எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கோங்குரா துவையல்/சட்னி

கோங்குரா  துவையல்/சட்னி


தேவையானவை:- புளிச்சகீரை - 1 கட்டு, வரமிளகாய் - 10, பெரிய வெங்காயம் - 1, புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், வரமல்லி, வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெயில் உப்புப் புளியோடு வதக்கவும். வெங்காயத்தை எடுத்தபின் அதே வாணலியில் சுத்தம் செய்து ஆய்ந்து கழுவிய புளிச்சகீரையை நன்கு பிரட்டி வதக்கவும். எல்லாவற்றையும் ஆறவைத்து மிக்ஸியில் முதலில் மிளகாய், வரமல்லி வெந்தயத்தைப் பொடித்து அதன் பின் வெங்காயம் கீரையைப் போட்டுக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதை ஒரு பௌலில் வழித்து எடுத்து வைக்கவும். அதன் மேல் எண்ணெயைக் காய்ச்சிக் கடுகு போட்டுப் பொரிந்ததும் ஊற்றவும். சுவையான கோங்குரா சட்னி தயார். இதை இட்லி தோசை, சாதத்தோடு பரிமாறவும். 
 

புதன், 24 பிப்ரவரி, 2021

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு.


தேவையானவை:- பூசணிக்காய் - 1 கீத்து, தேங்காய் - அரை மூடி, பச்சைமிளகாய் - 3, சீரகம் - 1 டீஸ்பூன், பச்சரிசி, கடலைப்பருப்பு - தலா அரைடீஸ்பூன் ( ஊறவைக்கவும் ). தயிர் - 1 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், சீரகம் -தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை:- பூசணிக்காயைத் தோல் சீவித் துண்டுகள் செய்து கழுவி வேகப் போடவும். அத்தோடு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், ஊறவைத்த பச்சரிசி , கடலைப்பருப்பு ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் இவற்றைப் போட்டுக் கிளறிவிடவும். லேசாகப் பொங்கி நுரைத்து வரும்போது தயிரைக் கடைந்து ஊற்றி உப்புச் சேர்த்து இறக்கி நன்கு கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை தாளித்து சூடான சாதத்தோடு பரிமாறவும். இதற்கு வாழைப்பூ உசிலி நன்றாக இருக்கும். 


 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

கருணைக்கிழங்கு மசியல் ( பிடிகருணை)

கருணைக்கிழங்கு மசியல் ( பிடிகருணை) 


தேவையானவை :- கருணைக்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் -15 பொடியாக நறுக்கவும். பூண்டு - 10 பொடியாக நறுக்கவும். சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- கருணைக்கிழங்கை நன்கு கழுவிக் குக்கரில் இரண்டு விசில் வேகப்போடவும். வெந்ததும் தோலுரித்து மசித்து வைக்கவும். புளியை அரை கப் நீரில் கரைத்து மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கருணைக்கிழங்கையும் போட்டுப் பிசைந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டைப் போட்டு இரு நிமிடங்கள் வதக்கவும். இதில் கருணைக்கிழங்கு மசியலைப் போட்டு நன்கு கிளறவும். தீயைக் குறைத்து வைத்துப் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். தயிர் சாதத்துடன் பரிமாறவும்.  
 

சனி, 20 பிப்ரவரி, 2021

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு.

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு. 


தேவையானவை :- கத்திரிவத்தல், அவரை வத்தல் - தலா 10, மாவத்தல் - 5, சின்ன வெங்காயம் - 8, பூண்டு- 4 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- கத்திரி வத்தல் அவரை வத்தல் மாவத்தலைக் கழுவி ஊறவைக்கவும். வேகவைத்த துவரம் பருப்புடன்  வற்றல்கள், பெருங்காயம், மஞ்சள்தூள், பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டுக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். வெந்ததும் லேசாக மசித்து விட்டு சாம்பார்பொடியைப் போடவும். புளியை அரைக் கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து உபயோகிக்கவும். 


 

சனி, 13 பிப்ரவரி, 2021

க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.

க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.



தேவையானவை :-
திராக்ஷைச் சாறு  - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும்
ஆரஞ்சுச் சாறு  - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும்.

பால் பவுடர் - 4 டீஸ்பூன்
பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்

செய்முறை:-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  அரை  கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில்  ஊற்றிக் கொடுக்கவும்.
 

மசாலச்சீயம்

மசாலச்சீயம்





தேவையானவை:- பச்சரிசி - 1 கப், உளுந்து - 1 கப், உப்பு - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் -1 கப், சின்ன வெங்காயம் - 20 பொடியாக அரியவும். பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன். 

செய்முறை:- அரிசி உளுந்தைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு சேர்த்து வெண்ணெய் போல் நைஸாக ஆட்டி அள்ளவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, பொடியாக அரிந்த பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி ஆறியதும் மாவில் கொட்டிப் பிசையவும். எண்ணையைக் காயவைத்து மாவை எலுமிச்சை அளவில் உருட்டிப் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.  
 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சிவப்பரிசிப் புட்டு

சிவப்பரிசிப் புட்டு. 




தேவையானவை:- சிவப்பரிசி - 1 கப், தேங்காய் - அரை மூடி, தூள் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை. ஏலப்பொடி நெய் விரும்பினால் சேர்க்கலாம்.

செய்முறை:- சிவப்பரிசியை ஊறவைத்து உலர்த்திப் பொடித்துச் சலிக்கவும். ஒரு வாணலியில் லேசாக வறுத்து இறக்கவும். அதில் உப்புப் போட்டு நீர் தெளித்துப் பிசறி பின்னும் சலித்து ( ஈரம் போகாமல் ) இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து உதிர்க்கவும். இதில் தூள் சர்க்கரை, துருவிய தேங்காய் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். நெய் ஏலப்பொடி விரும்பினால் சேர்க்கலாம். 
 

வியாழன், 11 பிப்ரவரி, 2021

சாம்பார் பொடி. ( வறுத்தரைக்கும் சாம்பாருக்கு)

சாம்பார் பொடி. ( வறுத்தரைக்கும் சாம்பாருக்கு)




தேவையானவை :- வரமிளகாய் 15, மல்லி - அரை கப், துவரம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுந்து - அரைடீஸ்பூன், பச்சரிசி - அரை டீஸ்பூன், சீரகம், மிளகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:- வெறும் வாணலியில் முதலில் மிளகாய் பின் பச்சரிசி, மல்லி, சீரகம், வெந்தயம், மிளகு இவற்றை வறுத்து அதன் பின் பருப்புக்களைப் போட்டு லேசாக வாசம் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும். இவற்றை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு சாம்பார் இறக்கும்போது போடவும். பூசணி, முருங்கை  போன்ற சாம்பார் வைக்கும்போது உப்பு புளி சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விட்டுத் தாளிக்குமுன் இந்தப் பொடியில் இரண்டுஸ்பூன் போட்டுக் குழம்பை மோந்து கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் தாளித்துக் கொட்டி இறக்கினால் சுவை அமோகமாக இருக்கும். 
 

திங்கள், 8 பிப்ரவரி, 2021

எள்ளுப்பொடி

எள்ளுப்பொடி:-



தேவையானவை:- கறுப்பு எள் - 100 கி, வரமிளகாய் - 20, உளுந்தம்பருப்பு - அரை கப், கருவேப்பிலை - 1 கைப்பிடி, பெருங்காயம் - சிறு துண்டு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு பானில் முதலில் எண்ணெய் விடாமல் கறுப்பு எள்ளை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும். அதன்பின் கருவேப்பிலையை சுக்காக வறுத்துப் போடவும். அதன் பின் உப்பை வறுத்து அதன்பின் எண்ணெய் ஊற்றிப் பெருங்காயத்தை வறுத்து அதை எடுத்ததும் அதே எண்ணெயில் வரமிளகாயை வறுக்கவும். அனைத்தையும் ஆறவைக்கவும். மிக்ஸியில் முதலில்  மிளகாயைப் பெருங்காயம், கருவேப்பிலை, உப்போடு அரைத்து அதன் பின் பருப்பைச் சேர்த்து அரைத்துக் கடைசியாக எள்ளைச் சேர்த்துச் சிறிது சுற்றி எடுக்கவும். மிகவும் ருசியான பொடி இது. இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். 

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்.



தேவையானவை.:-

முருங்கைக்காய்  - 1
கத்திரிக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1 ( சின்னம்) 
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 8
வேகவைத்த துவரம் பருப்பு -1 கப்
புளி -  2 சுளை. 
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-


முருங்கைக்காயை 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.  ப்ரஷர் பானில் வெந்த பருப்புடன் இவற்றைப் போட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, இரண்டாக வகிர்ந்த பச்சைமிளகாயைச் சேர்த்து ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். . ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடன்  பரிமாறவும்.
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...