வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

மோர்மிளகாய்

மோர்மிளகாய்





தேவையானவை:- பச்சை மிளகாய் (சம்பா மிளகாய் அல்லது குண்டு மிளகாய்) – 1கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், புளித்த தயிர் அல்லது மோர் – 2 கப்

செய்முறை:- மிளகாய்களைக் காம்பு நறுக்கிக் கீழ்ப்பாகத்தை லேசாக வகிர்ந்து வைக்கவும். மோரில் அல்லது தயிரைக் கடைந்து உப்பு சேர்த்து மிளகாய்களை அதில் முதல் நாள் இரவு ஊறப்போடவும். மறுநாள் மோர் இல்லாமல் எடுத்துத் தனித்தனியாகக் காயவைக்கவும். திரும்ப அதே மோரில் மாலையில் ஊறப்போட்டு மறுநாள் எடுத்து வெய்யிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் வெண்மையாகி விடும். தயிர்சாதத்துக்குப் பொரித்துச் சாப்பிடலாம். 

 

புதன், 22 பிப்ரவரி, 2023

அப்பளம்

அப்பளம்


தேவையானவை:- உளுந்தமாவு - 2 கப், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :- உளுந்தமாவில் பெருங்காயத்தையும் உப்பையும் நீரில் கரைத்து ஊற்றி கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் தடவி மடக்கி மடக்கி சப்பாத்திக் கல்லில் அடித்து நீளமான உருளைகளாக உருட்டவும். இதை மருந்து பாட்டில் மூடி அளவு  துண்டங்களாக வெட்டி வைக்கவும். ஒவ்வொன்றையும் குட்டிக் குட்டிப் பூரியாகத் தேய்க்கவும். இரண்டு குட்டிப் பூரிகளை எடுத்து ஒன்று சேர்த்து உளுந்து மாவு தூவிப் பெரிய வட்டமாகத் தேய்த்து நிழற்காய்ச்சலாக உலரவைத்து எடுத்து வைக்கவும்.

 

திங்கள், 20 பிப்ரவரி, 2023

சோற்று வத்தல்

சோற்று வத்தல்


தேவையானவை:- மிஞ்சிய சாதம் – 4 கப் ( இருக்கும் அளவுக்கு ஏற்ப ) உப்பு – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2.

செய்முறை:- முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய் உப்பைப் போட்டு நன்கு அரைக்கவும். சாதத்தில் நீர் இருந்தால் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். ஒரு ஈரமான துணியில் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாகக் கிள்ளி வைத்து வெய்யிலில் காயவைத்து எடுக்கவும். இது மாலை நேரம் சாப்பிட மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும்.  

 

சனி, 18 பிப்ரவரி, 2023

தக்காளி வடகம்

தக்காளி வடகம்



தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், தக்காளி – 6, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டி வைக்கவும். தக்காளியை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தக்காளிக் கூழையும் மிளகாய்த்தூளையும், மாவுடன் ஊற்றவும். கைவிடாமல் நன்கு கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். ஸ்பூனால் மோந்து மாவை ஊற்றவும். வெய்யிலில் நன்கு காய்ந்ததும் மாலையில் துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். மிக நீளமாக இருந்தால் கட் செய்து இன்னும் நான்கு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதைப் பொரித்துச் சாப்பிடலாம்.

 

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

குழம்பு வடகம்

குழம்பு வடகம்



தேவையானவை:- பெரியவெங்காயம் – 2 கிலோ, முழு பூண்டு – 3, கடுகு – 100 கி, உளுந்து – 100 கி, சீரகம் – 100 கி , வெந்தயம் – 100 கி, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பூண்டைத் தட்டித் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து நைஸாக நீளவாக்கில் அரியவும். இதில் தட்டிய பூண்டு, கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பொடியாக அரிந்த கருவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து பெரிய கொய்யாக்காய் அளவு உருண்டைகளாக்கவும். வெய்யிலில் காயவைக்கவும். தினமும் உருண்டைகளை அழுத்திப் பிடித்து வெய்யிலில் காயவைக்கவும். இது சுண்டிக் காய்ந்து எலுமிச்சை அளவில் சுருங்கி அரக்கு நிறமாவதுதான் பதம். குழம்பு கூட்டு போன்றவை தாளிக்கும்போது இதில் சிறிது கிள்ளிப் போட்டுத் தாளிதால் மணம் ஊரையே கூட்டி விடும்

 

புதன், 8 பிப்ரவரி, 2023

கலர் வடகம்

கலர் வடகம்



தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், ஜவ்வரிசி – 100 கிராம், ரெட் ஃபுட் கலர், க்ரீன் புட் கலர் – சிறிது.

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து முதல் நாள் இரவே ஆட்டி வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஜவ்வரிசி மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது அரைத்த பச்சரிசி மாவையும் ஊற்றிக் கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ் மாவை மூன்று பங்காகப் பிரித்து ஒன்றை வெள்ளையாகவே வைக்கவும். இன்னொன்றில் ரெட் ஃபுட் கலரும், இன்னொன்றில் க்ரீன் புட் கலரும் சேர்த்து நன்கு கலக்கவும். மாவைக் கரண்டியால் மோந்து ஊற்றித் தடவவும்.  வெய்யிலில் நன்கு காய்ந்ததும் மாலையில் துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். இன்னும் நான்கு நாட்கள் காயவைத்துப் பொரித்துச் சாப்பிடலாம்

 

திங்கள், 6 பிப்ரவரி, 2023

தேன்குழல் வத்தல்

தேன்குழல் வத்தல்



தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து முதல் நாள் இரவே ஆட்டி வைக்கவும். மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்குமுன் சிறிது நீரை எடுத்து அரைத்த மாவில் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கும்போது ஊற்றிக் கொண்டே கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ் மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு நீளமாகப் பிழியவும். வெய்யிலில் நன்கு காய்ந்ததும் மாலையில் துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். மிக நீளமாக இருந்தால் கட் செய்து இன்னும் நான்கு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதைப் பொரித்துச் சாப்பிடலாம்.

 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

கறிவடகம்

கறிவடகம்


தேவையானவை:- உளுந்து - 2 கப், சின்ன வெங்காயம் – 1 கிலோ, பூண்டு – 50 கிராம், கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், ஜவ்வரிசி – 50 கிராம், வரமிளகாய் – 20 அல்லது மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,  உப்பு – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி.

செய்முறை:- உளுந்தை ஊறவைத்து நீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வரமிளகாயையும் ஊறவைத்து நீரில்லாமல் அரைத்து இதில் சேர்க்கவும். அல்லது மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கொள்ளவும். ஜவ்வரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து இதில் நீர் இல்லாமல் போடவும். சீரகம், கடுகைச் சேர்க்கவும். உப்பைப் பொடித்துச் சேர்க்கவும். கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயத்தைச் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு பாயை விரித்து அதன் மேல் ஒரு காட்டன் துணி அல்லது புடவையை நனைத்துப் பிழிந்து போடவும். இதில் எலுமிச்சை அளவு கறிவடக மாவை எடுத்துக் கிள்ளி வைக்கவும். மாலையில் காய்ந்ததும் தாம்பாளத்துக்கு மாற்றித் திருப்பி வைக்கவும். நான்கைந்து நாட்கள் வெய்யிலில் காயவைத்து எடுத்துப் பத்திரப் படுத்தவும். தயிர்சாதம், சாம்பார் சாதத்துக்கு இதைப் பொரித்துச் சாப்பிடலாம்.