திங்கள், 28 மார்ச், 2016

சிவராத்திரி காரடையான் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பீஸ். SIVARATHIRI, KARADAIYAN NONBU RECIPES.

சிவராத்திரி காரடையான் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் :-

1.ஓலைக் கொழுக்கட்டை
2.பால் மாவு
3.அரிசி வடை
4.தேங்காய்ப்பால் இட்லி இடியாப்பம்.
5.குங்குமப்பூ ரொட்டி
6.க்ரீன் பூரி
7.துவரம்பருப்புத் தோசை
8.சீரக துக்கடா
9.கிடாரங்காய் சாதம்
10. இன்ஸ்டண்ட் பாயாசம்

1.ஓலைக் கொழுக்கட்டை

தேவையானவை :-
பனை ஓலைக்குருத்து – ஒரு அடி நீளமும் மூன்று அங்குல அகலமும் உள்ளது =10.பச்சரிசிமாவு – 2 கப், வேகவைத்த காராமணி- 1 கைப்பிடி , கருப்பட்டி – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – ஒரு மூடி. உப்பு – 1 சிட்டிகை. ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பனைஓலைக் குருத்துகளை நீரில் நனைத்து வைக்கவும். பச்சரிசி மாவில் உப்பு, ஏலப்பொடி, வேகவைத்த காராமணி , தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலந்து கருப்பட்டியை நீரில் இளம்பாகுவைத்து கெட்டியாக ஊற்றி மாவை நன்கு பிசையவும். ஒரு ஓலையை எடுத்து அதில் நீளவாக்கில் கொழுக்கட்டை மாவை வைத்து இன்னொரு ஓலையால் மூடவும். இதேபோல் மீதி மாவையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும். இந்தக் கொழுக்கட்டை நீளவாக்கில் இருக்கும்.

2.பால் மாவு :-

தேவையானவை:-
புழுங்கல் அரிசி – 2 கப், தேங்காய் – 1, வெல்லம் – முக்கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:-
புழுங்கல் அரிசியை இரண்டுமணி நேரம் ஊறவைத்து நன்கு வழுவழுப்பாக ஆட்டிக்கொள்ளவும். இதை ஒரு வெள்ளைக் காடாத்துணியில் கொட்டி வைத்தால் அதிகப்படியாக உள்ள ஈரத்தை உறிஞ்சும். தேங்காயைத் திருகி மூன்று பால் எடுக்கவும். மூன்றாம் பாலில் வெல்லத்தைப் போட்டுக் கரைந்ததும் இரண்டாம் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். கொழுக்கட்டை மாவை தேன்குழல் அச்சில் போட்டு கொதிக்கும் பாகில் தட்டித் தட்டிப் பிழிந்து வேகவைக்கவும். நீளக் கொழுக்கட்டைகளாக வெந்து மேலெழும்பியதும் முதல் பாலை ஊற்றி உப்பு, ஏலப்பொடி போட்டு நிவேதிக்கவும்.

3.அரிசி வடை:-

தேவையானவை:-
பச்சரிசி – 1 கப், புழுங்கல் அரிசி – 1 கப், உளுந்து – கால் கப், வெங்காயம் – 1 பொடியாக அரியவும். மிளகு – 10 உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தைக் களைந்து இரண்டுமணிநேரம் ஊறவைக்கவும். ஊறியவுடன் நீரை வடித்து உப்பு மிளகு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்தமாவில் வெங்காயத்தைப் போட்டுப் பிசைந்து துளையில்லாமல் வடைகளாகத் தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நிவேதிக்கவும்.

4.தேங்காய்ப்பால் இட்லி இடியாப்பம்.

தேவையானவை:-
இடியாப்ப மாவு – 2 கப், தேங்காய் – 1 , சீனி – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றிப் பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு இட்லிபோல வட்ட வட்டமாகப் பிழிந்துகொள்ளவும். தேங்காயில் இரண்டு கப் கெட்டிப் பால் எடுத்து சீனி ஏலப்பொடியைச் சேர்க்கவும். சிறு சிறு கிண்ணங்களில் இட்லி இடியாப்பத்தைப் போட்டுப் பாலை ஊற்றி நிவேதிக்கவும்.

5.குங்குமப்பூ ரொட்டி:-

தேவையானவை:-

ப்ரெட் – 12 ஸ்லைஸ், பால் – 2 கப், குங்குமப்பூ – 1 சிட்டிகை, சர்க்கரை – 8 ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-
பாலில் குங்குமப் பூவைப் போட்டுக் கெட்டியாகக் காய்ச்சவும். கொதித்துச் சுண்டும்போது சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி வெதுவெதுப்பாக ஆறவிடவும். ப்ரெட்டை நெய் தடவி தோசைக்கல்லில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். சின்னத் தட்டுகளில் டோஸ்ட் செய்த ப்ரெட்டை தனித்தனியாக வைத்து வெதுவெதுப்பான குங்குமப்பூ பாலை ஊற்றி நிவேதிக்கவும்.

6.க்ரீன் பூரி:-

தேவையானவை :-

கோதுமை மாவு – 2 கப், கருவேப்பிலை, கொத்துமல்லி , புதினா தளிர்கள் – தலா 1 கைப்பிடி, பச்சை மிளகாய் – சிறிது 1, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை மிளகாய் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து கோதுமை மாவில் போட்டு கெட்டியாகப் பிசையவும். பூரிகளாகத் தேய்த்து காயும் எண்ணெயில் பொரித்து நிவேதிக்கவும்.

7.துவரம்பருப்புத் தோசை:-

தேவையானவை :-
பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – அரை கப் ,வரமிளகாய் – 2, வெங்காயம் – 1, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 50 மிலி.

செய்முறை:-
பச்சரிசி துவரம் பருப்பைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். நீரை வடித்து வரமிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் மஞ்சள் தூள் பெருங்காயப் பொடி, பொடியாக அரிந்த வெங்காயம் போடவும். நன்கு கலக்கி வைத்திருந்து சிறிது நேரம் கழித்து தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

8.சீரக துக்கடா:-

தேவையானவை:-
கடலை மாவு – 1 கப், பச்சரிசி மாவு – ஒரு கைப்பிடி, சீரகம் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 4, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
கடலை மாவில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு சேர்த்து, பெரிதாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கெட்டியாகக் கரைக்கவும். இதைக் காயும் எண்ணெயில் பொடிப்பொடியாக உதிர்த்தாற்போலப் போட்டுப் பொரித்து நிவேதிக்கவும்.


9.கிடாரங்காய் சாதம்:-

தேவையானவை:-
உதிராக வடித்த சாதம் – 2 கப், கிடாரங்காய் – பாதி மூடி, எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, வெந்தயம் – கால் டீஸ்பூன், வரமிளகாய் – 1 ( விதையில்லாமல் கொரகொரப்பாகப் பொடிக்கவும் ), பச்சை மிளகாய் – 1 வட்டமாக அரியவும். இஞ்சி – கால் இன்ச் பொடியாக அரியவும். கருவேப்பிலை – 1 இணுக்கு. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-
கிடாரங்காயைப் பிழிந்து விதைகளை வடிகட்டி சாறை எடுத்து உப்பு மஞ்சள் தூள் போட்டு வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து கடலைப்பருப்பு, பெருங்காயம், வெந்தயம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி,கருவேப்பிலை தாளித்து அதில் வடிகட்டிய சாறை ஊற்றவும். அரை நிமிடத்தில் அடுப்பை அணைத்து அதில் சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து நிவேதிக்கவும்.

10. இன்ஸ்டண்ட் பாயாசம்:-

தேவையானவை:-
பாசுமதி அரிசி சாதம் அல்லது பச்சரிசி சாதம் = ஒரு கைப்பிடி, மில்க் மெய்ட் – அரை டின், பால் ஒரு கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. குச்சியாக அரிந்த பாதாம் பிஸ்தா முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை;-
சாதத்தை மிக்ஸியில் பால் விட்டு அரைத்து வழிக்கவும். அதை லேசாக சூடுபடுத்தி மில்க் மெயிடைச் சேர்க்கவும். திக்னெஸ் அதிகமாக இருந்தால் இன்னும் சிறிது பால் சேர்க்கவும். ஏலப்பொடி முந்திரி பாதாம் பிஸ்தாவைக் கலந்து சூடாகவோ குளிரவைத்தோ நிவேதிக்கவும். 

ிஸ்கி:- இந்தக் கோலங்கள் 10.3. 2016 குமம் பக்ி ஸ்ில் வெளியான 

 

3 கருத்துகள்:

  1. அனைத்து குறிப்புகளும் அருமை தேனம்மை! அதிலும் பனனை ஓலையில் கொழுக்கட்டை! மிக அருமை!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு