3.தக்காளி பட்டாணி பிரியாணி
தேவையானவை:- தக்காளி – 6, பச்சைப்பட்டாணி – 1கப், பொன்னி பச்சரிசி – 2 கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பற்கள், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 6, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு , ஏலக்காய் – தலா 2, 2 டீஸ்பூன் தேங்காய், அரை டீஸ்பூன் கசகசா, 4 முந்திரி – அரைக்கவும். பச்சை மிளகாய் – 2, வரமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன். கொத்துமல்லி, புதினா தழைகள் சிறிது.
செய்முறை:- தக்காளிகளை வெந்நீரில் போட்டுத் தோலுரிக்கவும். பச்சரிசியைக் களைந்து பத்துநிமிடம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக அரியவும். புதினா கொத்துமல்லியைப் பொடியாக அரிந்துவைக்கவும். இஞ்சி பூண்டைத் தனியாக அரைக்கவும். தேங்காய், கசகசா, முந்திரியைத் தனியாக அரைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பெரிய வெங்காயத்தை வதக்கவும். நன்கு வதங்கியதும் இரண்டாக வகிர்ந்த பச்சைமிளகாய் & இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இது ப்ரவுனாக மாறியதும் பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள் ,தக்காளிச் சாறைச் சேர்க்கவும். நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்ததும் முந்திரி தேங்காய் கசகசாக் கலவையைப் போட்டு நன்கு பிரட்டி அரிசியைச் சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்துத் திறந்து பொடியாக அரிந்த கொத்துமல்லிபுதினாத் தழைகளைப் போடவும். நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். சிப்ஸ், வெங்காயத்தயிர்ப்பச்சடி, சில்லி சிக்கனுடன் இது அருமையாக இருக்கும்.