உப்பைத் துவி இடியாப்பத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இத்துடன் பச்சடி , கத்திரிக்காய் கோசமல்லி சேர்த்துப் பரிமாறவும். 
  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு.

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு. 

பொங்கல் சமையலில் முதலில் சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல் இடம் பெறும். இது இரண்டும் சூரியனுக்கு நேர் எதிரே கீழ் வாசலில் அல்லது முற்றத்தில் கோலமிட்டு ( முன்காலத்தில் - முப்பது வருடங்களுக்கு முன் அம்மா வீட்டில் சாமி வீட்டுக்கு எதிரில் கோலமிட்டு மணல் கொட்டி அதன் மேல் கோலமிடப்பட்ட செம்மண் யானையடிக்கல் வைத்து கோலமிடப்பட்ட இரும்பு அடுப்பை வைத்து அதன் மேல்)  கோலமிடப்பட்ட முறித்தவலையில் மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் இடுவார்கள்.  இப்போது எல்லாம் காஸ் அடுப்பில்தான். 

அதற்குள் அடுப்படியில் மூன்று குழம்பு, ரசம், நான்கு பொரியல் , ஒரு கூட்டு, பருப்பு, அப்பளம் நெய் தயார் செய்து இவற்றையும் இலையில் படைத்துக் கும்பிட்டு அடுப்புக்கும் சூரியனுக்கும் நிவேதித்துத் தேங்காய் உடைத்துத் தீப தூபம் காட்டி அதன் பின் சாமி அறைக்கு எடுத்து வந்து நிவேதித்து உண்பார்கள்.

கத்திரிக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய் இம்மூன்றையும் கெட்டிக் குழம்பு வைப்பார்கள். தக்காளி ரசம், பருப்பு, அப்பளம் பொரித்து நெய்யை உருக்கி வைப்பார்கள். வாழைக்காய் புளிக்கறி, அவரைக்காய், தட்டைப்பயித்தங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன உப்புப் பொரியல். பலாக்காய் கூட்டு வைப்பார்கள். அம்மா வீட்டில் கீரை மசிப்பார்கள்.

இவற்றைப் படைத்துக் கும்பிட்டு உணவருந்தியதும் (சர்க்கரைப் பொங்கல் அநேகமாகத் தீர்ந்துவிடும். ) வெள்ளைப் பொங்கலை உருண்டையாக உருட்டி பெரிய பாத்திரத்தில் நீரில் போட்டு வைப்பார்கள். எல்லாக் காய்களையும் குழம்பையும் ரசத்தையும் பருப்பையும் ஒன்றாக்கிக் கொதிக்க வைத்து இறக்குவார்கள். இதுதான் பொங்கல் குழம்பு.

இரவு  ஆளுக்கொரு சோற்று உருண்டையுடன் மோர் ஊற்றி சுடச் சுட இந்தக் குழம்பையும் காயையும் கொடுப்பார்கள். தேவாமிர்தம். மறுநாள் இந்தப் பொங்கல் குழம்புடன் ஆப்பம் ( தேங்காய்ப்பாலும் உண்டு ) காலை டிபனாக இருக்கும். ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். :) 
    

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இட்லி பச்சடி.

இட்லி பச்சடி :-


தேவையானவை :- பாசிப்பருப்பு - 1கப்,  கத்திரிக்காய் - 1, உருளைக்கிழங்கு - 1 பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 6. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு -  1 டீஸ்பூன், புளி - 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1இணுக்கு, கொத்துமல்லித்தழை - சிறிது.

செய்முறை:- பாசிப்பருப்பை அரைகப் நீரில் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வெந்த பருப்போடு சேர்க்கவும். பச்சைமிளகாய்களைக் கீறிப் போட்டு  மஞ்சள்பொடி , பெருங்காயத்துண்டு சேர்த்து இன்னுமொரு முறை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். 

ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு புளியைக் கரைத்து வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து கரண்டியால் நன்கு மசித்து உப்புப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதிக்கவிடவும். இதில் கடுகு, உளுந்து , சீரகத்தைத் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் பச்சடியில் சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் பொடியாக அரிந்த கொத்துமல்லியையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு சூடான இட்லிகளோடு பரிமாறவும்.  

    

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

தக்காளித் தொக்கு

தக்காளித் தொக்கு



தேவையானவை:- தக்காளி - அரை கிலோ, நல்லெண்ணெய் - 25 கி, வரமிளகாய்த்தூள் - 25 கி, வெந்தயம், கடுகு தலா அரை டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1இணுக்கு. பெருங்காயப் பொடி - 1  சிட்டிகை.

செய்முறை:- தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.  ஒரு கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, வெந்தயம் போடவும். இரண்டும் வெடித்துச் சிவந்ததும் பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தக்காளியைப் போடவும். பத்து நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்துக் கிண்டியபின் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிம்மில் வைத்து வேக விடவும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பிடித்துவிடும். விரும்பினால் கடைசியில் சிறிது சீனியோ வெல்லமோ சேர்க்கலாம். தொக்கு நன்கு வெந்து சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி சப்பாத்தி, தோசை, இட்லி, சாதத்துடன் பரிமாறவும். 

  

சனி, 8 ஆகஸ்ட், 2020

கத்திரிக்காய் திறக்கல்.

கத்திரிக்காய் திறக்கல். 


தேவையானவை:- கத்திரிக்காய் - 3, உருளைக்கிழங்கு - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1,  அரைக்க :- வரமிளகாய் - 5, தேங்காய்த்துருவல் - அரை மூடி, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 6. பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல். உப்பு - அரை டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். ( கடுகு உளுந்து சோம்பு விரும்பினால் சிறிது ) , கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம்,தக்காளியை சுத்தம் செய்து அரை இன்ச் சதுரத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்துக் கருவேப்பிலை சேர்க்கவும்.இதில் பெரிய வெங்காயம் கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். அதன்பின் உருளைக்கிழங்கு தக்காளியைப் போட்டு சிறிது வதக்கு அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.எண்ணெயில் வதங்கி மசாலா பிரியும்போது இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி இட்லி, தோசையுடன் பரிமாறவும். 
  

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

எக் துக்டா.

எக் துக்டா.



தேவையானவை :- முட்டை 4, கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- முட்டையை அவித்துத் தோலுரித்து எட்டுத் துண்டுகளாக்கவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்து அதில் முட்டைத் துண்டுகளை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக பச்சைமிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.