ஞாயிறு, 19 ஜூலை, 2015

ஆனித் திருமஞ்சனம் - ரெசிப்பீஸ், AANI THIRUMANCHANAM RECIPES.



1. ரோஸ் அவல் வெல்லப்புட்டு
2. காய்கறி மிளகு அவல்
3 .ரவா ஃப்ரூட் புட்டிங்
4. பீட்ரூட் பர்ஃபி
5. ட்ரைகலர் அரிசி அல்வா
6. ஜவ்வரிசி ஊத்தப்பம்
7. பாசிப்பருப்புப் பச்சடி
8. மிளகுக் குழம்பு
9. முளைக்கீரை துக்கடா
10 பேரீச்சை தர்பூசணிப் பாயாசம்.

1.ரோஸ் அவல் வெல்லப்புட்டு.

தேவையானவை :-

ரோஸ் அவல் – 2 கப், தூள் வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன். ஏலக்காய் – 2 பொடிக்கவும்.


செய்முறை:-

அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு திக்காக ஆகும்போது பொடித்த அவலைப் போட்டு நன்கு கிளறவும். அவல் பாகுடன் சேர்ந்து மலர்ந்து வெந்து வந்ததும் நெய் சேர்க்கவும். ஏலப்பொடி தேங்காய்த்துருவல் போட்டுக் கிளறி இறக்கி நிவேதனம் செய்யவும்.

2. காய்கறி மிளகு அவல்.

தேவையானவை :-

சிவப்பரிசி அவல் –  2 கப், காய்கறிக் கலவை – 1 கப் ( காரட் பீன்ஸ் காலிஃப்ளவர் பட்டாணி ). பெரிய வெங்காயம் – 1,  கருவேப்பிலை – 1 இணுக்கு, எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன், மிளகு – 10. கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் & வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:-

சிவப்பரிசி அவலைச் சுத்தம் செய்து களைந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடிப்பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை, பெரிய வெங்காயம் , காய்கறிக்கலவை போட்டுத் தாளிக்கவும். வதங்கும் காய்கறிக்கலவை மீது வெண்ணெயைப் போடவும். நன்கு வதக்கி மூடி வைத்து இரண்டு நிமிடம் கழித்துத் திறந்து உப்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஊறிய அவலையும் சேர்த்து நன்கு கிளறி கொத்துமல்லித்தழை தூவி மிளகைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.

3 .ரவா ஃப்ரூட் புட்டிங்.

தேவையானவை :-

வெள்ளை ரவை – 1 கப். சர்க்கரை – 2 கப், எண்ணெய் – கால் கப், நெய் – கால் கப், ஆப்பிள் – தோல் சீவி துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பைனாப்பிள் – சுத்தம் செய்து துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை கறுப்பு சீட்லெட் திராக்ஷைகள் – தலா 10. கிஸ்மிஸ் – 20, முந்திரி – 10. மிக்ஸ்ட் ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் – சிலதுளிகள், உப்பு – 1 சிட்டிகை. யெல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:-

ஆப்பிள், பைனாப்பிள், திராக்ஷைகளை சிறிது சர்க்கரையில் புரட்டித் தனியாக வைக்கவும். இரண்டரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பானில் எண்ணெய் & நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுக்கவும். அதிகம் சிவக்குமுன் அதில் கிஸ்மிஸைப் போடவும். அது பொரிந்து பெரிதானதும் ரவையைப் போடவும். ரவையை லேசாக வறுத்து அதில் கொதித்த தண்ணீரை ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். வெந்ததும் சீனி சேர்த்து நன்கு கிளறவும். இதில் யெல்லோ ஃபுட் கலர், உப்பு, சீனியில் ஊறவைத்த பழங்களைப் போட்டு ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

4. பீட்ரூட் பர்ஃபி.

தேவையானவை :-

பீட்ரூட் – 2, சர்க்கரை – ஒன்றரை கப், பால் – அரை கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், வறுத்த முந்திரி – 10

செய்முறை:-

பீட்ரூட்டை தோல் சீவித் துருவி சிறிது நெய்யில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். ஆறியவுடன் பால் ஊற்றி நைஸாக அரைக்கவும். பானில் பீட்ரூட் விழுதுடன் சர்க்கரை மிச்ச நெய் சேர்த்து சிம்மில் வைத்துக் கிளறவும். நன்கு இறுகி பக்கங்களில் ஒட்டாமல் உருண்டு வரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி வில்லைகள் போடவும். ஒவ்வொரு துண்டிலும் வறுத்த முந்திரியைப் பதித்து உபயோகப்படுத்தவும்.  

5. ட்ரைகலர் அரிசி அல்வா.

தேவையானவை:-

பச்சரிசி – 1 கப், தேங்காய் – 1 – அதில் மூன்றரை கப் பால் எடுக்கவும், சீனி – 1 கப், க்ரீன் ஃபுட் கலர் – 1 சிட்டிகை., ரெட் ஃபுட் கலர் – 1 சிட்டிகை., ஆல்மோண்ட் எஸ்ஸென்ஸ் – சில துளிகள்.


செய்முறை:-

பச்சரிசியைக் களைந்து தேங்காய்ப் பால் ஊற்றி விழுதாக அரைக்கவும். அதில் மிச்சப் பாலையும் ஊற்றி தோசைமாவு பதத்துக்கு கரைத்து மூன்று பங்காகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பங்கில் க்ரீன் ஃபுட் கலரையும் இன்னொரு பங்கில் ரெட் ஃபுட்கலரையும் சேர்க்கவும். மூன்றாவது பங்கில் ஆல்மோண்ட் எஸ்ஸென்ஸ் மட்டும் சேர்க்கவும்.

குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி பெரிய குக்கர் உட்பாத்திரத்தில் க்ரீன் ஃபுட் கலர் சேர்த்த மாவை ஊற்றி மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து ஆல்மோண்ட் எஸ்ஸென்ஸ் சேர்த்த மாவை ஊற்றவும். அதையும் 20 நிமிடம் வேகவைத்து எடுத்து அதன் மேல் ரெட் ஃபுட் கலர் சேர்த்த மாவை ஊற்றவும். அதுவும் 20 நிமிடம் வெந்ததும் இறக்கி ஆறவிட்டு பாத்திரத்தில் இருந்து தட்டுக்கு மாற்றி துண்டுகள் செய்யவும். மிக வாசனையான ருசியான. அல்வா தயார். தேங்காய்ப் பாலிலேயே தேவையான எண்ணெய்ப் பசை இருப்பதால் நெய் சேர்க்கத் தேவையில்லை இந்த அல்வாவுக்கு.  


6. ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை:-

புழுங்கல் அரிசி – 2 கப், உளுந்து – அரை கப், ஜவ்வரிசி – அரை கப், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். எண்ணெய் – தேவையான அளவு. கடுகு – கால் டீஸ்பூ,, உளுந்து – கால் டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை :-
புழுங்கல் அரிசி உளுந்தைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து முதல்நாளே அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். மறுநாள் ஜவ்வரிசியை மாவில் சேர்த்து எண்ணெயில் கடுகு உளுந்து வெங்காயம் பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.  நன்கு கரைத்து தோசைக்கல்லில் ஊத்தப்பங்களாகச் சுட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும். பாசிப்பருப்புப் பச்சடியுடன் பரிமாறவும்.

7. பாசிப்பருப்புப் பச்சடி.

தேவையானவை :-

பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 2, உருளைக்கிழங்கு – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1 , பச்சைமிளகாய் – 6, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, புளி – 2 சுளை, உப்பு – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மல்லித்தழை - சிறிது, பெருங்காயத்தூள் – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

பாசிப்பருப்பைக் களைந்து அரை கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் பானில் ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும். கத்திரி, உருளையைப் பொடியாக நறுக்கி நீரில் போடவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை வகிர்ந்து கொள்ளவும். புளியையும் உப்பையும் அரைகப் நீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும்.

வெந்த பருப்பில் கத்திரி உருளை பச்சைமிளகாய், வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் போட்டு இன்னும் சிறிது நீர் சேர்த்து ப்ரஷர் பானில் திரும்ப ஒரு விசில் வரும் அளவு வேகவைக்கவும். இரண்டு நிமிடம் கழித்துத் திறந்து அதில் உப்புப்புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து சீரகம், கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்து பச்சடியில் சேர்த்து மல்லித்தழை தூவி ஜவ்வரிசி ஊத்தப்பத்துடன் பரிமாறவும்.

8. மிளகுக் குழம்பு:-

தேவையானவை :-

மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-

மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில்  நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

9. முளைக்கீரை துக்கடா.

தேவையானவை:-

முளைக்கீரை – 1 கட்டு, கடலை மாவு – 1டேபிள் ஸ்பூன், மைதாமாவு – ரெண்டு டீஸ்பூன், சோளமாவு – 2 டீஸ்பூன், கோதுமை மாவு – 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். உப்பு – கால் டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேசினில் கடலைமாவு, மைதாமாவு, சோளமாவு, கோதுமைமாவு, பச்சரிசி மாவு போட்டு மிளகாய்த்தூள், உப்பு வெண்ணெய் சேர்த்து நன்கு பிசறிவிடவும். அதில் கீரையையும் வெங்காயத்தையும் போட்டுப் பிசறி விடவும். காய்ந்த எண்ணெயில் சிறிது ஊற்றி தண்ணீர் தெளித்துப் பிசையவும்.

எண்ணெயைக் காயவைத்து மிகச் சிறியதாக உதிர்த்து வேகவைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

10. பேரீச்சை தர்பூசணிப் பாயாசம்:-

தேவையானவை:-

தர்பூசணி – 1 கீத்து, பேரீச்சை – 6, கோதுமை மாவுஒரு கைப்பிடி, பால்அரை லிட்டர்., சீனி – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 10 கி, முந்திரி – 6, பாதாம் – 6, ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-

தர்பூசணியைத் துண்டுகள் செய்து சிலவற்றை எடுத்து வைக்கவும். மிச்சத்தை ஜூஸாக்கவும். பேரீச்சையை பாலில் ஊறவைக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து ஒடித்து வைக்கவும். பாதாமை ஊறவைத்துத் தோலுரித்து சீவி வைக்கவும்.

மிச்ச நெய்யில் கோதுமை மாவை சிம்மில் வைத்து நன்கு வறுக்கவும். அதில் சிறிது பால் ஊற்றி பேஸ்ட் போல ஆக்கி கட்டியில்லாமல் கலந்து மிச்சப் பாலையும் ஊற்றி கொதிக்க விடவும். திக்காக ஆகிவிடும் என்பதால் தொடர்ந்து கிளறவும். கொதித்துக் கண்ணாடி போல் ஆனவுடன் பேரீச்சையை மசித்து சீனியுடன் சேர்க்கவும். இறக்கி வைத்து ஆறவிடவும். ஏலப் பொடி முந்திரி பாதாம் தர்ப்பூசணி ஜூஸ், தர்ப்பூஸ் துண்டுகள் போட்டு நன்கு கலந்து கொடுக்கவும்

டிஸ்கி :-

ரிலாக்ஸ் ஸ்பெஷலில் நுங்குப் பாயாசம் பற்றி வாழ்த்திய நெல்லை ப்ரேமா பாலனுக்கு நன்றி :)



டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் & கோலம்ஸ் ஜூலை 5, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு