திங்கள், 4 ஜூலை, 2016

பீட்ரூட் கட்லெட்.- BEETROOT CUTLET. GOKULAM.

பீட்ரூட் கட்லெட். 

பீட்ரூட் கட்லெட்.:-

தேவையானவை :-
பீட்ரூட் – 2, முந்திரிப் பருப்பு – 12, அவித்த உருளைக்கிழங்கு – 1, , ப்ரெட் – 2 ஸ்லைஸ், , பெரிய வெங்காயம் – 1, கரம் மசாலா – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன். இஞ்சி – கால் இன்ச் துருவியது, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது. கொத்துமல்லித்தழை – ஒரு டீஸ்பூன். வெண்ணெய் – 1 டீஸ்பூன், மைதா – அரை கப், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ப்ரெட் க்ரம்ப்ஸ் – 1 கப். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:-

பீட்ரூட்டைத் தோல்சீவி சுத்தம் செய்து பொடியாகத் துருவவும்.. ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கி பீட்ரூட்டைப் போட்டு கரம்மசாலா, மிளகாய்த்தூள் வெண்ணெயைப் போட்டு அரை டீஸ்பூன் உப்புப் போட்டு நன்கு புரட்டவும். வெந்து உருண்டதும் இறக்கி ப்ரட், உருளை, கொத்துமல்லித்தழை போட்டு நன்கு பிசையவும். முந்திரியை உள்ளே வைத்து ஓவல் சைஸில் சின்ன சின்ன கட்லெட்டுகளாக செய்யவும்.. மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் போட்டுக் கரைத்து கட்லெட்டுகளை நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். கொத்துமல்லி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும். 


பீட்ரூட்டை எப்படிச் சமைத்துச் சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துக்கள் அழிவதில்லை. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது. விட்டமின்கள், மினரல்ஸ், தாது உப்புகள் அதிகம் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்குது.இரத்தச் சிவப்பணுக்களையும் அதிகரிக்குது.


கால்சியம், இரும்புச் சத்து, விட்டமின் ஏ மற்றும் சி ஆகியன அதிக அளவில் உள்ளன. ஃபோலிக் ஆசிடும் ஆக்ஸாலேட்டும் அதிக அளவில் இருக்கிறது. நார்ச்சத்து நிரம்பியதால் எளிதாக செரிமானம் ஆகும். இதில் மாங்கனீசும் , பொட்டாசியமும் உள்ளது.


பீட்ரூட் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்குது. இதில் அதிக அளவில் இருக்கும் க்ளூட்டமின் என்ற அமினோ அமிலம் சிறுகுடலை சீர் செய்கிறது. இதில் இருக்கும் பீட்டாசையனின் புற்று நோயையும் இதய நோயையும் தடுப்பதில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது.


டேவிட் வீர் என்ற பாரா ஒலிம்பிக் வீரர் தன்னுடைய வெற்றிக்கு பீட்ரூட்  உணவுதான் காரணம் என்கிறார். எனவே குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை அளிக்கும் பீட்ரூட்டை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. கட்லெட் சாப்பிடுங்க. கலகலப்பா இருங்க. ! 


டிஸ்கி:- ஜூன் 2016 கோகுலத்தில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக