எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

21.முட்டை பிரியாணி

21.முட்டை பிரியாணி


தேவையானவை :- முட்டை 6, சீரகசம்பா அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, கொத்துமல்லி புதினாத்தழை – ஒருகைப்பிடி, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன். அரைக்க :- வரமிளகாய் – 6, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பூண்டு – 8 பல், சோம்பு, சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கசகசா – அரை டீஸ்பூன், தேங்காய் – 1 துண்டு, உப்பு – 1டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். வறுத்த முந்திரிப் பருப்பு – 8 நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- முட்டைகளை அவித்துத் தோலுரிக்கவும். ஊசியால் லேசாக அங்கங்கே குத்தி வைக்கவும். அப்போதுதான் பிரியாணி மசாலா உள்ளே சார்ந்து ருசியாக இருக்கும். சீரகச்சம்பா அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். தக்காளியை போட்டுக் குழைந்ததும் மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கி அரிசியைச் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு நான்கு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். கொதித்து சாதம் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகளையும் புதினா கொத்துமல்லித்தழைகளையும் சேர்த்து பத்து நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். உருக்கிய நெய்யை ஊற்றி முந்திரிப் பருப்பைத் தூவி சிக்கன் விண்ட்லூ, மட்டன் குருமாவுடன் பரிமாறவும்.  

 

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

20.நாசி பிரியாணி (மலேஷியா)

20.நாசி பிரியாணி (மலேஷியா)


 

தேவையானவை :- சிக்கன் லெக் பீஸ் - 4, பாசுமதி அரிசி - 2 கப்,  யோகர்ட் - அரை கப், பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1  டீஸ்பூன், சோம்புத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை -  2, ஏலக்காய், கிராம்பு - தலா 4, அன்னாசிப்பூ - 2, சீரகம் - ஒரு  டீஸ்பூன், பந்தன் இலைகள் - 4, லெமன் கிராஸ் - 2, எவாபொரேட்டட் மில்க் - ஒரு கப், சிக்கன் ஸ்டாக் - 800 மிலி + 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் - கால்பாகம் பொடிக்கவும். கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், வறுத்த வெங்காயம் - 1 கப், வறுத்த கிஸ்மிஸ், முந்திரி - ஒரு கப், குங்குமப்பூ - 2 சிட்டிகை.

 

 

செய்முறை :- யோகர்ட்டில் மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து சிக்கன் லெக் பீஸை நன்கு பிரட்டி 3 மணிநேரம் ஊறவிடவும். ஒரு பானில் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி பாதி அளவு பட்டை, கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ தாளித்து, பாதி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி ஊறவைத்த பாசுமதி அரிசியை வறுக்கவும். ஒரு ரைஸ் குக்கரில் அரிசியை மாற்றி அதில் பந்தன் இலைகள், லெமன் கிராஸ் தண்டு, எவாபொரேட்டட் மில்க், சிக்கன் ஸ்டாக் ஊற்றி ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இன்னொரு பானில் மீதி தேங்காய் எண்ணெய் ஊற்றி மீதிப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ தாளித்து மீதிப் பூண்டுப் பேஸ்டைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், ஜாதிக்காய்ப் பொடி போட்டு வதக்கவும். இதில் ஊறவைத்த சிக்கன் லெக் பீஸ்களைப் போட்டு 2 கப் சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும். முக்கால்வாசி வெந்ததும் வறுத்த வெங்காயம், பிரிஞ்சி இலை, கொத்துமல்லி தூவி வேகவைத்து இறக்கவும்.  குங்குமப்பூவை வெந்நீரில் ஊறவைத்து பாசுமதி சாதத்தில் கலக்கவும். பாந்தன் இலைகள், லெமன் கிராஸை எடுத்து விடவும். வறுத்த வெங்காயம், கிஸ்மிஸ் முந்திரி கலந்து வைக்கவும். சர்விங் ட்ரேயில் பாசுமதி சாதத்தையும் வெந்த சிக்கன் லெக் பீஸையும் வைத்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். 

 

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)


 

தேவையானவை :- வேகவைத்த பாசுமதி அரிசி சாதம் - 3 கப், தாய் சிவப்பு மிளகாய் விழுது - 5 டேபிள் ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 1 நசுக்கவும்., கொத்துமல்லி - அரைக்கட்டு,  உப்பு - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன், மீன் சாஸ் - 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன். சிக்கன் லெக் பீஸ் - 3, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, வெள்ளரிக்காய் - 1, புதினா - ஒரு கைப்பிடி.

 

செய்முறை :- 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது, ரெட் சில்லி சாஸ், கொத்துமல்லி, இஞ்சி பூண்டு, வெங்காயம், உப்பு, மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மைய அரைக்கவும். எலுமிச்சைச் சாற்றையும் 2 டேபிள் ஸ்பூன் மீன் சாஸையும் கலந்து சிக்கன் லெக்பீஸைக் கீறிக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சிவப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். மிச்ச சிவப்பு மிளகாய் விழுதையும் மீன் சாஸையும்  அரை கப் தண்ணீர் ஊற்றி இன்னொரு பானில் எடுத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி சிக்கனில் சேர்த்து சமைத்த சாதத்தையும் பரப்பவும்.  கலக்கிய சிவப்பு மிளகாய் விழுதை இதில் பரவலாக ஊற்றி மூடிபோட்டு சிறு தணலில் 10 நிமிடம் வேக விடவும். 7 நிமிடத்துக்குப் பின் திறந்து புதினா தூவி தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

 

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

18.மலபார் மீன் பிரியாணி

18.மலபார் மீன் பிரியாணி

 


தேவையானவை :- வஞ்சிரம் மீன் - அரைக்கிலோ, பாசுமதி அரிசி - அரைக்கிலோ, மீன் மசாலா செய்ய :- பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், யோகர்ட் - கால் கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன். 


மீனை ஊறவைக்க:- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கடுகு, வெந்தயம் - சிறிது, உப்பு - அரை டீஸ்பூன். வெள்ளை மசாலா செய்ய :- தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன், கசகசா - அரை டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, தாளிக்க :- நெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை - 2, ஏலக்காய், கிராம்பு - தலா 6, பொதினா கொத்துமல்லி - 2 கைப்பிடி, எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன். உப்பு - 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து மீனில் நன்கு உரசித் தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய், கசகசா, முந்திரியை மைய அரைக்கவும். மீனை எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து வைக்கவும். மீனை எடுத்துவிட்டு அதே பானில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பொன்னிறமானதும் பச்சை மிளகாய், மல்லித்தூள் சேர்க்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் வறுத்த மீன் துண்டுகளைப் போட்டு மசாலா நன்கு படும்படிப் பிரட்டி வேகவைத்து இறக்கவும். இன்னொரு பானில் நெய் ஊற்றிப் பட்டை,  கிராம்பு, ஏலக்காய் தாளித்து ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வறுக்கவும். இதில் நாலு கப் தண்ணீர், பொடியாக அரிந்த புதினா மல்லித் தழைகள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும். ஓவனை 200 டிகிரி முற்சூடு செய்யவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி சாதம், மீன் மசாலாவை லேயர் லேயராகப் பரப்பவும். மேலாக சாதத்தைப் பரப்பி அதன் மீது ஈரத்துணி விரித்து 180 டிகிரியில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும். வறுத்த வெங்காயம், முந்திரி, கிஸ்மிஸ் கொண்டு அலங்கரித்து மாங்காய் சட்னி, மிளகு அப்பளத்துடன் பரிமாறவும்

 
Related Posts Plugin for WordPress, Blogger...