எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 மார்ச், 2023

கத்திரிக்காய் கூட்டு

2.கத்திரிக்காய் கூட்டு


தேவையானவை:- கத்திரிக்காய் – 4, துவரம்பருப்பு – கால் கப், சின்னவெங்காயம் – 4, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, சீரகம்- கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – சிறிது.

செய்முறை:- துவரம்பருப்பைக் கழுவி ப்ரஷர் பானில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, மஞ்சள்பொடி, சீரகத்தைப் போடவும். இதில் சதுரமாக அரிந்த சின்ன வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்க்கவும். ப்ரஷர் பானில் இரண்டு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் திறந்து உப்பும் கருவேப்பிலையும் சேர்த்துப் பரிமாறவும். 

உடைகஞ்சியுடன் தொட்டுச் சாப்பிட ஏற்றது. தேவையானால் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் அரைடீஸ்பூன் உளுந்து, சீரகம், வரமிளகாய் தாளித்தும் உபயோகிக்கலாம்.

 

வெள்ளி, 24 மார்ச், 2023

உடைகஞ்சி

1.உடைகஞ்சி


தேவையானவை:- அரிசி – அரை கப், தண்ணீர் – 2 கப், உப்பில் போட்ட நார்த்தங்காய், கிடாரங்காய், கொளுஞ்சிக்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய் – ஒரு துண்டு.

செய்முறை:- அரிசியை மிக்ஸியில் ரவை போல் சன்னமாக உடைக்கவும். ப்ரஷர்பானில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து எடுக்கவும். லேசாக வெதுவெதுப்பாக இருக்கும்போது உப்பு ஊறுகாய்த் துண்டைப் போட்டு நன்கு கரைத்து தேவையான வெந்நீர் சேர்த்து அருந்தக் கொடுக்கவும். 


இது காய்ச்சலின் போது எடுத்துக் கொள்ளும் உணவு.

 

வியாழன், 23 மார்ச், 2023

பத்திய சமையல் பக்குவங்கள் குமுதம் சிநேகிதியில்.

 பத்திய சமையல் பக்குவங்கள்.


1.உடைகஞ்சி
2.கத்திரிக்காய் கூட்டு
3.பூண்டுக் கஞ்சி
4.தூதுவளை ரசம்
5.பருப்புத் துவையல்
6.முட்டைக்கோஸ் கூட்டு
7.மல்லிப் பச்சடி
8.மருந்துக் குழம்பு
9.சீரகக் கொழுக்கட்டை
10.வெந்தயத் தோசை
11.நாரத்தைக் கட்டி
12.கருவேப்பிலைச் சட்னி
13.கடாரங்காய் சாதம்
14.காரட் தக்காளி சூப்
15.இஞ்சித் துவையல்
16.இஞ்சிப் புளிக்காய்ச்சல்
17.மிளகு சீரக சாதம்
18.அவரைக்காய் இளங்குழம்பு
19.சௌ சௌ கூட்டு
20.பொட்டுக்கடலைத் துவையல்
21.கீரைத்தண்டுப் பொரியல்
22.மிளகுபொடி.
23.புதினா தோசை.
24.சுண்டை வத்தல் மணத்தக்காளி வத்தல் குழம்பு
25.கோதுமை பொரியரிசி மாவு


11.8. 2022 குமுதம் சிநேகிதி  இதழில் இந்த ரெஸிப்பீக்கள் இணைப்புப் புத்தகத்தில் வெளியாகி உள்ளன. 


நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல். 

 

செவ்வாய், 21 மார்ச், 2023

சுண்டை வத்தல்

சுண்டை வத்தல்


தேவையானவை:- முற்றிய சுண்டைக்காய் – 1 பெரிய படி, உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் – 2 கப்

செய்முறை:- தயிரில் உப்பைப் போட்டு நன்கு கடையவும். சுண்டைக்காயைக் காம்பு நீக்கிச் சுத்தம் செய்து ஒரு பக்கம் மட்டும் லேசாகக் கீறித் தயிரில் போட்டு ஊறவிடவும். மறுநாள் தயிரில் இருந்து எடுத்துத் தாம்பாளத்தில் பரப்பி வெய்யிலில் காயவைத்து இரவில் மீண்டும் தயிரில் போடவும். தயிர் முழுதும் உறிஞ்சி நன்கு காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்தவும். எண்ணெயி பொரித்து வத்தக் குழம்பில் போட்டு உபயோகிக்கலாம்.

 

ஞாயிறு, 19 மார்ச், 2023

மணத்தக்காளி/மிளகுதக்காளி வத்தல்

மணத்தக்காளி/மிளகுதக்காளி வத்தல்


தேவையானவை:- மணத்தக்காளி/மிளகுதக்காளி – 1 பெரிய படி, உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் – 2 கப்

செய்முறை:- தயிரில் உப்பைப் போட்டு நன்கு கடையவும். மணத்தக்காளியைக் காம்பு நீக்கிச் சுத்தம் செய்து கழுவிக் காயவைக்கவும். உலர்ந்ததும் தயிரில் போட்டு ஊறவிடவும். மறுநாள் தயிரில் இருந்து எடுத்துத் தாம்பாளத்தில் பரப்பி வெய்யிலில் காயவைத்து இரவில் மீண்டும் தயிரில் போடவும். தயிர் முழுதும் உறிஞ்சி நன்கு காய்ந்ததும் எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். வத்தக் குழம்பும் வைக்கலாம்.

 

வெள்ளி, 17 மார்ச், 2023

முள்ளுமுறுக்கு வத்தல்

முள்ளுமுறுக்கு வத்தல்


தேவையானவை :- பச்சரிசி - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். இதில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கூழ் கண்ணாடிபோல் நன்கு வெந்து வரும். தண்ணீரைத் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் இதுவே பதம். இதில் ஓமம், சீரகம், எள்ளைச் சேர்த்து நன்கு கிளறவும்.பாயின் மேல் நனைத்த துணியை விரித்து முள்ளுமுறுக்கு அச்சில் போட்டுப் பிழியவும். மாலை துணியில் இருந்து பிய்த்து சீராக வெட்டித் தட்டில் போட்டுக் காயவைக்கவும். இரு நாட்கள் காய்ந்ததும் பொரித்துச் சாப்பிடலாம்.

 

புதன், 15 மார்ச், 2023

கிள்ளு வத்தல்/கரண்டி வத்தல்

கிள்ளு வத்தல்/கரண்டி வத்தல்


தேவையானவை :- பச்சரிசி - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன்.

 

செய்முறை :- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். இதில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கூழ் கண்ணாடிபோல் நன்கு வெந்து வரும். தண்ணீரைத் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும். பாயின் மேல் நனைத்த துணியை விரித்து ஸ்பூனால் அல்லது கரண்டியால் மோந்து ஊற்றலாம். அல்லது கையால் கிள்ளியும் வைக்கலாம். மாலை துணியில் இருந்து பிய்த்து சுளகில் அல்லது தட்டில் போட்டுக் காயவைக்கவும். இரு நாட்கள் காய்ந்ததும் ஈரமில்லாத காற்றுப்புகாத டின்னில் எடுத்து வைக்கவும்.


 

திங்கள், 13 மார்ச், 2023

ஜவ்வரிசி வடகம்

ஜவ்வரிசி வடகம்


தேவையானவை:- ஜவ்வரிசி – அரைக்கிலோ, உப்பு – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஜவ்வரிசியைக் கழுவி அரைமணிநேரம் வைக்கவும். ஒரு இட்லிப் பாத்திரத்தில் ஜவ்வரிசியைப் போல ஆறு மடங்கு தண்ணீர் ( தோராயமாக 15 கப்) ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் உப்பையும் பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து ஜவ்வரிசியையும் போட்டு வேகவிடவும். கண்ணாடிபோல் வெந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான துணியைப் பாயின் மேல் விரித்து ஜவ்வரிசியைக் கரண்டியால் மோந்து ஊற்றித் தட்டையாகத் தடவவும். மாலையில் காய்ந்ததும் உரித்தெடுத்து இன்னும் இரு நாள் காயவைக்கவும். எண்ணெயில் பொரிக்கலாம்.


 

வியாழன், 9 மார்ச், 2023

அப்பளப்பூ

அப்பளப்பூ


தேவையானவை:- உளுந்தமாவு - 2 கப், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :- உளுந்தமாவில் சீரகத்தைத் தேய்த்துப் போடவும். பெருங்காயத்தையும் உப்பையும் நீரில் கரைத்து ஊற்றி கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் தடவி மடக்கி மடக்கி சப்பாத்திக் கல்லில் அடித்து நீளமான உருளைகளாக உருட்டவும். இதை மருந்து பாட்டில் மூடி அளவு  துண்டங்களாக வெட்டி வைக்கவும். ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் உளுந்து மாவு தூவி சப்பாத்திக் கல்லில் தேய்த்து நிழற்காய்ச்சலாக உலரவைத்து எடுத்து வைக்கவும்.

செவ்வாய், 7 மார்ச், 2023

பாகற்காய் சிப்ஸ் ( இரண்டு வகை)

பாகற்காய் சிப்ஸ் ( இரண்டு வகை)


தேவையானவை:- பாகற்காய்- அரைக் கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், புளி – 2 சுளை, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

பாகற்காய் – அரைக்கிலோ உப்பு – 1 டீஸ்பூன், தயிர் – கால்கப்

செய்முறை:- புளியைக் கரைத்து இரண்டு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். அரைக்கிலோ பாகற்காயை விதைகளுடன் கனமான ஸ்லைசுகளாக நறுக்கி அதில் போட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு மிளகாய்த்தூள் தூவி நன்கு பிசறி வெய்யிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் இதை வத்தக்குழம்பு வைக்கலாம். பொரிக்கவும் செய்யலாம்.

இன்னொரு முறையில் பாகற்காயை விதைகளுடன் ஸ்லைசுகளாக வெட்டி உப்பும் தயிரும் சேர்த்துப் பிசறி வெய்யிலில் காயவைத்து எடுக்கவும். இது பொரித்துச் சாப்பிட சுவையாக இருக்கும். 

 

வியாழன், 2 மார்ச், 2023

பீட்ரூட் சிப்ஸ்

பீட்ரூட் சிப்ஸ்


தேவையானவை:- பீட்ரூட் – 4, உப்பு – 1 டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பீட்ரூட்களைத் தோலுடன் நன்கு கழுவிக் காயவிடவும். சிறிது கனமான ஸ்லைசுகளாகச் சீவவும். இதில் உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் ஒற்றை ஒற்றையாய்ப் பரப்பிக் காயவைத்து எடுத்து வைக்கவும். எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...