எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜனவரி, 2020

கேரட், கோஸ் துவட்டல்.

 கேரட், கோஸ் துவட்டல்.

தேவையானவை :- கேரட்- 2, முட்டைக்கோஸ் - 200 கிராம். சின்ன வெங்காயம்- 4, பச்சை மிளகாய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1/4 டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன். தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் ( விரும்பினால் )

செய்முறை :- காரட்டைத் தோல்சீவி துருவிக்கொள்ளவும். முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கவும். சின்னவெங்காயத்தை உரித்து நைஸாக அரியவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். இதில் முட்டைக்கோஸைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் வெந்ததும் அதில் துருவிய காரட்டைப் போட்டு நன்கு வதக்கவும். உப்பைச் சேர்த்து நன்கு துவட்டி தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும். இது சாதத்துடன் காரக்குழம்பு, புளிக்குழம்பு, கெட்டிக்குழம்புக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
  

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சுரைக்காய்க் கூட்டு

சுரைக்காய்க் கூட்டு.

தேவையானவை :- சுரைக்காய் - 200 கி ( சிறிதானால் ஒன்று பெரிதானால் பாதி அல்லது கால் பங்கு ), பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டீஸ்பூன், உளுந்து , சீரகம் - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு. வரமிளகாய் - 1.

செய்முறை:- சுரைக்காயைத் தோல் சீவி சின்னச் சின்னச் சதுரங்களாக வெட்டவும். குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு அரை கப் நீர் ஊற்றவும். அதில் வகிர்ந்த பச்சைமிளகாய், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், சுரைக்காய் போட்டு குக்கரை மூடி ஒருவிசில் வரும்வரை வேக வைத்து இறக்கவும். உப்பைப் போட்டுக் கரண்டியால் நன்கு கலக்கி விடவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளித்து உபயோகிக்கவும். இது சாதத்துடன் நெய் போட்டு சாப்பிடலாம். காரக்குழம்பு, புளிக்குழம்புக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
  

புதன், 8 ஜனவரி, 2020

கோவைக்காய் பொரியல்.

கோவைக்காய் பொரியல்.


தேவையானவை :- கோவைக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு தலா - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :- கோவைக்காயைக் கழுவித் துடைத்து வெண்டைக்காய் போல் மெல்லிய வளையங்களாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து கோவைக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.

இரு நிமிடங்கள் கழித்து உப்பு,மிளகாய்ப்பொடி சேர்த்து நன்கு கலக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விட்டு நன்கு வெந்ததும் இறக்கவும். இது சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
  

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மல்லித் துவையல்.

மல்லித் துவையல்.

தேவையானவை :- மல்லி - 1 கட்டு, பச்சை மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4, பூண்டு - 1 பல், புளி - 1 சுளை, உப்பு - கால் தேக்கரண்டி, பெருங்காயம் - 1 துண்டு. தாளிக்க :- கடுகு, உளுந்து தலா அரை தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி.



செய்முறை:- மல்லியை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கவும் ( இல்லாவிட்டால் மிக்ஸியில் மாட்டிக் கொள்ளும் ) . வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும்.  பச்சை மிளகாய் வெங்காயம் வெள்ளைப்பூண்டு, உப்பு, புளி பெருங்காயத்தை மிக்சியில் சிறிது அரைத்துக் கொண்டு அதன் பின் மல்லியை மிக்சி கொள்ளும் வரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து உபயோகிக்கவும்.
  

Related Posts Plugin for WordPress, Blogger...