புதன், 29 செப்டம்பர், 2021

30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:-

30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி:-

தேவையானவை:- கீமா – அரை கிலோ, பாசுமதி அரிசி – 3 கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 + 4, பூண்டு  - 6 பல், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் – 2 டீஸ்பூன், முழு கரம் மசாலா – 2 டீஸ்பூன், முழு மல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, சீரகம் -1 ஸ்பூன், ஏலக்காய் , கிராம்பு – தலா 4, பச்சை மிளகாய் – 2,  தக்காளி – 3, வானவில் செய்ய :- யெல்லோ ஃபுட் கலர் + தண்ணீர், ரெட் ஃபுட் கலர் + தக்காளி கெட்சப் , பர்ப்பிள் ஃபுட் கலர் + தண்ணீர், க்ரீன் ஃபுட்கலர் செய்ய :- பச்சை மிளகாய் – 2 புதினா கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, சீரகம் -1 டீஸ்பூன், பூண்டு – சிறிது, எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை:- கீமாவை கழுவி குக்கரில் பெரிய வெங்காயம் ஒன்று, ஆறு பல் பூண்டு, சீரகம், அரை டீஸ்பூன் உப்பு, முழு கரம் மசாலா போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 12 நிமிடம் வேகவிடவும். இன்னொரு பானில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு பட்டை, சீரகம், ஏலக்காய் 2, கிராம்பு 2 சேர்த்து ஊறவைத்த பாசுமதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து வடிக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி 4 வெங்காயத்தை நீளமாக நறுக்கிப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இதில் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வேகவைத்த மட்டனைச் சேர்த்துக்  கிளறவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், முழு மல்லி, சீரகம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரை கப் நீர் சேர்க்கவும். பத்து நிமிடம் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாதத்தை ஐந்து பாகமாகப் பிரிக்கவும். வெள்ளை சாதத்தை அப்படியே வைக்கவும். யெல்லோ புட் கலருடன் தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு சாதத்தில் கலக்கவும். தக்காளி கெட்சப்புடன் ரெட் ஃபுட் கலரைச் சேர்த்து இன்னொரு பங்கு சாதத்தில் கலக்கவும். பர்ப்பிள் ஃபுட் கலரை நீருடன் கரைத்து இன்னொரு பங்கு சாதத்துடன் கலக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி, சீரகம், பூண்டு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்து இன்னொரு பங்கு சாதத்தில் கலக்கவும். ஓவனை 200 டிகிரி முற்சூடு செய்யவும். ஒரு ட்ரேயில் நெய் தடவி சிவப்பு சாதத்தைப் பரப்பவும். அதன் மேல் பர்ப்பிள் சாதத்தைப் பரப்பவும். மட்டன் கைமா மசாலாவைப் பரப்பி மஞ்சள் சாதத்தைப் பரப்பவும். அதன் மேல் பச்சை நிற சாதத்தைப் பரப்பி வெள்ளை சாதத்தையும் அதன் மேல் பரப்பவும். இதை ஓவனில் வைத்து ஓவனை 80 டிகிரியில் வைத்து 3 நிமிடம் பேக் செய்யவும். வெதுவெதுப்பானதும் எடுத்து அப்படியே ஒரு ட்ரேயில் கவிழ்க்கவும். லேசாகக் கலந்து விட்டு வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரித்துண்டுகளோடு பரிமாறவும்

 

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

29.பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி

29.பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி


 

தேவையானவை :- பாசுமதி அரிசி 1 கப்பைனாப்பிள் - கால் பாகம்பேரீச்சை -6, ப்ரெட் - 2 ஸ்லைஸ்பெரிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, தயிர்  - 2 டேபிள் ஸ்பூன்பால் - 2 கப்உப்பு - 1 டீஸ்பூன்சீனி - அரை ஸ்பூன்நெய் - 3 டேபிள் ஸ்பூன்ஊறவைத்துத் தோலுரித்த பாதாம்  - 8, முந்திரி -8, யெல்லோ ஃபுட்கலர் - 1 சிட்டிகைபுதினா கொத்துமல்லி - 2 டீஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய்பிரிஞ்சி இலை - தலா 1, பைனாப்பிள் எசன்ஸ் - சிலதுளிகள்குங்குமப்பூ - 1 சிட்டிகை.

 

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவிடவும்பைனாப்பிள்பிரட்டை ஒரு இஞ்ச் துண்டுகள் செய்யவும்பேரீச்சையை நான்காகத் துண்டு செய்யவும். 2 டேபிள் ஸ்பூன் நெய்யைக் காயவைத்து முந்திரி பாதாமை வறுத்தெடுக்கவும்அதிலேயே ப்ரெட் பைனாப்பிள்பேரீச்சையைப் புரட்டி எடுக்கவும்மிச்ச நெய்யை ஊற்றிப் பட்டைகிராம்புஏலம்பிரிஞ்சி இலை தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும்இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்துப் பச்சை வாடை போனதும் அரிசியைச் சேர்த்து நன்கு வறுக்கவும்பச்சைமிளகாயையும் உப்பையும்சீனியையும்தயிரையும் சேர்த்து நன்கு கிளறி 2 கப் பால் ஊற்றி சிம்மில் வைத்து வேகவிடவும்முக்கால் பதம் வெந்ததும் வறுத்த பேரீச்சைபைனாப்பிளை சேர்த்து குங்குமப்பூவையும் யெல்லோ ஃபுட்கலரையும் 1 டேபிள் ஸ்பூன் வெந்நீரில் கரைத்து ஊற்றவும்ஐந்து நிமிடம் தம்மில் வைத்து இறக்கி பைனாப்பிள் எசன்ஸை தெளித்து ப்ரெட் , முந்திரிபாதாமால் அலங்கரித்து மயோனிஸ்மிண்ட் சட்னிதக்காளி ஸ்வீட் பச்சடியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 23 செப்டம்பர், 2021

28.ஹைதராபாதி கச்சி யெக்னி பீஃப் (மாட்டிறைச்சி) பிரியாணி

28.ஹைதராபாதி கச்சி யெக்னி பீஃப் (மாட்டிறைச்சி) பிரியாணி


தேவையானவை:- மாட்டிறைச்சி – 1 கிலோ, பாசுமதி அரிசி – 1 கிலோ, வெங்காயம் – 6, நெய் – 1 கப், எண்ணெய் – 1 கப், கரம்மசாலா – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,  உப்பு – 1 டேபிள் ஸ்பூன், ஜல் ஜீரா – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 10, கொத்துமல்லி புதினாத்தழை – 2 கைப்பிடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தயிர் – 250 மிலி, ரெட் ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், பட்டை -2, கிராம்பு, ஏலக்காய் – தலா 6, எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், நெய் – அரை கப்.

செய்முறை:- மாட்டிறைச்சியைக் கழுவி தண்ணீரை இறுக்கப் பிழிந்து ஒரு பெரிய தேக்ஸாவில் போடவும். ஆறு வெங்காயத்தையும் நீளமாக நறூக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மாட்டிறைச்சியில் உப்பு, மஞ்சள்தூள், பாதி கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு பட்டை, ஜல்ஜீரா, பொடியாக அரிந்த 8 பச்சை மிளகாய், பொடியாக அரிந்த புதினா கொத்துமல்லித்தழை, பட்டை ஒன்று, ஏலக்காய் 4, கிராம்பு 4  போட்டு வறுத்த வெங்காயத்தில் முக்கால் பங்கை நொறுக்கிப் போட்டுப் பிசையவும். பத்து நிமிடம் கழித்து தயிரையும் வறுத்த எண்ணெயில் பாதியையும் ஊற்றி நன்கு கிளறி கத்தியாலும் கரண்டியாலும் நன்கு குத்திப் பிசைந்து 2 மணி நேரம் ஊறவிடவும். அரிசியைக் களைந்து 20 நிமிடம் ஊறவிடவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு, பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லித்தழை, பட்டை கிராம்பு ஏலக்காய், கரம் மசாலாத்தூள் சேர்த்து அரிசியைப் போட்டு முக்கால் பதம் வேகவிடவும். வெந்ததும் வடித்து தேக்ஸாவில் இருக்கும் மாட்டிறைச்சிமேல் போடவும். அதன் மேல் வறுத்த வெங்காயத்தைப் போட்டுக் கால் கப் நீரில் கரைத்து ரெட் ஃபுட் கலரை ஊற்றவும். அதன் மேல் புதினா கொத்துமல்லித்தழைகள், வெங்காயம் வறுத்த எண்ணெயில் மீதி, அரை கப் நெய் போட்டு தேக்ஸாவை அடுப்பில் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் அடுப்பில் நெருப்பில் வைத்து இறக்கவும்.  அதன் பின் தோசைக்கல் ஒன்றை அடுப்பில் வைத்து தேக்ஸாவை அதன் மேல் வைக்கவும். ஹை ஃப்ளேமில் இரண்டு நிமிடங்கள் வைத்துவிட்டு அதன் பின் அடுப்பை சிம்மில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து இறக்கவும். மேலாகக் கரண்டியைக் கொடுத்துப் பதமாக எடுத்துப் பைனாப்பிள் ரெய்த்தா, வெள்ளரிப் பச்சடியுடன் பரிமாறவும். 

 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

27.சிந்தி மட்டன் பிரியாணி

27.சிந்தி மட்டன் பிரியாணி


தேவையானவை:- மட்டனை ஊறவைக்க :- மட்டன் தொடைக்கறி - அரைக்கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், சிவப்புமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். உப்பு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி செய்ய :- ஒரு கிலோ பாசுமதி அரிசி, எண்ணெய் – அரை கப், பெரிய வெங்காயம் – 6, தக்காளி – 4, உருளைக்கிழங்கு – 4, ப்ரூன்ஸ் ( காய்ந்த ப்ளம்ஸ்) – 10 , பச்சை மிளகாய் – 4, யோகர்ட் – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கிராம்பு – 4, பச்சை ஏலக்காய் – 2 கறுப்பு ஏலக்காய் – 2, மிளகு – 5, சீரகம் – 2 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, பிரிஞ்சி இலை – 2, புதினா கொத்துமல்லி – 4 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ – 1 டீஸ்பூன், யெல்லோ ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மட்டனை ஊறவைக்கத் தேவையானவற்றைக் கலந்து மட்டனை  2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். உருளைக்கிழங்கைத் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும். அரை கப் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பாதியை அலங்கரிக்க எடுத்துக் கொண்டு மீதியில் சீரகம் ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டுத் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்டைச் சேர்க்கவும். அதன் பின் மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் தூளுடன்  வெந்நீரில் ஊறவைத்த ப்ரூன்ஸையும் நறுக்கிய தக்காளியையும் சேர்க்கவும். தக்காளி குழைந்ததும் பச்சை மிளகாய், ஊறவைத்த மட்டனைச் சேர்க்கவும். ஓரளவு மட்டன் வெந்ததும் யோகர்ட், வெந்நீரில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்க்கவும். மட்டன் நன்கு வெந்ததும் பொரித்த உருளைக்கிழங்கு கரம் மசாலாவைச் சேர்க்கவும். ஒரு பெரிய பானில் தண்ணீரைக் கொதிக்க வைத்து 2 டேபிள் ஸ்பூன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து முக்கால் பதம் சமைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு இன்னொரு பெரிய தேக்ஸாவில் சாதம், மட்டன் & உருளைக் கறி, வறுத்த வெங்காயம், பொடியாக அரிந்த கொத்துமல்லி புதினாத்தழைகள் போட்டு யெல்லோ ஃபுட் கலரை நீரில் கலந்து தெளிக்கவும். இறுக்கமான மூடி போட்டு மூடி 15 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடனும் வெங்காயம் தக்காளி கச்சும்பாருடனும் ( சாலட்)  பரிமாறவும்.  

 

வியாழன், 16 செப்டம்பர், 2021

26.தலச்சேரி பிரியாணி

26.தலச்சேரி பிரியாணி


தேவையானவை:- மட்டன் – அரை கிலோ, பாசுமதி அரிசி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, தயிர் – அரை கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 4 டேபிள் ஸ்பூன், புதினா கொத்துமல்லி – இரண்டு கைப்பிடி, முந்திரி, கிஸ்மிஸ் – தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா 4, பிரியாணி மசாலா செய்ய :- பட்டை -2, கிராம்பு – 4, ஏலக்காய் – 4, சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன், ஜாதிக்காய் – கால்பாகம், ஜாதி பத்திரி – சிறிது, அன்னாசிப்பூ – 2, மராட்டி மொக்கு- 1, கல்பாசிப்பூ – சிறிது, பிரிஞ்சி இலை – 1, தாளிக்க :- பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1. வெந்நீர் – 4 கப்.

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். பிரியாணி மசாலாவைப் பொடித்து வைக்கவும். ஒரு பானில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுக்கவும். அதன்பின் இரண்டு பெரிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுக்கவும். அதை எடுத்து அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு பட்டை கிராம்பு ஏலக்காயைத் தாளித்து மிச்ச வெங்காயத்தையும் பொன்னிறமாக வறுக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு பச்சை வாசனை போனதும் மட்டனைப் போட்டுத் திறக்கவும். நன்கு திறங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதன்பின் தக்காளியைச் சேர்த்து நன்கு வதங்கியதும் தயிரும் உப்பும் போட்டு மூடி வைத்து நன்கு வேகும்வரை வைத்து இறக்கவும். இன்னொரு பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மிச்ச பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்டையும் போட்டு வதக்கி அரிசியைப் போட்டு வறுக்கவும். இதில் வெந்நீரை ஊற்றி உப்புப் போட்டுக் கலக்கி மூடி வைத்து வேகவைத்து இறக்கவும். மட்டன் உள்ள பாத்திரத்தைத் திறந்து சாதம்,  வறுத்த வெங்காயம், புதினா கொத்துமல்லித்தழைகள், திரும்ப சாதம் வெங்காயம் புதினா கொத்துமல்லித்தழைகள், முந்திரி கிஸ்மிஸை லேயர் லேயராக அடுக்கி பாத்திரத்தை மூடி 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். பரிமாறும்போது லேசாகக் கிளறிப் பரிமாறவும். சிப்ஸ், தக்காளிக்குருமாவுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

25.தெஹ்ரி(உருளை) பிரியாணி

25.தெஹ்ரி(உருளை) பிரியாணி


தேவையானவை:- பாசுமதி அரிசி – 1 கப், உருளைக்கிழங்கு – 2, கேரட் – 1, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் குளிர்ந்த நீரில் அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பிரிஞ்சி இலை, வெங்காயத்தைத் தாளிக்கவும். வெங்காயம் மென்மையாக ஆனதும் நீளமாக அரிந்த உருளை, கேரட்டைச் சேர்க்கவும். இவை சிவந்து வெந்தது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளைச் சேர்த்துக் கிளறவும். அரிசியை வடித்துப் போட்டு இதில் வறுக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி வெண்ணெயையும் பட்டாணியையும் கரம் மசாலாவையும் சேர்க்கவும். உப்பைச் சேர்த்து நன்கு வதக்கி ஒரு விசில் வைத்து இறக்கவும். பனீர் க்ரேவி, பட்டாணி குருமாவுடன் பரிமாறவும்.

 

வியாழன், 9 செப்டம்பர், 2021

24.பட்டர்பீன்ஸ் பேபிகார்ன் பிரியாணி

24.பட்டர்பீன்ஸ் பேபிகார்ன் பிரியாணி


 

தேவையானவை :- பட்டர்பீன்ஸ் 150 கிபேபிகார்ன் - 4, பொன்னி பச்சரிசி - 2 கப்பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,  அரைக்க:- பச்சை மிளகாய் 5, சோம்பு - 1 டீஸ்பூன்கசகசா - அரை டீஸ்பூன்முந்திரி -6, கொத்துமல்லிபுதினா ஒரு கைப்பிடி,  தேங்காய்ப்பால் - 2 கப்உப்பு - ஒரு டீஸ்பூன்எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - 1. 

 

செய்முறை :- பேபிகார்னை நீளத் துண்டுகள் செய்யவும்பட்டர்பீன்ஸை குக்கரில் ஒரு விசில் வேகவைத்து நீரை வடிக்கவும்அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்ப்ரஷர் குக்கரில் எண்ணெய் + நெய்யைச் சேர்த்துப் பிரிஞ்சி இலைபட்டைகிராம்புஏலக்காய் தாளித்து நீளமாக அரிந்த வெங்காயம் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும்இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கி பட்டர்பீன்ஸ்பேபிகார்ன்அரிசியைச் சேர்த்து வறுக்கவும்தக்காளியையும் உப்பையும் போட்டு அரைத்த மசாலாவை ஊற்றவும்தேங்காய்ப்பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி  குக்கரை மூடி ஒரு விசில்வரும்வரை வைக்கவும்திறந்து கிளறி குடைமிளகாய் தொக்குவாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி


தேவையானவை:- மீல்மேக்கர் – 30, உப்பு சேர்த்து வேகவைத்த கொண்டைக்கடலை – அரை கப், பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் – 6, சோம்பு – 1 டீஸ்பூன், தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, கசகசா – அரை டீஸ்பூன், கொத்துமல்லி புதினா தழை – 1 கைப்பிடி. எண்ணெய் + வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன்.



செய்முறை:- மீல்மேக்கர்/ சோயா சங்கஸை வெந்நீரில் போட்டு மூடி 3 நிமிடம் கழித்து வடிகட்டி அலசிப் பிழிந்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய்,சோம்பு, கசகசா, முந்திரியை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் + வெண்ணெய் போட்டு பட்டை கிராம்பு ஏலக்காயைத் தாளிக்கவும். வெங்காயத்தை மென்மையாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அது சிவந்ததும் மீல்மேக்கரையும் தக்காளியையும் சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு திறக்கி விட்டு அரிசியைப் போட்டுக் கலக்கவும். இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையையும் கலக்கவும். நான்கு கப் நீரூற்றி உப்பு சேர்த்து மேலாக கொத்துமல்லி புதினாவைத் தூவி ஒரு விசில் வைத்து இறக்கவும். இத்துடன் ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், மீன் வறுவல் சேர்த்துப் பரிமாறவும்.

 

வியாழன், 2 செப்டம்பர், 2021

22.ப்ராக்கோலி பிரியாணி

22.ப்ராக்கோலி பிரியாணி


தேவையானவை:- ப்ராக்கோலி – 1, பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு – 1 டீஸ்பூன், புதினா கொத்துமல்லி – ஒருகைப்பிடி, நெய் + எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் – அரை கப்.ப்ராக்கோலியை வறுக்க :- மைதா, கார்ன்ஃப்ளோர் – தலா 1 டேபிள் ஸ்பூன்.  உப்பு, மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன். வறுக்கத் தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:- ப்ராக்கோலியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மைதா கார்ன்ஃப்ளோர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசறி எண்ணெயில் வறுத்து வைக்கவும். ஒரு ப்ரஷர் குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் +எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிவக்க வறுத்துத் தக்காளி, சோம்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிரியாணி மசாலாவைச் சேர்த்து அரிசியையும் வறுத்து இரண்டு கப் தேங்காய்ப்பால் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கிளறவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும். குக்கரைத் திறந்து ப்ராக்கோலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், புதினா கொத்துமல்லித்தழைகள் தூவி நவரத்ன குருமாவுடன் பரிமாறவும்.