21.முட்டை பிரியாணி
தேவையானவை :- முட்டை 6, சீரகசம்பா அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, கொத்துமல்லி புதினாத்தழை – ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன். அரைக்க :- வரமிளகாய் – 6, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பூண்டு – 8 பல், சோம்பு, சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கசகசா – அரை டீஸ்பூன், தேங்காய் – 1 துண்டு, உப்பு – 1டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். வறுத்த முந்திரிப் பருப்பு – 8 நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- முட்டைகளை அவித்துத் தோலுரிக்கவும். ஊசியால் லேசாக அங்கங்கே குத்தி வைக்கவும். அப்போதுதான் பிரியாணி மசாலா உள்ளே சார்ந்து ருசியாக இருக்கும். சீரகச்சம்பா அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். தக்காளியை போட்டுக் குழைந்ததும் மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி அரிசியைச் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு நான்கு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். கொதித்து சாதம் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகளையும் புதினா கொத்துமல்லித்தழைகளையும் சேர்த்து பத்து நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். உருக்கிய நெய்யை ஊற்றி முந்திரிப் பருப்பைத் தூவி சிக்கன் விண்ட்லூ, மட்டன் குருமாவுடன் பரிமாறவும்.