செவ்வாய், 3 மே, 2016

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் . ATCHAYA THRITHIYAI RECIPES.

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள் :-

1.மலாய் சம்சம்
2.சந்தேஷ்
3.தஹி குஜியா
4.ஸ்டஃப்ட் குல்சா
5.பட்டர் குக்கீஸ்
6.தயிர் சேமியா
7.தேங்காய் சேவை
8.ட்ரை கலர் பனீர் டிக்கா.
9.தேங்காய் சம்பல்
10.அரிசிப் பாயாசம்

1.மலாய் சம்சம்

தேவையானவை :-
பனீர் – 2 கப், சர்க்கரை – 2 கப், தண்ணீர் – 5 கப், குங்குமப்பூ – 2 சிட்டிகை. மலாய் செய்ய :- பால் 2 கப், சர்க்கரை – 2 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பிஸ்தா, பாதாம் – தலா 10.

செய்முறை:-
பனீரை உதிர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து ஓவல் வடிவத்தில் உருட்டவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு நன்கு கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும் உருட்டி வைத்த பனீரை மெதுவாகப் போட்டு நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து தீயைக் குறைத்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது பனீர் இருமடங்காக உப்பி வெந்திருக்கும். திரும்ப மூடியைத் திறந்து கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். மலாய் செய்ய பாலைக் கொதிக்க விடவும். பாதியாகக் குறுகியதும் சீனியைப் போட்டு நன்கு சுண்டியதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். பனீர் ஆறியதும் இரண்டாக வெட்டி மலாயை வைத்துப் பொடியாக அரிந்த பாதாம் பிஸ்தா குங்குமப்பூவைத் தூவி மடித்துப் பரிமாறவும்.


  2.சந்தேஷ் :-

தேவையானவை :-
பனீர் – 200 கி, போரா ( பொடித்த சர்க்கரை ) – 150 கிராம், ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை, அரிசி மாவு – 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், பாதாம் முந்திரி பிஸ்தா – தலா 10

செய்முறை :-
பனீரை உதிர்த்துப் பிசையவும். பானில் பனீர் போரா போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி இறக்கவும். இறுகியதும் ரோஸ் எசன்ஸ், ஏலத்தூள் சேர்க்கவும். பொடித்த முந்திரி பாதாம் சேர்த்து அரிசி மாவு தூவிப் பிசைந்து வட்டமாகத் தட்டி மேலே பிஸ்தா பதித்துப் பரிமாறவும்.  


3.தஹி குஜியா:-

தேவையானவை :-
வெள்ளை உருண்டை உளுந்து – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், கிஸ்மிஸ் – 30 முந்திரி – 15, சாரைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, தயிர் – 1 லிட்டர், உப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை சட்னி – அரை கப், இனிப்பு சட்னி – அரை கப், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், வறுத்த சீரகப் பொடி – 2 டீஸ்பூன், சாட் மசாலா – 2 டீஸ்பூன்.

செய்முறை :- உளுந்தம்பருப்பைக் களைந்து 4 மணி நேரம் ஊறவிடவும். நீரை வடித்து உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். சாரைப்பருப்பு, பொடியாக உடைத்த முந்திரி, கிஸ்மிஸைக் கலந்து வைக்கவும். தயிரை ஒரு துணியில் கட்டி அதிகப்படி நீரை வடிகட்டவும். உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். சப்பாத்திக் கல்லில் ஒரு துணியை விரித்து தண்ணீர் தொட்டு எலுமிச்சை அளவு உளுந்தமாவை எடுத்து அரை இஞ்ச் கனத்துக்கு மெல்லியதாகத் தட்டவும். இதன் நடுவில் அரை டீஸ்பூன் பருப்பு கிஸ்மிஸ் கலவையை வைத்து துணியால் மூடவும். அரை வட்டங்களாக சோமாஸ் போல மடித்து  எடுத்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு குஜியாக்களை ஊறவிடவும். ஊறியதும் பிழிந்து எடுத்து தட்டில் அடுக்கி தயிர் ஊற்றி மேலாக சீரகப்பொடி, மிளகாய்ப் பொடி, சாட் மசாலா தூவிப் பரிமாறவும்.

4.ஸ்டஃப்ட் குல்சா :-

தேவையானவை :-
மைதா – 2 கப், சமையல் சோடா – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், பால் + தயிர் – 1 டேபிள் ஸ்பூன், வேகவைத்த உருளைக்கிழங்கு – 1, ஓமம் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன் , எள் – கால் டீஸ்பூன், பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மைதாவில் சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் சூடான எண்ணெய், உருக்கிய நெய் , பால், தயிர் போட்டு நன்கு கலந்து தேவையான தண்ணீர் தெளித்துப் பிசையவும். 2 மணி நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கில் ஓமம், மிளகாய்த்தூள், எள், பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு பிசைந்து பத்து உருண்டைகளாக உருட்டவும். மைதாவைப் பத்து உருண்டைகளாக்கி அதைக் கிண்ணம் போல செய்து அதில் உருளைக் கலவையை வைத்து நன்கு மூடி கனமான சப்பாத்தி போலத் தேய்த்து எண்ணெய் இல்லாமல் தவாவில் சுட்டு எடுக்கவும். பாலக் பனீர், தால் மாக்னியுடன் பரிமாறவும்.


5.பட்டர் குக்கீஸ்:-

தேவையானவை :-
மைதா – 1 கப், வெண்ணெய் – அரை கப், பொடித்த சர்க்கரை – அரை கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, வனிலா எசன்ஸ் – சில சொட்டுகள், நெய் – சிறிது. பால் தேவைப்பட்டால்.

செய்முறை:-
வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் எசன்ஸையும் சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும். மைதாவில் சமையல் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும். இந்த மாவை வெண்ணெய்க் கலவையில் தூவியபடி பிசையவும். மாவு பிசிறாக இருந்தால் பால் தெளித்துப் பிசையவும். சிறிது நேரம் ஊறவிடவும். குக்கரில் அல்லது சூஸ்பெரி மேக்கரில் மணலைக் கொட்டி அரைமணி நேரம் சிம்மில் வைத்து சூடுபடுத்தவும். ஒரு ட்ரே அல்லது குக்கர் தட்டில் வெண்ணெய் தடவி கைகளில் நெய் தடவி பட்டர் குக்கீஸ் மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வட்டமாகத் தட்டி ட்ரேயில் அடுக்கி அரைமணி நேரம் குக்கரில் வெயிட் போடாமல் வேகவைத்து எடுக்கவும்.


6.தயிர் சேமியா:-

தேவையானவை :-
சேமியா – 1 கப், கெட்டித்தயிர் – 3 கப், பச்சைமிளகாய் – 1, பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை – 2 டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 1 டேபிள் ஸ்பூன், துருவிய காரட் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ் முந்திரி – தலா 10.

செய்முறை :- சேமியாவை இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்து இறக்கி ஆறவிடவும். தயிரில் உப்பு சேர்த்துக் கடைந்து வைக்கவும். இதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை துருவிய காரட் மாதுளை முத்துகளை சேர்க்கவும். சேமியாவில் தயிர்க்கலவையைக் கொட்டிக் கிளறி முந்திரி கிஸ்மிஸை மேலாகத் தூவிப் பரிமாறவும்.


7.தேங்காய் சேவை:-

தேவையானவை :-
சேவை/ இடியாப்பம் – 2 கப் மாவில் பிழிந்து வேகவைத்து உதிர்த்தது. தேங்காய்த்துருவல் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சைமிளகாய் -1. கருவேப்பிலை – 1 இணுக்கு , முந்திரி – 10.

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, முந்திரி போட்டுச் சிவந்ததும் வரமிளகாய், பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இதில் கருவேப்பிலையைச் சேர்த்துப் பொரிந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கவும். உப்பையும் உதிர்த்த சேவையையும் போட்டு நன்கு கிளறிப் பரிமாறவும்.  

8.ட்ரை கலர் பனீர் டிக்கா. :-

தேவையானவை :-
பனீர் – 200 கி (ஒரு பாக்கெட்), சிவப்பு,பச்சை குடைமிளகாய்த் துண்டுகள் – தலா 8, மிளகாய் பூண்டுச் சட்னி – 1 டேபிள் ஸ்பூன், புதினா சட்னி – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 1 டேபிள் ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காய்த்துண்டுகள் – 8. ஸ்க்யூவர்ஸ் மரக்குச்சிகள் – 6. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
பனீரை சதுரத் துண்டுகள் செய்யவும். மூன்றாகப் பிரித்து சிவப்பு மசாலா, புதினா மசாலா, தயிர் வெள்ளை மிளகுத்தூள் மசாலாவில் சிறிது நேரம் புரட்டி ஊறவைக்கவும். இரு ஸ்க்யூவர்ஸ் மரக் குச்சிகளில் பச்சைக் குடைமிளகாய்த்துண்டுகள், புதினாவில் ஊறவைத்த பனீர் என்று மாற்றி மாற்றி செருகவும். அதேபோல் இரு மரக்குச்சிகளில் சிவப்புக் குடைமிளகாய்த் துண்டுகள், வரமிளகாய் பூண்டு மசாலாவில் ஊறவைத்த் பனீரையும், இன்னும் இரு மரக்குச்சிகளில் பெரிய வெங்காயம், தயிர் வெள்ளை மிளகுக் கலவையில் ஊறவைத்த பனீர்த் துண்டுகள் என மாற்றி மாற்றிச் செருகி தட்டையான பானில் எண்ணெயைக் காயவைத்து ஸ்க்யூவர்ஸ் குச்சிகளை வைத்து எல்லாப் பக்கமும் பொரித்துப் பரிமாறவும்.


9.தேங்காய் சம்பல் :-

தேவையானவை :-
தேங்காய் – ஒரு மூடி, பச்சைமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 8, உப்பு – அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – சில துளிகள் விரும்பினால்.

செய்முறை :-
தேங்காயைப் பல்லாகக் கீறவும். மிக்ஸியில் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து தேங்காயை இரண்டு சுற்று கொரகொரப்பாக அரைக்கவும். அதில் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி இறக்கவும். விரும்பினால் எலுமிச்சைச் சாறையும் கலந்து உபயோகிக்கவும்.

10.அரிசிப் பாயாசம் :-

தேவையானவை :-
பச்சரிசி – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – 2 கப். ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 20, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை.:-
பச்சரிசியை ஊறவைத்துத் தேங்காயோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் தேவையான தண்ணீர் ( 4 கப் ) சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாகப் பொரித்துப் போடவும். 

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 5 - 5 - 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு