வியாழன், 6 செப்டம்பர், 2018

இட்லிப் பொடி.

இட்லிப் பொடி. :-

தேவையானவை :-

காம்பு நீக்கிய வரமிளகாய் - 100 எண்ணிக்கை, உளுந்தம்பருப்பு - 1 உழக்கு , கடலைப்பருப்பு - கால் உழக்கு, துவரம்பருப்பு - கால் உழக்கு, பெருங்காயம் - 10 துண்டு ( நகம் அளவு தட்டையானது ), உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை - இரண்டு கைப்பிடி., எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:-  ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுந்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். அதேபோல் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் சிவக்க வறுத்து வைக்கவும். கருவேப்பிலையை எண்ணெய் இல்லாமல் வெதுப்பவும். உப்பை வாணலியின் எல்லாப் பக்கமும் படும்படி சிலாத்தி வறுத்துக் கொட்டவும். (ஏனெனில் அடுத்துப் பெருங்காயம் வறுத்து வரமிளகாயை வறுக்கும்போது கமறாமல் இருக்கும்.)  அடுத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை வறுத்து எடுத்து அதே எண்ணெயில் வரமிளகாயைப் போட்டு வறுத்து அடுப்பை அணைத்து அதிலேயே வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு நன்கு திரித்துக் கலந்து  காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். இதில் நெய் உருக்கி ஊற்றியும் சாப்பிடலாம். பொதுவாக நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து சூடான இட்லியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பயண உணவாக இட்லியில் எண்ணெய் மிளகாய்ப் பொடி போட்டுத் தூவியும் எடுத்துச் செல்லலாம்.

டிஸ்கி :- இதில் தனியா அல்லது புளி அல்லது , எள் அல்லது பூண்டு  ஆகியன சேர்த்தும் பொடி தயாரிப்பார்கள். சிலர் அரிசியை சிவக்க வறுத்து அரைத்தும் சேர்க்கிறார்கள்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு