எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

கேப்பை வத்தல்

கேப்பை வத்தல்



தேவையானவை:- கேழ்வரகு – ஒரு கிலோ, உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:- கேப்பையை ஊறவைத்துக் கிரைண்டரில் ஆட்டவும். இதில் நீரூற்றிப் பிழிந்து பால் எடுக்கவும். ஒரு கிலோ கேப்பைக்கு 20 கப் நீரூற்றிப் பிழியலாம். இரவு முழுவதும் அந்தப் பாலைப் புளிக்க வைத்து மறுநாள் காலையில் நன்கு கலக்கி அடுப்பில் வைத்துக் கைவிடாமல் நன்கு கிளறவும். கண்ணாடி போல் வெந்ததும் உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். கையை நீரில் நனைத்து மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கவேண்டும். இதுவே பதம். ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்துப் பாய் மேல் விரித்துக் கேப்பைக் கூழைக் கரண்டியால் வடகம் போல் ஊற்றித் தடவிக் காயவிடவும். மாலையில் திருப்பிப் போட்டு நீர் தெளித்து வடகங்களை உரித்துப் போடவும். இன்னும் நான்கு நாட்கள் வெய்யிலில் காயவைத்துப் பொரிக்கலாம்.

 

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அரிசி அப்பளம்

அரிசி அப்பளம்


தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைஸாக ஆட்டி வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மாவை ஊற்றிக் கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். குக்கர் தட்டுகளில் அல்லது இலைகளில் எண்ணெய் தடவி இந்த மாவை ஒரு கரண்டி ஊற்றி அப்பள சைஸில் தடவி இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து உரிக்கவும். நிழற்காய்ச்சலாகவே நான்கு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதைப் பொரித்துச் சாப்பிடலாம்

 

திங்கள், 23 ஜனவரி, 2023

கொத்தவரை வத்தல்

கொத்தவரை வத்தல்


தேவையானவை:- கொத்தவரங்காய்/சீனியவரங்காய் – ஒரு கிலோ, உப்பு – 2 டீஸ்பூன்,  தயிர் – 1 கப்.

செய்முறை:- கொத்தவரங்காய்களை காம்பு நறுக்கியோ நறுக்காமலோ வத்தல் போடலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டுக் கொத்தவரங்காய்களை ஒரு நிமிடம் வேகவைத்து குழைந்துவிடாமல் எடுத்து வடிக்கவும். ஆறியவுடன் தயிரைக் கடைந்து ஊற்றி நன்கு புரட்டி விட்டு ஒற்றை ஒற்றையாகத் தாம்பாளத்தில் பரப்பிக் காயவைத்து எடுக்கவும். இந்த வத்தலைப் பொரித்துச் சாப்பிடலாம்.

 

வியாழன், 19 ஜனவரி, 2023

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ்


தேவையானவை- உருளைக்கிழங்கு – 6, உப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை:- உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கனமான ஸ்லைஸுகளாக நறுக்கவும். மூன்று கப் நீரைக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு ஸ்லைஸுகளைப் போட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு நிமிடம் கழித்து வடித்தெடுத்து எண்ணெய் தடவிய தட்டில் ஒற்றை ஒற்றையாகப் பரப்பி வெய்யிலில் நன்கு காயவைத்து எடுக்கவும் தேவையான பொழுது பொரிக்கலாம்.

 

செவ்வாய், 17 ஜனவரி, 2023

மாவத்தல்

மாவத்தல்


தேவையானவை:- புளிப்பான மூக்குமாங்காய் – 2 கிலோ, ( கால்ப் பழமான மாங்காயில் கூட வத்தல் போடலாம். குழம்பு புளிப்பு & இனிப்புச் சுவையுடன் இருக்கும்.) கல் உப்பு – ஒரு கைப்பிடி.

செய்முறை:- மாங்காய்களைக் கொட்டையில்லாமல் நான்காக வெட்டி நீளவாக்கில் நறுக்கவும். கல் உப்பைப் பொடி செய்து தூவி நன்கு உரசவும். இதைத் தட்டில் இரண்டு மூன்று நாட்கள் காயவைத்து சுக்காகக் காய்ந்தவுடன் எடுத்துப் பத்திரப் படுத்தவும். பலகாய் மண்டி, புளிக்குழம்பு, வத்தக் குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம்.

 

புதன், 11 ஜனவரி, 2023

கத்திரி வத்தல்

கத்திரி வத்தல்


தேவையானவை:- கத்திரிக்காய் – ஒரு கிலோ ( முத்தல் தனியாக, இளசு தனியாகப் பிரித்துப் போடலாம்), உப்பு – 2 டீஸ்பூன், புளி – 4 சுளை.

செய்முறை:- கத்திரிக்காய்களைக் கழுவி நீளவாக்கில் அரை இஞ்ச் அகலம் இருக்குமாறு வெட்டவும். இட்லிப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பைப் போட்டுக் கத்திரிக்காய்களையும் போட்டு மூன்று நிமிடங்கள் வேகவிடவும்.

நீரை வடிகட்டி கத்திரிக்காய்களை ஒற்றை ஒற்றையாகப் பேப்பரில் அல்லது தட்டில் பரப்பி வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதை வத்தல் குழம்பு செய்யப் பயன்படுத்தலாம். குழம்பு செய்யும்போது சிறிது நேரம் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

 

திங்கள், 9 ஜனவரி, 2023

வத்தல் வடாம் வகைகள்.

 குமுதம் சிநேகிதியின் குட்டி புக்கில்  வெளியான வத்தல் வடாம் போடுவது பற்றிய குறிப்புகள். 


வத்தல் வடகங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாம்பே சட்னி:-

பாம்பே சட்னி:-


தேவையானவை:- கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப், பெரியவெங்காயம் – பாதி, தக்காளி -1, வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் -2, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தாளிக்க:- கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிது, எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- கடலைமாவை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய் தாளித்து நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த கடலை மாவை ஊற்றவும். அது நன்கு கொதித்ததும் கரண்டியால் கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். மல்லித்தழை, எலுமிச்சைச் சாறு கலந்து உபயோகிக்கவும். 

 
Related Posts Plugin for WordPress, Blogger...