திங்கள், 1 அக்டோபர், 2018

பருப்பு போளி & தேங்காய் போளி.

பருப்பு போளி & தேங்காய் போளி. :-

தேவையானவை :-

மைதா - 2 கப், தேங்காய் துருவியது - ஒரு கப், கடலைப்பருப்பு - 1 கப்,  வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய் - 6 பொடிக்கவும் , நெய் - 2 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் - 200 கி , மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை :- மைதாவில் உப்பும் மஞ்சள் தூளும் போட்டு நன்கு கலக்கி முக்கால் கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பிசையவும். அதன்மேல் நல்லெண்ணெய் ஊற்றி 4 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.

 வெல்லத்தைப் பொடிக்கவும். தேங்காயைத் திருகி முக்கால் கப் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். சுருண்டு வரும்போது இறக்கி சிறிது நெய்யும் ஏலப்பொடியும் போடவும்.

கடலைப்பருப்பைக் கிள்ளுபதமாக வேகவைத்து வெல்லத்துடன் லேசாக கரைந்ததும் கிரைண்டரில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். இதில் ஏலப்பொடியும் நெய்யும் போட்டு வைக்கவும்.

மைதாமாவை இரண்டாகப் பிரிக்கவும். ஒன்றில் தக்காளி அளவு உருண்டை எடுத்து கிண்ணம்போல் செய்து அதில் தேங்காய்ப் பூரணத்தை வைத்து உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து தோசைக்கல்லில் நெய்யும் நல்லெணெயும் கலந்து சுடவும். இதற்கு மைதாவில் ஊற்றிய எண்ணெயையே எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் பருப்பு பூரணத்தையும் உள்ளே வைத்து சப்பாத்திபோல் திரட்டி தோசைக்கல்லில் வேகவைத்து எடுக்கவும். வாழை இலையிலும் தட்டி வேகவைக்கலாம். சூடான சுவையான பருப்பு & தேங்காய் போளிகள் தயார். நெய் சிறிது விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



  

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு