எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

தயிர் சேமியா

தயிர் சேமியா



தேவையானவை :- சேமியா – 1 கப், கெட்டித்தயிர் – 3 கப், பச்சைமிளகாய் – 1, பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை – 2 டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 1 டேபிள் ஸ்பூன், துருவிய காரட் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ் முந்திரி – தலா 10.

செய்முறை:- சேமியாவை இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்து இறக்கி ஆறவிடவும். தயிரில் உப்பு சேர்த்துக் கடைந்து வைக்கவும். இதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, துருவிய காரட், மாதுளை முத்துகளைச் சேர்க்கவும். சேமியாவில் தயிர்க்கலவையைக் கொட்டிக் கிளறி முந்திரி கிஸ்மிஸை மேலாகத் தூவிப் பரிமாறவும்.

சனி, 28 டிசம்பர், 2024

இளந்தோசை

இளந்தோசை



தேவையானவை :- இட்லி அரிசி (வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப், வெள்ளை உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :- அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் ஒன்றாகப் போட்டு 4 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும். கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் துணியால் தடவி மெல்லிய தோசைகளாகச் சுடவும். மூடி போட்டு வேக வைத்தால் இளசாக வரும்.

வியாழன், 26 டிசம்பர், 2024

வெள்ளைப் பணியாரம்

வெள்ளைப் பணியாரம்


தேவையான பொருட்கள்.:- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி, வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு), உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்க..

செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுக்கவும். .அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு மாவை நன்கு அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும்.

செவ்வாய், 24 டிசம்பர், 2024

ரெங்கோன் புட்டு

ரெங்கோன் புட்டு


தேவையானவை :- வெள்ளை ரவை - 1 கப், பால் - 2 கப், ஜீனி - 1 கப், நெய் - 1/2 கப், துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய் – 2, முந்திரிப் பருப்பு - 10


செய்முறை:-
 ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயைச் சேர்த்து சூடாக மாலை டிஃபனோடு பரிமாறவும்.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

பால் பாயாசம்

பால் பாயாசம்


 

தேவையானவை:- பால் – 2 லிட்டர், பாசுமதி அரிசி – 1 டீஸ்பூன், சீனி – 1 கப்

 

செய்முறை:- பாலை குக்கரில் கொதிக்க விடவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். பாதியாக சுண்டும்போது பாசுமதி அரிசியை மிக்ஸியில் பொடியாக்கி சிறிது பால் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பால் மூன்றில் ஒரு பங்கு திக்காக ஆகும்போது சீனி சேர்த்துக் கரைந்து கொதித்து வாசனை வந்ததும் இறக்கவும். 

புதன், 18 டிசம்பர், 2024

பால் பணியாரம்

பால் பணியாரம்


தேவையானவை :- பச்சரிசி  -  1 ஆழாக்கு, வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு., உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் -  பொறிக்கத் தேவையான அளவு., காய்ச்சிய பால் - 1 லிட்டர், ஜீனி - 1/2 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்.

திங்கள், 16 டிசம்பர், 2024

அட்சய திருதியை ரெஸிப்பீஸ்

அள்ளித்தரும் அட்சய திருதியை 



நன்மையையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் நாள் அட்சய திரிதியை. காசியில் அன்னபூரணி பரமேசுவரருக்கே அன்னம் பாலித்த நாள். இன்று அன்னம் போன்ற வெண்மைப் பொருட்களை வாங்குவதை விட  வெண்மை நிற உணவுகளை இறைவனுக்குப் படைத்து இல்லாதோருக்கு வழங்கினால் அன்னபூரணியின் அருளும் விசுவநாதரின் அருளும் பெருகும். உப்பு, அரிசி போன்றவை செல்வச் செழிப்பின் அடையாளங்கள்.  அவற்றோடு இங்கே கூறப்பட்டுள்ள வெண்மை நிற உணவுகளைச் செய்து இறைவனுக்குப் படைத்துத் தானமும் செய்யலாம்,  நாமும் உண்டு மகிழலாம். அள்ள அள்ளக் குறையாமல் நம் அனைவரின் இல்லங்களிலும் உணவு மட்டுமல்ல, உள்ளங்களிலும் பகிர்ந்து உண்ணும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும். நன்மையும் செல்வமும் என்றும் பொலியட்டும். ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும். 


அன்புடன் 

தேனம்மைலெக்ஷ்மணன்.


அட்சய திருதியை ஸ்பெஷல் 30 – WHITE RECIPES

 

1.ரெங்கோன் புட்டு

2.அக்கி அடை

3.பால் பணியாரம்

4.வெள்ளைப் பணியாரம்

5.ரசகுல்லா

6.ரசமலாய்

7.அவல் உருண்டை

8.தேங்காய் பர்பி

9.பாலாடைப் பிரதமன்

10.பால் பாயாசம்

11.கல்கண்டுப் பொங்கல்

12.பகாளாபாத்

13.இளந்தோசை

14.இலை அடை

15.பால் கொழுக்கட்டை

16.இனிப்பு இடியாப்பம்

17.ஆக்ரா ஸ்வீட்

18.பால் அல்வா

19.கொழுக்கட்டை

20.தேங்காய் சாதம்

21.ஆப்பம்

22.அரிசிப் பாயாசம்

23.தேன்குழல்

24.தயிர் சேமியா

25.சர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்

26.காலிஃப்ஃவர் சொதி

27.தஹி குஜியா

28.தேங்காய்ப்பால் கஞ்சி

29.குழாய்ப் புட்டு

30.பனீர் பகோடா

புதன், 11 டிசம்பர், 2024

20.ஃப்ரூட் கீர்


20.ஃப்ரூட் கீர்



தேவையானவை:- பழ டின் – 1 ( அல்லது) சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப், பால் – 1 லிட்டர், பாதாம் – 5, முந்திரி – 5, கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன், சீனி – ½ கப், பழ எஸென்ஸ் – 3 சொட்டு, சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்., நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பாதாமையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப்போடவும். பாதாமை உரித்து முந்திரியுடன் அரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். கஸ்டர்ட் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். சீனியை சேர்க்கவும். நன்கு கலக்கி இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் அதில் பழ எஸென்ஸ், மற்றும் பழக் கலவையைச் சேர்க்கவும். சாரைப்பருப்பை நெய்யில் வறுத்துத் தூவி ஃப்ரிஜ்ஜில் 3 மணி நேரம் குளிரவைத்துப் பரிமாறவும்

திங்கள், 9 டிசம்பர், 2024

19.பைனாப்பிள் ரெய்த்தா



19.பைனாப்பிள் ரெய்த்தா

தேவையானவை:- பைனாப்பிள் – 1 துண்டு. தயிர் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, சீரகத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- பைனாப்பிளை சிறு துண்டுகள் செய்யவும். தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி உபயோகிக்கவும்.

வியாழன், 5 டிசம்பர், 2024

18.பச்சைமிளகாய் இஞ்சிப்புளித் தொக்கு

18.பச்சைமிளகாய் இஞ்சிப்புளித் தொக்கு



தேவையானவை:- இஞ்சி – 200 கி, பச்சை மிளகாய் – 50 கி, புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கடுகு - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 கிராம், வெல்லம் – 50 கி, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- இஞ்சியைத் தோல்சீவிக் கழுவித் துருவவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உப்புப் புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். பானில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுப் பொறிந்ததும் கருவேப்பிலை, இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் சேர்த்துக் கரைத்த உப்புப் புளியை ஊற்றவும். கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

புதன், 4 டிசம்பர், 2024

17.வரமிளகாய் வெல்ல சம்மந்தி

17.வரமிளகாய் வெல்ல சம்மந்தி


தேவையானவை:- சிவப்பு மிளகாய் – 4, துருவிய தேங்காய்  - 1 கப், சின்ன வெங்காயம் - 10. தோலுரித்தது, புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன், வெல்லம் – கால் துண்டு.

செய்முறை:- எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும். 

திங்கள், 2 டிசம்பர், 2024

16.வெந்தய இனிப்பு உருண்டை

16.வெந்தய இனிப்பு உருண்டை


தேவையானவை:- வெந்தயம் – அரை கப், கோதுமை மாவு – 1 கப், நெய் – அரை கப், பாதாம் – 6 , பேரீச்சை – 6, வெல்லம் – முக்கால் கப்.

செய்முறை:- வெந்தயத்தை முதலில் வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். திரும்பவும் நிதானமான தீயில் பாதி நெய்யைக் காயவைத்து பொடியைப் போட்டு வறுத்து எடுக்கவும். மீதி நெய்யை ஊற்றி பொடியாக ஒடித்த பாதாமை வறுத்து எடுத்து அதன்பின் கோதுமை மாவையையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்தை சுத்தம் செய்து கெட்டிப் பாகுவைத்து அதில் பாதாம், பொடியாக அரிந்த பேரீச்சை, வெந்தயம், கோதுமை மாவு போட்டு நன்கு கலக்கி ஆறியபின் உருண்டைகள் பிடிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...