புதன், 29 ஜூலை, 2015

ஆடி 18 ஆம் பெருக்குக்கான ரெசிப்பீஸ் :-

ஆடி 18 ஆம் பெருக்குக்கான ரெசிப்பீஸ் :-

1.காரட் காராமணி சாதம்
2.எலுமிச்சை கொண்டக்கடலை சாதம்
3.தேங்காய் முந்திரி சாதம்
4.புதினா மொச்சை சாதம்
5.மல்லி முளைப்பயிறு சாதம்
6.தக்காளி பட்டாணி சாதம்
7.கருவேப்பிலை கொள்ளு சாதம்

8.காய்கறி கதம்ப சாதம்.
9.கீரை கூட்டாஞ்சோறு.
10.பனங்கற்கண்டு பாதாம் சாதம்

1.காரட் காராமணி சாதம் :-

தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப், காரட் ( துருவியது ) – கால் கப், காராமணி உப்பு சேர்த்து வேகவைத்தது – கால் கப், வெங்காயம் பொடியாக அரிந்தது – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க – வரமிளகாய் – 2, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்.


செய்முறை :-

பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போடவும் . வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். அதில் காரட்டையும் போட்டு நன்கு வதக்கி காராமணியையும் உப்பையும் சேர்க்கவும். வெறும் வாணலியில் வரமிளகாயையும் கடலைப்பருப்பையும் வறுத்துப் பொடித்து காராமணி காரட் கலவையில் போடவும். நன்கு கலக்கி உதிராக வடித்த சாதத்தையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

2.எலுமிச்சை கொண்டக்கடலை சாதம் :-

தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப், உப்பு வேகவைத்த கொண்டைக்கடலை – கால் கப், எலுமிச்சை – 1 ( சாறு எடுக்கவும். சிறிய எலுமிச்சையானால் 2 பழத்தின் சாறு எடுக்கவும் ). மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க :-  வரமிளகாய் – 2, வெந்தயம் – கால் டீஸ்பூன் , பச்சைமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை :-

எலுமிச்சை சாறை வடிகட்டி உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்புப் போட்டு சிவந்ததும் பச்சை மிளகாயையும் கருவேப்பிலையையும் போடவும். அதில் எலுமிச்சைச் சாறை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து கொண்டைக்கடலையைப் போட்டு இறக்கவும். ஆறியதும் உதிராக வடித்த சாதத்தையும் பொடித்த வரமிளகாய் வெந்தயப் பொடி போட்டு நன்கு கிளறி வைக்கவும்.

3.தேங்காய் முந்திரி சாதம்

தேவையானவை :-

உதிராக வடித்த பாசுமதி அரிசி – 1 கப், சன்னமாகத் துருவிய தேங்காய் – 1 கப், முந்திரி – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :-

பானில் நெய்யைக் காயவைத்து கடுகு , உளுந்து, கடலைப்பருப்பை, சீரகத்தைத் தாளிக்கவும். அதில் முந்திரியையும் போட்டு லேசாக வறுத்து இரண்டாகக் கிள்ளிய பச்சைமிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும். தேங்காய்த் துருவலையும் போட்டு வாசம் வரும் வரை வதக்கி சாதத்தையும் உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.

4.புதினா மொச்சை சாதம்:-

தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப், உப்பு சேர்த்து வேகவைத்த மொச்சை – கால் கப், பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக அரியவும். ), தக்காளி -  1 பொடியாக அரியவும். எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், அரைக்க :_ புதினா – அரைக் கட்டு, பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச் துண்டு, பூண்டு – 4 பல், மிளகு – 10 சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் – 2 இஞ்ச் துண்டு, தாளிக்க – பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று.

செய்முறை :-

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் தக்காளி மென்மையாகும் வரை வதக்கி அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். மசாலா நன்கு சுருளத் துவங்கியதும் மொச்சையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இது ஆறியதும் உதிராக வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறி வைக்கவும்.


5.மல்லி முளைப்பயிறு சாதம் :-

தேவையானவை :-
உதிராக வடித்த சாதம் – 1 கப் ,கொத்துமல்லி – அரைக்கட்டு, பச்சைமிளகாய் – 1. இஞ்சி – 1 இன்ச் துண்டு, முளைக்கட்டிய பச்சைப்பயறு – அரை கப் ( உப்பு சேர்த்து வேகவைக்கவும் ) வெங்காயம் – 1, தக்காளி – 1 பொடியாக அரியவும். எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன். தாளிக்க – சீரகம் – கால் டீஸ்பூன்.

செய்முறை :-

மல்லி, இஞ்சி, பச்சைமிளகாயைத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு மென்மையாகும் வரை வதக்கி அரைத்த கலவையைப் போடவும். 5 நிமிடங்கள் நன்கு வெந்து பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த பயறைச் சேர்க்கவும். நன்கு கலக்கி உதிராக வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


6.தக்காளி பட்டாணி சாதம்:-\

தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப், பச்சையாக உரித்த பச்சைப்பட்டாணி - அரை கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, மல்லித் தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.

செய்முறை :-

தக்காளி வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பச்சை மிளகாயை இரண்டாக வகிரவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்புப் போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், பச்சைப்பட்டாணி தக்காளியைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கி ஆறவைத்து உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி வைக்கவும். 

7.கருவேப்பிலை கொள்ளு சாதம் :-

தேவையானவை :-

உதிராக வடித்த சாதம் – 1 கப், உப்பு சேர்த்து வேகவைத்த கொள்ளு – அரை கப், வறுத்துப் பொடிக்க :- கருவேப்பிலை – கால் கப், உளுந்து – 2 டீஸ்பூன், வரமிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன்,

செய்முறை:-

வெறும் கடாயில் வரமிளகாயையும் உளுந்தம்பருப்பையும் சிவக்க வறுக்கவும். கருவேப்பிலை சலசலக்கும் வரை வறுக்கவும். இதை உப்போடு சேர்த்துப் பொடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்து இறக்கிவைத்து கொள்ளு, உதிராக வடித்த சாதம் கருவேப்பிலைப்பொடி சேர்த்து நன்கு கலக்கி உபயோகிக்கவும்.


8.காய்கறி கதம்ப சாதம்.

தேவையானவை :-
அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, காரட், பீட்ரூட், பீன்ஸ் , பட்டாணி, பட்டர் பீன்ஸ் ). வெங்காயம் – 1 பொடியாக அரியவும், தக்காளி – 1 பொடியாக அரியவும். அரைக்க :- பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். மல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :-

அரிசியைக் களைந்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் தக்காளியை வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி அதன் பின் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும். அரிசியையும் போட்டு உப்பைச் சேர்த்துத் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். திறது மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

9.கீரை கூட்டாஞ்சோறு.

தேவையானவை :-

அரிசி – 1 கப், துவரம் பருப்பு – அரை கப், முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை – தலா 1 கைப்பிடி, காய்கறிக் கலவை – 1 கப், ( வாழை, கத்திரி, பூசணி, சேனைக்கிழங்கு , அவரைக்காய் ). சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, புளி – நெல்லி அளவு, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க :- வரமிளகாய் – 4, மல்லி – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு  - அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

அரிசியையும் பருப்பையும் களைந்து வைக்கவும். கீரைகளை ஆய்ந்து கழுவி வைக்கவும். காய்கறிகளைத் துண்டுகளாக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை வறுத்துப் பொடிக்கவும். உப்பு புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி அரிசி பருப்பை வேகப்போடவும். பாதி வெந்ததும் காய்கறிக் கலவையையும் மஞ்சள் தூளையும் போட்டு வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கி சாம்பார்பொடி, புளித்தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் இதை வேகும் அரிசி காய்கறிக் கலவையில் சேர்க்கவும். கீரைகளையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து குழைய வெந்ததும் நன்கு மசித்து வறுத்துப் பொடித்த மசாலாப் பொடி சேர்த்து இறக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

10.பனங்கற்கண்டு பாதாம் சாதம்:-

தேவையானவை :-

பாசுமதி அரிசி – அரை கப், பால் – ஒன்றரை கப், பனங்கற்கண்டு – அரை கப், பாதாம் – 10, (ஊறவைத்துத் தோலுரித்து நீளமாக நறுக்கவும் ). நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-

பாசுமதி அரிசியைக் களைந்து ஒரு கப் பால் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும். அரை கப் பாலில் பனங்கற்கண்டைப் போட்டு சூடுபடுத்தி வடிகட்டவும். பாசுமதி அரிசியில் பனங்கற்கண்டுப் பாலையும் , பாதாமையும் நெய்யையும் போட்டுக் கிளறி இறுகியதும் இறக்கவும். 


இந்தக்கோலங்கள் ஜூலை 30 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக