பெர்ஸியாவிலிருந்து பிரியமுடன் வந்த பிரியாணி :-
பிரிஞ்ச் என்றால் பெர்ஸிய மொழியில் அரிசி என்று அர்த்தம். பிரியான் என்றால் அரிசியை வறுத்துச் சமைப்பது என்றும் பொருள். பெர்ஸியாவிலிருந்து இந்தியாவுக்கு இந்த பிரியானை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொண்டுவந்து பிரியாணியாக வளர்த்தெடுத்த பெருமை முகலாய மன்னர்களையே சாரும். அரேபிய வணிகர்களும் இந்தியாவுக்கு இவ்வுணவைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஹைதை நிஜாம் ( முதலாம் ஆஸஃப் ஜா ) அரண்மனைகளில்தான் இவ்வுணவு மிகப் பிரசித்தியடைந்தது. நவாபுகளின் சிறப்புணவான இது இன்று இந்தியாவின் தெருக்கள்தோறும் கிடைக்கிறது.
ஆசிய அரேபிய மக்களின் விருந்துணவுகளில் பிரியாணிக்கு என்றுமே முக்கிய இடம் உண்டு. பிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல்நலம் பேணுவதிலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. அரிசி உடலுக்கும் மூளைக்கும் எரிபொருளாகும் கார்போஹைட்ரேட்டைத் தருகிறது. நெய், தயிர், எலுமிச்சை உடலைக் குளிர்ச்சியாக்குகின்றன.
இஞ்சி, பூண்டு, மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஜீரணத்துக்கும், இறைச்சியில் கிடைக்கும் ப்ரோட்டீன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. பட்டை, கிராம்பு, ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்ப்பதால் உடல்வலி நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது. இவை பித்தத்தை நீக்கிக் கல்லீரலையும் சுத்தப்படுத்துகின்றன. மஞ்சள் குடல்புண்ணை ஆற்றுவதோடு வீக்கத்தையும் நீக்குகிறது. இறைச்சியில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் நம்ம ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு எலும்புக்கு வளர்ச்சி கொடுத்து , விட்டமின் குறைபாட்டையும் ( செலினியம், விட்டமின் பி, பி 6, நியசின்) நீக்குது. நெய்யும் இறைச்சியிலிருந்து கிடைக்கும் கொழுப்புகளும் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன. கொழுப்புச் சத்து, நெய்,வெண்ணெய் இருக்குதே, உடல் பருமனாயிடுமோன்னு கவலைப்பட வேண்டாம். ஏன்னா பாசுமதி அரிசி உண்பதால் உடல் எடைகுறையும் என்பதே உண்மை! எனவே பிரியாணி செய்து அனைவருக்கும் ஈந்து பிரியமுடன் உண்போம்.