செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அட்சய திரிதியை சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் நிவேதனம். ATCHAYA THRITHIYAI, CHITHRA PAURNAMI RECIPES

ஏப்ரல் 15 - 31, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

1. கல்கண்டு பால் சாதம்.
தேவையானவை :-
பச்சரிசி - 1 ஆழாக்கு.
பால் - 1 லிட்டர்
உப்பு - 1 சிட்டிகை
கல்கண்டு  -100 கிராம்

செய்முறை:-
பாலைக் காய்ச்சவும். பொங்கி வரும்போது பச்சரிசியைக் களைந்து சேர்க்கவும். கொதி வந்ததும் சிம்மில் வைத்து சாதம் குழையும் வரை வேக விடவும். துடுப்பால் ( மரக் குச்சி ) தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும். குழைந்த சாதத்தில் ஒரு சிட்டிகை உப்பையும் பொடித்த கல்கண்டையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவிடவும். நிவேதனம் செய்யவும். இது அட்சய திரிதியை ஸ்பெஷல்

2. டயர் முறுக்கு :-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 மிலி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை :-
பச்சரிசியைக் களைந்து நிழற்காய்ச்சலாகக் காயப் போடவும். வெள்ளை உருண்டை உளுந்தை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வெதுப்பவும். இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து சலித்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பைக் கரைத்துச் சேர்த்து மாவு பிசையவும். எண்ணெயைக் காய வைத்து அதிலிருந்து ஒரு கரண்டி ஊற்றி நன்கு மாவை மென்மையாகப் பிசையவும். டயர் முறுக்கு அச்சைக் குழலில் வைத்து மாவை நிரப்பிப் பிழிந்து எண்ணெயில் வெண்ணிறமாக சுட்டு எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்மையாக வரும்.இது அட்சய திரிதியை ஸ்பெஷல்.

3. கருப்பட்டிக் கொழுக்கட்டை.
தேவையானவை :-
பச்சரிசி - 4 ஆழாக்கு
கருப்பட்டி - 200 கி
வெல்லம் - 200 கி
ஒரு முழுத் தேங்காய் - துருவவும்.
எள்ளு - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவிக் காயவைத்து மாவாக சலிக்கவும். வெல்லம் கருப்பட்டியை நைத்துப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக சுடவைத்துக் கரைத்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பேசினில் பச்சரிசி மாவைப் பரப்பி அதில் எள், தேங்காய்த் துருவல் , உப்பைத் தூவவும். கருப்பட்டி வெல்லப் பாகை வடிகட்டி அதில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். நன்கு சேர்ந்ததும் கையால் நன்கு மென்மையாகப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்தக் கொழுக்கட்டை வேக 20 நிமிடங்கள் ஆகும். இது சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்..

4. தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு:-
தேவையானவை :-
தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப்
மாங்காய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2
தக்காளி - 1
மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-
தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும். இது சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக