வியாழன், 18 செப்டம்பர், 2014

குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் . ( 30 விதமான சமையல் குறிப்புகள். ) CHETTINAD SPECIAL RECIPES.



செட்டிநாட்டு உணவுகளின் முக்கியத்துவம்:-
செட்டிநாடு என்றாலே கட்டுக் கோப்பான வீடுகளுக்கு அடுத்தபடியாக அவர்களின் விருந்தோம்பல்தான் ஞாபகம் வரும். செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை.

 வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே  மிகச் சிறப்பான சமையலைச் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு. மிகக் குறைவான பொருட்களே தேவை. சிறிது எண்ணெய் மட்டுமே அதிகம் சேர்ப்பார்கள். செட்டிநாட்டு உணவுகளில் மசாலை என்பது சிறப்பு. அம்மியில் மிளகாய் சோம்பு அரைத்துச் செய்வார்கள். கிட்டத்தட்ட தினமும் ஒரு மசாலை  இருக்கும்.

ஒரு நாள் சமையலிலேயே பொருத்தமாக சமைப்பார்கள். சாம்பார் என்றால் மசாலை, பிரட்டல், மண்டி, வடை , துவையல் போன்ற பக்க பதார்த்தங்களும், கெட்டிக் குழம்பு என்றால் பொரியல், துவட்டல் போன்ற பக்க பதார்த்தங்களும் ( வெஞ்சனங்களும் ) சூப்பு, இளங்குழம்பு என்றால் காரமான பக்கபதார்த்தங்களும் செய்வார்கள்.

ஒன்றில் தேங்காய் போட்டால் இன்னொன்றில் பருப்பு போடுவார்கள். இன்னொன்றைக் காரமாக சமைப்பார்கள். காய்கறி தோதுபார்த்துத்தான் தொட்டுக்கொள்ள வைப்பார்கள்.

இட்லிக்குத் தொட்டுக் கொள்ளவே 20 க்கும் மேலான சட்னி, சாம்பார்,துவையல்  வகைகள் வைப்பார்கள், கெட்டிக் குழம்பு, இளங்குழம்பு, தண்ணிக் குழம்பு, சூப்பி, விதம் விதமான சட்னி, ரசம் வகைகள் செட்டிநாட்டின் சிறப்பாகும்.

இடைப் பலகாரம் என்பது ( மாலைப் பலகாரம்) இங்கே வழங்கப்படும் விருந்தின் சிறப்பாகும். இன்னும் திருமணங்களிலும் ஒவ்வொரு வேளையிலும் 10 , 10 விதமான பலகாரங்களை 4 நாட்களுக்குச் செய்வார்கள்.

படைப்பு, பூசை, விளையாட்டுப் பொட்டி வேவு, பிள்ளையார் நோம்பு, புதுமை, சூப்டி, திருவாதிரை, சுவீகாரம்  ஆகியவற்றில் செய்யப்படும் பலகாரங்களும், திருமணப் பலகாரம், சடங்குப் பலகாரம் ஆகியனவும் சிறப்பானவை.

உடலுக்கு ஒரு கேடும் செய்யாத  உணவு வகைகள் இவை என்பதே இவற்றின் சிறப்பும் கூட.

5 கருத்துகள்: