வியாழன், 26 பிப்ரவரி, 2026

ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கேசரி

ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கேசரி



தேவையானவை :- வெள்ளை ரவை – 1 கப். சர்க்கரை – 2 கப், எண்ணெய் – கால் கப், நெய் – கால் கப், ஆப்பிள் – தோல் சீவி துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பைனாப்பிள் – சுத்தம் செய்து துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை கறுப்பு சீட்லெட் திராக்ஷைகள் – தலா 10. கிஸ்மிஸ் – 20, முந்திரி – 10. ஃப்ரூட்டி டூட்டி – கால் கப், பேரீச்சை – 2, பாதாம்  4, பிஸ்தா – 6, மிக்ஸ்ட் ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் – சிலதுளிகள், உப்பு – 1 சிட்டிகை. யெல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:- ஆப்பிள், பைனாப்பிள், திராக்ஷைகளை சிறிது சர்க்கரையில் புரட்டித் தனியாக வைக்கவும். இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பானில் எண்ணெய் & நெய்யைக் காயவைத்து பாதாம், முந்திரியை வறுக்கவும். அதிகம் சிவக்குமுன் அதில் பிஸ்தா, கிஸ்மிஸைப் போடவும். அது பொரிந்து பெரிதானதும் ரவையைப் போடவும். ரவையை லேசாக வறுத்து அதில் கொதித்த தண்ணீரை ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். வெந்ததும் சீனி சேர்த்து நன்கு கிளறவும். இதில் யெல்லோ ஃபுட் கலர், உப்பு, டூட்டி ஃப்ரூட்டி, சிறிதாக வெட்டிய பேரீச்சை, சீனியில் ஊறவைத்த பழங்களைப் போட்டு ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

பைனாப்பிள் கேசரி



பைனாப்பிள் கேசரி

தேவையானவை :- வெள்ளை ரவை - 1 கப், பைனாப்பிள் - 1 கப் சுத்தம் செய்து நறுக்கியது., சீனி - 2 கப், தண்ணீர் - 2 கப், நெய் - 50 கி, எல்லோ புட் கலர் - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை, முந்திரி – 10, பாதாம் – 5, கிஸ்மிஸ் - 10

செய்முறை :- நெய்யில் முந்திரி பாதம், கிஸ்மிஸை வறுக்கவும். அதில் ரவையைப்  பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இரண்டு கப் தண்ணீரில் பைனாப்பிளை சதுரத் துண்டுகள் செய்து வேகவிடவும்.  நன்கு மென்மையாக வெந்ததும் எல்லோ புட்  கலர் போட்டு அதில் வறுத்த  ரவையைப் போட்டு  வேகவிடவும். ரவை உதிர் உதிராக வெந்ததும் ஒரு சிட்டிகை உப்புடன் சீனியை சேர்க்கவும். சீனி கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் இறுகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போட்டு  ஏலப்பொடி போட்டுக் கிளறி இறக்கவும்.

வியாழன், 19 பிப்ரவரி, 2026

மாம்பழக் கேசரி

மாம்பழக் கேசரி



தேவையானவை:- வெள்ளை ரவை – 1 கப், நெய் – முக்கால் கப், சர்க்கரை- 2 கப், மாம்பழம் – 1, மாங்கோ எஸன்ஸ் – சில துளிகள், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து வைக்கவும்.மாம்பழத்தைத் தோல் சீவி ஒரு பகுதியை சிறு துண்டுகளாகச் செய்து மீதியை மசித்து வைக்கவும். ரவையில் இரண்டு கப் கொதிநீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்து ஒட்டாமல் வேகும்போது நெய்யை ஊற்றவும். மாம்பழச் சாற்றையும் ஊற்றி இறக்கப் போகும் முன் மாம்பழத் துண்டுகள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து எஸன்ஸ் ஊற்றி நன்கு கலக்கி நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

கோதுமைக் கேசரி

கோதுமைக் கேசரி



தேவையானவை:- கோதுமை மாவு – 1 கப், சீனி  1 கப், நெய் – 1 கப், தண்ணீர் – இரண்டரை கப், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10. ஏலப்பொடி – 1 சிட்டிகை. 

செய்முறை:- ஒரு பானில் கோதுமாவைப் போட்டுப் பத்து நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து வாசனை வந்து நிறம் மாறும்வரை வறுக்கவும். இரண்டரை கப் தண்ணீரில் சீனியைப் போட்டுக் கொதிக்க விடவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்து வைக்கவும். வறுபட்ட கோதுமை மாவில் நெய்யை ஊற்றி நன்கு கிளறி அதன் பின் சீனிக் கரைசலை ஊற்றவும். கட்டியில்லாமல் நன்கு கிளறி உருண்டு வெந்ததும் முந்திரி கிஸ்மிஸ் ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

சனி, 14 பிப்ரவரி, 2026

சுர்மா (கடலைமாவுக் கேசரி)

சுர்மா (கடலைமாவுக் கேசரி)



தேவையானவை;- கோதுமை மாவு – ஒன்றரை கப், ரவை – அரை கப், நெய் – 400 கி, கோவா – 150 கிராம், முந்திரி பாதாம் கிஸ்மிஸ் தலா – 50 கிராம். போரா – 400 கி, (பொடித்த சீனி)

செய்முறை:- கோதுமை மாவு, ரவையைக் கலந்து நூறுகிராம் நெய்யை உருக்கி ஊற்றித் தண்ணீர் தெளித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். நெய்யைக் காயவைத்து எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கனமான தட்டை போல் தட்டிப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கோவாவையும் நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி முந்திரி பாதாம் கிஸ்மிஸைப் பொரித்து அதிலேயே கோவா, கோதுமை மாவு பொடித்தது, போரா ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

புதன், 11 பிப்ரவரி, 2026

சாக்லேட் கேசரி

சாக்லேட் கேசரி



தேவையானவை :- வெள்ளை ரவை - 1 ட்ரிங்கிங் சாக்லேட் – 2 டேபிள் ஸ்பூன், மில்க் மெய்ட்  அரை கப், ஜீனி - கால் கப், நெய் - 1/2 கப், சாக்லேட் எஸன்ஸ் – சிலதுளிகள், முந்திரிப் பருப்பு – 10, அக்ரூட் – 4.


செய்முறை:-
 ஒரு பானில் நெய்யை ஊற்றிச் சூடாக்கி பொடித்த அக்ரூட்டையும் முந்திரிப் பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி இரண்டு கப் கொதி நீர் ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் மில்க்மெய்டையும் ஜீனியையும் சேர்த்துக் கரைந்தவுடன் அதில் ட்ரிங்கிங் சாக்லேட்டைத் தூவிக் கிளறி இறக்கிப் பொடித்த ஏலக்காய், முந்திரி அக்ரூட்டை வைத்து அலங்கரித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ரெங்கோன் புட்டு (ரவா பால் கேசரி)

ரெங்கோன் புட்டு (ரவா பால் கேசரி)



தேவையானவை :- வெள்ளை ரவை - 1 கப், பால் - 2 கப், ஜீனி - 1 கப், நெய் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய் – 2, முந்திரிப் பருப்பு - 10


செய்முறை:-
 ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

அவல் கேசரி

அவல் கேசரி



தேவையானவை :- ரோஸ் அவல் – 1 கப், பால் – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 8, கிஸ்மிஸ் - , ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- ரோஸ் அவலை பானில் சிறிது சிறிதாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் ரோஸ் அவல் பொடியையும் போட்டு புரட்டவும். ஒரு கப் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

கம்பு அவல் கேசரி

கம்பு அவல் கேசரி


தேவையானவை:- கம்பு அவல் – 1 கப், தூள் வெல்லம் – முக்கால் கப், கொதி தண்ணீர் – 2 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை. முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6,

செய்முறை:- கம்பு அவலைக் கழுவி நீரை வடிகட்டவும். பானில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸைப் பொரித்தெடுத்து அதே பானில் கம்பைப் போட்டு வறுக்கவும். அதில் கொதி தண்ணீரை ஊற்றி வேகவிடவும். வெந்தவுடன், ஒரு சிட்டிகை உப்பு, தூள் வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்து நெய் பிரியும்போது ஏலப்பொடி, முந்திரி, கிஸ்மிஸைச் சேர்த்து இறக்கவும்.