எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சிவப்பரிசி அவல் உப்புமா.

சிவப்பரிசி அவல் உப்புமா :-

தேவையானவை :- சிவப்பரிசி அவல் - அரை கப், சின்ன வெங்காயம் - 4, கருவேப்பிலை - 1 இணுக்கு, வரமிளகாய் - 1. உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- சிவப்பரிசி அவலை ஒருமுறை களைந்து நன்கு வடித்து சிறிது நேரம் அதில் மிஞ்சி இருக்கும் தண்ணீரிலேயே நனைத்தாற்போல ஊற வைக்கவும். பத்து நிமிடம் கழித்துக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து தாளித்து கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் போடவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டுத் தாளித்து உப்பைச் சேர்க்கவும். அதில் அவலைப் போட்டு நன்கு பிரட்டி எடுத்து உபயோகிக்கவும்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

பனீர், ஆனியன் ஃப்ரிட்டர்ஸ்.

பனீர் ஆனியன் ஃப்ரிட்டர்ஸ் :-

தேவையானவை :- பனீர் - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் -1, பஜ்ஜி மிக்ஸ் அல்லது கடலை மாவு - அரை கப் ( கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சோம்புப்பொடி, பெருங்காய்ப் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். ) உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பனீரை மெல்லிய விரல் நீள ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பஜ்ஜி மிக்ஸ் உப்பு சேர்க்காமல் என்றால் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். ( கடலைமாவு  என்றால் உப்பு + மிளகாய்ப்பொடி+ சோம்புப்பொடி+பெருங்காயப்பொடி இவற்றைக் கரைக்கவும்). எண்ணெயைக் காயவைத்து பனீரையும் வெங்காயத்தையும் மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுத்து தக்காளிசாஸுடன் பரிமாறவும்.

புதன், 5 பிப்ரவரி, 2020

கீரைத்தண்டுத் துவட்டல்.

கீரைத்தண்டுத் துவட்டல்.

தேவையானவை :- கீரைத்தண்டு - முளைக்கீரையை ஆய்ந்தவுடன் கிடைக்கும் தண்டினை வேர் நீக்கி சுத்தம் செய்து கழுவி அரை இஞ்ச் அளவு பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயம் - 4, பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா கால் டீஸ்பூன், வரமிளகாய் - 1.

செய்முறை:- கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வரமிளகாயை இரண்டாகக் கிள்ளி விதையை நீக்கிப் போடவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கிக் கீரைத்தண்டைச் சேர்த்துக் கிளறவும். கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வேகவைத்து பதமாக வெந்த பருப்பு போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இது புளிக்குழம்பு, கெட்டிக்குழம்பு, காரக் குழம்புக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
  

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பலாக் கொட்டை ( விதை) மசால்.

பலாக் கொட்டை (விதை) மசால் :-

பலாக்கொட்டை - 20 , சின்ன வெங்காயம் - 5, வெள்ளைப்பூண்டு - 5 பல், தக்காளி - சின்னம் - 1, மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன் , கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- பலாக்கொட்டைகளை நான்காக நறுக்கித் தோலுரித்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து இரண்டாக வெட்டிய சின்னவெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். தக்காளியைப் பொடியாக   அரிந்து போட்டு வதக்கி அதில் உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். மசாலா நன்கு வதங்கியதும் வெந்த பலாக்கொட்டை சேர்த்துக் கிளறி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வேகவிடவும். வெந்து சுண்டியதும் இறக்கி சாம்பார் சாதம், தயிர் சாதத்தோடு தொட்டுக் கொள்ளப் பரிமாறவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...