வியாழன், 11 அக்டோபர், 2018

காளான் பிரியாணி.

காளான் பிரியாணி.
தயிர் வெங்காயம்.

தேவையானவை :- காளான் - 1 பாக்கெட், பாசுமதி அரிசி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பொதினா கொத்துமல்லித்தழை - 1 கைப்பிடி, பச்சைமிளகாய் - 2, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை தலா - 2, சோம்பு - அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை :- காளானை சுத்தம் செய்து நான்காக நறுக்கி கொதிநீரில் போட்டு அடுப்பை அணைத்து  3 நிமிடம் வைத்து வடிகட்டவும். பாசுமதி அரிசியைக் களைந்து வைக்கவும். வெங்காயம் தக்காளியை நறுக்கவும். பொதினா கொத்துமல்லித்தழையையும் பொடியாக நறுக்கவும்.

ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை போட்டுத் தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டுத் தண்ணியாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டுச் சிவக்கும் வரை வதக்கி தக்காளி, காளான், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு நன்கு பிரட்டவும். அதில் அரிசியைப் போட்டு பொதினா கொத்துமல்லித்தழையைப் போட்டு உப்பையும் போட்டு நன்கு கலக்கி விடவும். தேங்காய் பாலை ஊற்றி இன்னும் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். அருமையான காளான் பிரியாணி சுடச் சுட ரெடியாகி இருக்கும்.

தயிர்ப்பச்சடி :- ஒரு பெரிய வெங்காயத்தை நான்காக வெட்டி அதை நைஸாக அரிந்து ஒரு கப் தயிரில் போட்டு கால் டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு