எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 நவம்பர், 2024

13.நெல்லிக்காய் சாதம்

13.நெல்லிக்காய் சாதம்


தேவையானவை:- சாதம் - 2 கப், முழு நெல்லிக்காய் – 6, பச்சை மிளகாய் – 2, உப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இ்ணுக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- முழு நெல்லிக்காய்., பச்சை மிளகாய்., உப்பைத் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் கருவேப்பிலை.,உப்பு போட்டு இறக்கி சாதத்தில் சேர்க்கவும். அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி தயிர்.,மசால்வடையுடன் பரிமாறவும்...

திங்கள், 18 நவம்பர், 2024

12.கிளைக்கோஸ் மசாலா


12.கிளைக்கோஸ் மசாலா



தேவையானவை:- கிளைக்கோஸ் (சின்ன முட்டைக்கோஸ்) - 200 கி, பெரியவெங்காயம் -1, தக்காளி- 1, பூண்டு -2 பல், உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை. அரைக்க:- மிளகாய் – 5, தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு, சீரகம் – சிறிது. தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- கிளைக்கோஸை இரண்டாக வெட்டவும் வெங்காயம் தக்காளியைச் சதுரத் துண்டுகளாக வெட்டவும். பூண்டைத் தோலுரித்து நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து சோம்பு தாளித்துப் பெரியவெங்காயம், தக்காளி, பூண்டை வதக்கவும். கருவேப்பிலையுடன் கோஸையும் சேர்த்து சிறிது வதக்கவும். மசாலாவை அரைத்து உப்புடன் இதில் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

சனி, 16 நவம்பர், 2024

11.பீட்ரூட் வடை


11.பீட்ரூட் வடை


தேவையானவை:- பீட்ரூட் - 2 (தோல்சீவித் துருவியது), துவரம் பருப்பு - 1/2 கப், பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, வரமிளகாய் – 4, சோம்பு - 1 டீஸ்பூன், தேங்காய் - 2 இன்ச் துண்டு, கருவேப்பிலை - 2 இணுக்கு, உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- துவரம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து வரமிளகாய்., சோம்பு., தேங்காய்., கருவேப்பிலையுடன் கொரகொரப்பாக அரைக்கவும். பீட்ரூட் துருவல்., வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

புதன், 13 நவம்பர், 2024

10.நார்த்தை ஸ்வீட் பச்சடி


10.நார்த்தை ஸ்வீட் பச்சடி


தேவையானவை:- நார்த்தங்காய் – 2, பச்சைமிளகாய்  4, வெல்லம் – 1 அச்சு, உப்பு – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- நார்த்தங்காயைக் கழுவித் துடைத்துத் துண்டுகளாக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நார்த்தங்காயைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

9. மாவடு இஞ்சி சாதம்

9. மாவடு இஞ்சி சாதம்



தேவையானவை:- உதிராக வடித்த சாதம் – 1 கப், மாவடு இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்  துருவியது, எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வேர்க்கடலை – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும். சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும். அதில் மாவடு இஞ்சித் துருவலைப் போட்டு உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். எல்லாம் சேர்ந்ததும் இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை உதிர்த்துச் சேர்க்கவும். அதில் எலுமிச்சை சாறும் கொத்துமல்லித்தழையும் போட்டுக் கலந்துவிட்டுக் கொஞ்ச நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும்.

புதன், 6 நவம்பர், 2024

8.கறிவடகத் துவையல்

8.கறிவடகத் துவையல்


தேவையானவை:- கறிவடகம் – 6, வெள்ளை உருண்டை உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவியது – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், தக்காளி – சின்னம் 1, உப்பு – கால் டீஸ்பூன், புளி – 1 சுளை, எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:- கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்தை சிவப்பாக வறுக்கவும்.அதிலேயே கறிவடகம் மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, புளி தேங்காய் எல்லாம் போட்டு நன்கு புரட்டிவிட்டு இறக்கி ஆறவைத்துத் தேவையான தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.

திங்கள், 4 நவம்பர், 2024

7.சுண்டைவற்றல் புளிக்குழம்பு

 
7.சுண்டைவற்றல் புளிக்குழம்பு



தேவையானவை:- சுண்டைவத்தல் – 30, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10, தக்காளி – 1, சாம்பார்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 50 மிலி. உப்பு – 2 டீஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு. கருவேப்பிலை 1 இணுக்கு. கடுகு, வெந்தயம் பெருங்காயம் – சிறிது, வெல்லம் - சிறுதுண்டு.

செய்முறை:- புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும். நல்லெண்ணையைக் காயவைத்து சுண்டை வத்தலைப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் பெருங்காயம் தாளித்துச் சுத்தம் செய்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார்த் தூளைப் போட்டுப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் வறுத்த சுண்டை வத்தலைச் சேர்த்து இறக்கவும்.

சனி, 2 நவம்பர், 2024

6.வெந்தயக் கீரை இளங்குழம்பு

6.வெந்தயக் கீரை இளங்குழம்பு


தேவையானவை:- வெந்தயக்கீரை – 1 கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, சின்னவெங்காயம் - 6, தக்காளி - 1, புளி  - 2 சுளை, உப்பு - ஒரு டீஸ்பூன். தாளிக்க :- கடுகு,உளுந்து சீரகம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் -  1 டீஸ்பூன்.

செய்முறை:- வெந்தயக்கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்து அலசி வைக்கவும். வேகவைத்த துவரம் பருப்பில் கீறிய பச்சை மிளகாய், இரண்டாய் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டுக் கீரையையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி அதில் சாம்பார் தூளைப் போடவும். நன்கு கொதித்துப் பச்சை வாடை போனதும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் தாளித்துப் போடவும். விரும்பினால் சிறிது சோம்பும் தாளிக்கலாம்.

புதன், 30 அக்டோபர், 2024

5.பலாப்பிஞ்சுத் தோரன்


5.பலாப்பிஞ்சுத் தோரன்



தேவையானவை:- பலாப்பிஞ்சு – 1, மஞ்சள்பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், அரைக்க:- தேங்காய் – 1 மூடி, வரமிளகாய் – 2, பூண்டு – 2 பல், சீரகம் – ½ டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், உளுந்து – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- பலாப்பிஞ்சை மஞ்சள்பொடி உப்போடு வேகவைத்து நீரை வடித்து மிக்ஸியில் போட்டு லேசாக உதிர்த்துக்கொள்ளவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை பெருபெருவென்று தண்ணீர் விடாமல் அரைக்கவும். எண்ணெயைக்காயவைத்துக் கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைக்கிள்ளிப்போடவும். கருவேப்பிலை சேர்த்து பொடித்த பலாப்பிஞ்சைப்போட்டு அரைத்த தேங்காயையும் போட்டுக் கிளறி உடன் இறக்கி ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய் ஊற்றவும்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

4.பாகற்காய் பிட்ளை


4.பாகற்காய் பிட்ளை



தேவையானவை:- பாகற்காய் - 200 கி. துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தட்டைப்பயிறு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் - 1 சில்லு, வரமிளகாய் - 5, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வரமல்லி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10. சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 1, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு உளுந்து , சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு, வெல்லம் – 1 துண்டு.

செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் ஸ்லைசாக நறுக்கிய பாகற்காயை வதக்கி சிறிது நீரூற்றி வேகவைத்து இறக்கவும். குக்கரில் துவரம்பருப்பையும் தட்டைப்பயிறையும் தனித்தனியாகக் கிண்ணங்களில் போட்டு நன்கு வேகவைத்து இறக்கவும்.வரமிளகாய், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துத் தேங்காயோடு அரைத்து வைக்கவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறப்போட்டுச் சாறெடுக்கவும். இதை பாகற்காயோடு போட்டு சுத்தம் செய்த வெங்காயம் தக்காளியோடு வேகப்போடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் வறுத்துப் பொடித்த சாம்பார் பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விட்டுத் தட்டைப்பயிறும் வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து கொட்டி உபயோகிக்கவும்.

வியாழன், 24 அக்டோபர், 2024

3.வாழைப்பூ பால் கூட்டு


3.வாழைப்பூ பால் கூட்டு


தேவையானவை:- வாழைப்பூ - பாதி ( உள்ளிருக்கும் தளிர் பகுதி), துவரம் பருப்பு /பாசிப்பருப்பு - 50 கி, பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்., பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்., சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 1/4 கப்

செய்முறை:- வாழைப்பூவின் நரம்புகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை வேக வைக்கவும். அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேக வைக்கவும். உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் வேக விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தேங்காய்ப்பாலைச் சேர்த்து சூடாக வத்தக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

திங்கள், 21 அக்டோபர், 2024

2.மாம்பழப் புளிசேரி


2.மாம்பழப் புளிசேரி


தேவையானவை:- சின்ன மாம்பழங்கள் – 5, மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - 1/2 ஸ்பூன், தேங்காய்  - அரை மூடி, சின்னவெங்காயம் – 6, இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, சீரகம் - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – ½ டீஸ்பூன், தேங்காய் எண்ணை – 2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், தயிர் -  1 கப்

செய்முறை:- முழுதாக மாம்பழத்தைத் தோலுரித்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்.தேங்காய் சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், பச்சைமிளகாயை அரைத்து ஊற்றவும். வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து இறக்கவும். தேங்காய் எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

வியாழன், 17 அக்டோபர், 2024

1.வேப்பம்பூ வெல்லப் பச்சடி

1.வேப்பம்பூ வெல்லப் பச்சடி


தேவையானவை:- வேப்பம்பூ - காயவைத்தது 2 கைப்பிடி, பாசிப்பருப்பு - 1 கைப்பிடி, வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன். தாளிக்க:- நெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 இரண்டாக கிள்ளி வைக்கவும்.

செய்முறை:- பாசிப்பருப்பை வேகவைக்கவும். அதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது நெய்யில் கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய், வேப்பம்பூ ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் போடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும். நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் 

செவ்வாய், 15 அக்டோபர், 2024

தமிழ்ப் புத்தாண்டு ரெஸிப்பீஸ்

 தமிழ்ப் புத்தாண்டு ரெஸிப்பீஸ்




தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வருடந்தோறும் வருகிறது. அன்றுதான் பிரம்மா உலகைப் படைத்ததாக புராணங்களில் வழி வரும் நம்பிக்கை. அன்று உணவில் அறுசுவையும் இடம்பெறவேண்டும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வண்ணம் அன்றைய சமையலில் அறுசுவையும் இடம் பெறும். இங்கே பாரம்பரியமும் புதுமையும் கலந்த ரெஸிப்பீஸ் இடம் பெற்றுள்ளன. கசப்புக்கு வேப்பம்பூ, பாகற்காய், வெந்தயம், வெந்தயக் கீரை, சுக்குடிக் கீரை, சுண்டை வற்றல், துவர்ப்புக்கு வாழைப்பூ, பலாப்பிஞ்சு, கிளைக்கோஸ், கறிவடகம், மாங்கொட்டைப் பருப்பு, இனிப்புக்கு மாம்பழம், பீட்ரூட், ஃப்ரூட் கீர் புளிப்புக்கு நார்த்தை, பைனாப்பிள், நெல்லிக்காய், காரத்துக்கு வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மாவடு இவற்றில் சில உப்புச் சேர்த்தும் சில வெல்லம் சேர்த்தும் சமைக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் வடையும், ஃப்ரூட் கீரும் இந்தப் புத்தாண்டில் ஸ்பெஷலாகச் செய்து அசத்துங்கள். வாழ்க்கையை அதன் வண்ணங்களோடு அறுசுவைகளோடு வரவேற்று வாழுங்கள். வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.




அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

  

1.வேப்பம்பூ வெல்லப் பச்சடி
2.மாம்பழப் புளிசேரி
3.வாழைப்பூ பால் கூட்டு
4.பாகற்காய் பிட்ளை
5.பலாப்பிஞ்சுத் தோரன்
6.வெந்தயக் கீரை இளங்குழம்பு
7.சுண்டைவற்றல் புளிக்குழம்பு
8.கறிவடகத் துவையல்
9.மாவடு இஞ்சி சாதம்
10.நார்த்தை ஸ்வீட் பச்சடி
11.பீட்ரூட் வடை
12.கிளைக்கோஸ் மசாலா
13.நெல்லிக்காய் சாதம்
14.மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு
15.சுக்குடிக் கீரைத் தண்ணிச்சாறு
16.வெந்தய இனிப்பு உருண்டை
17.வரமிளகாய் வெல்ல சம்மந்தி
18.பச்சைமிளகாய் இஞ்சிப்புளித் தொக்கு
19.பைனாப்பிள் ரெய்த்தா
20.ஃப்ரூட் கீர்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

20.ஜவ்வரிசிப் பொங்கல்

20.ஜவ்வரிசிப் பொங்கல்



தேவையானவை:- ஜவ்வரிசி - 1 கப், பச்சரிசி – கால் கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும், இஞ்சி – சிறு துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6

செய்முறை:- ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.  பச்சரிசியையும் பாசிப்பருப்பையும்  கழுவி வேகவிடவும்.இதில்  பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த இஞ்சி சேர்த்து  வேக விடவும். நன்கு மலர்ந்ததும் ஜவ்வரிசிசேர்த்துக்கிளறவும்.ஒன்றுசேர்ந்ததும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்துப் பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

செவ்வாய், 8 அக்டோபர், 2024

18.சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்

18.சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்


தேவையானவை :- பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், நெய் - ஒரு கப், பச்சைக்கற்பூரம்- ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ் ,முந்திரி - தலா 10.

 

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்து அதன் பின் களைந்து குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்தவுடன் கரண்டியால் நன்கு குழைத்தபடி சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்கு சேர்ந்தவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். இதில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

சனி, 5 அக்டோபர், 2024

17.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்

17.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்




தேவையானவை :- வெள்ளை ரவை – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, மிளகு – 10, சீரகம் – அரை டீஸ்பூன். உளுந்து – அரை டீஸ்பூன் ,நெய் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, கருவேப்பிலை – 1 இணுக்கு, முந்திரிப் பருப்பு – 10.

 

செய்முறை :- வெள்ளை ரவையை நன்கு வறுத்து வைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பை மசிய வேகவைத்து வைக்கவும். ஐந்து கப் தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி உளுந்து சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து கருவேப்பிலை போடவும். பொரிந்ததும் மிளகையும் வெள்ளை ரவையையும் போட்டுப் புரட்டி விட்டு ஐந்து கப் கொதிக்கும் நீரை ஊற்றவும். நன்கு கிளறி மூடி போட்டு வேகவைத்து இறக்கும்போது மசித்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கி மிச்ச நெய்யை ஊற்றவும்.  

திங்கள், 30 செப்டம்பர், 2024

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்


 

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – 1 கப், தக்காளி – 1, பெரியவெங்காயம் – 1 ,சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன். நெய் – 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- பச்சரிசி பாசிப்பருப்பைக் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றவும். இதில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் தக்காளியை சின்னத் துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும் பட்டாணியையும் போடவும். பச்சைமிளகாயைக் கீறிப் போடவும். குக்கரில் இரண்டு விசில் வேகவைத்து இறக்கவும். உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். நெய்யில் உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் , முந்திரி, கருவேப்பிலை வறுத்துப் பொங்கலில் கொட்டிக் கிளறி இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து உபயோகிக்கவும்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

15.காரட் பீட்ரூட் வெல்லப் பொங்கல்

15.காரட் பீட்ரூட் வெல்லப் பொங்கல்

 

தேவையானவை :- காரட் – 1 சின்னம், பீட்ரூட் – 1 சின்னம், பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு + கடலைப்பருப்பு – தலா கால் கப், மண்டை வெல்லம் – துருவியது ஒரு கப், வனிலா எஸன்ஸ் – சில துளிகள், பால் – 4 கப். நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10,

 

செய்முறை :- பச்சரிசியைக் களைந்து பாசிப்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து இரண்டு கப் பால் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் சன்னமாகத் துருவிய காரட் பீட்ருட்டை வதக்கவும். நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் 2 கப் பால் ஊற்றி குக்கரில் இருக்கும் சாதத்தில் போட்டுத் திரும்பவும் இரண்டு விசில் வேகவைத்து எடுத்து நன்கு மசிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவிச் சேர்க்கவும். நன்கு கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வனிலா எஸன்ஸையும் வறுத்த முந்திரி கிஸ்மிஸையும் சேர்த்து இன்னும் சிறிது நெய் விட்டுப் பரிமாறவும்.

புதன், 25 செப்டம்பர், 2024

14.குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்

14.குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்


தேவையானவை :- குதிரைவாலி அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – ஒரு கப், பால் – சிறிது, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை, கிராம்பு – 1 நெய் –  2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

 

செய்முறை :- குதிரைவாலி அரிசியுடன் பாசிப்பருப்பை சேர்த்துக் களைந்து கல்லரித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரை வைத்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். நன்கு மசித்து வெல்லத்தைச் சேர்க்கவும். அடுப்பில் வைத்துக் கிளறி வெல்லம் கரைந்ததும் இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போட்டு ஏலப்பொடி பொடித்த கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.

சனி, 21 செப்டம்பர், 2024

13.குங்குமப்பூ இனிப்பு சாதம்

13.குங்குமப்பூ இனிப்பு சாதம்


 

தேவையானவை :- பாசுமதி அரிசி – 1 கப், குங்குமப்பூ – 2 கி, பால் – 2 கப், சீனி – 2 ஸ்பூன்., உப்பு – 1 சிட்டிகை., நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 6, கிஸ்மிஸ் – 6, பட்டை  இலை – 1 சிறுதுண்டு, ஏலக்காய் – 3, கிராம்பு – 1, ஆப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6, பைனாப்பிள் – ½ இன்ச் துண்டுகள் - 6.

 

செய்முறை:- பாதாம் முந்திரியை ஊறவைத்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் ஊற்றி குக்கரில் வேகப் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை சூடுபடுத்து குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும். பாசுமதி அரிசி வெந்ததும் உதிர்த்துக்கொள்ளவும். பானில் நெய்யைக் காயவைத்து பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதில் முந்திரி பாதாமைப் போட்டு வதக்கி கிஸ்மிஸ், ஆப்பிள் பைனாப்பிளை சேர்க்கவும். உப்பையும் சீனியையும் சேர்த்து பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும். வேகவைத்த பாசுமதி சாதத்தையும் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து உபயோகப் படுத்தவும்.

வியாழன், 19 செப்டம்பர், 2024

12.கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல்

12.கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல்


 

தேவையானவை :- கோதுமை ரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, முளைகட்டிய பயறு – ½ கப் ( ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு, ஒரு டீஸ்பூன் பச்சைப் பட்டாணி, ஒரு டீஸ்பூன் கொண்டைக்கடலையை ஊறவைத்து துணியில் கட்டி முளை விடச் செய்யவும் ), துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்., பச்சைமிளகாய் – 1, இஞ்சி – 1 இன்ச் துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், நெய் –2 டீஸ்பூன், முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு

 

செய்முறை :- கோதுமைரவையையும் பாசிப்பருப்பையும் வறுத்து 31/2  கப் தண்ணீர் சேர்த்து முளைகட்டிய பயறுவகைகளையும் தேங்காய்த் துருவல், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகப் போடவும். இறக்கி சூடாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்து, மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கலந்துவிட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின் உபயோகிக்கவும்.

புதன், 18 செப்டம்பர், 2024

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்


 

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், தேங்காய் – 1, கற்கண்டு – 150 கி, ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )., பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை.

 

செய்முறை:- தேங்காயை அரைத்து மூன்று பால் எடுக்கவும். மூன்றாம் பால் இரண்டு கப், இரண்டாம் பால் ½ கப் முதல் பால் திக்காக ¼ கப் எடுக்கவும். பச்சரிசியை லேசாக வறுத்துக் களைந்து மூன்றாம் பாலில் குக்கரில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்கு கரண்டியால் மசிக்கவும். அதில் கற்கண்டைப் பொடித்துப் போட்டு  இரண்டாம் பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். இறுகி வந்ததும் முதல் பாலையும் ஏலப்பொடியையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். இதற்கு முந்திரி கிஸ்மிஸ் விரும்பினால் நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

சனி, 14 செப்டம்பர், 2024

10.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

10.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

 

தேவையானவை :- சிவப்பரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ¼ கப், பனை வெல்லம் – 2 அச்சு, பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி), பால் – ½ கப், ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் ), நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – 10.

 

செய்முறை:- பொங்கல் தவலையில் பாலும் சிவப்பரிசி களைந்த நீரும் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். பால் பொங்கி வந்ததும் அதில் சிவப்பரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். சிறிது தண்ணீரில் வெல்லத்தையும் பனங்கருப்பட்டியையும் நைத்துப் போட்டு சூடுபடுத்திக் கரைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி நன்கு கிளறிவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

வியாழன், 12 செப்டம்பர், 2024

9.சாமை அரிசி இனிப்புப் பொங்கல்

9.சாமை அரிசி இனிப்புப் பொங்கல்




தேவையானவை:- சாமை  அரிசி  –  2 கப், பாசிப்பருப்பு -  ¼ கப், கடலைப்பருப்பு – ¼ கப், பால்  - 5 கப், ஜீனி – 1 கப், முந்திரிப்பருப்பு – 10, திராக்ஷை – 10., நெய் – ¼ கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

 

செய்முறை:- பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வெதுப்பவும். சாமை அரிசியையும் பருப்புகளையும் கழுவி குக்கரில் போட்டுப் பால் சேர்த்து ஓரளவு வெந்தவுடன் வெயிட் போட்டுக் குழைய வேக விடவும். ஆறியதும் திறந்து ஜீனி சேர்த்து நன்கு மசிக்கவும்.  நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். வாசனைக்கு ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

8.வரகரிசிப் பொங்கல்

8.வரகரிசிப் பொங்கல்




தேவையானவை:- வரகரிசி - 1 கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி , பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்

வியாழன், 5 செப்டம்பர், 2024

7.குறுவை அரிசி தக்காளிப் பொங்கல்

7.குறுவை அரிசி தக்காளிப் பொங்கல்


தேவையானவை:- குறுவை அரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், பழுத்த தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, இஞ்சி - 1 இஞ்ச் துண்டு, உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், ஜீரகம் - 1 ஸ்பூன், நெய்+ எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- குறுவை அரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் போட்டு பொடியாக அரிந்த தக்காளி, பச்சை மிளகாய் , இஞ்சி , மிளகு , ஜீரகம், உப்பு போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்தபின் இறக்கி நன்கு மசிக்கவும். அதில் நெய்+ எண்ணெயைக் காயவைத்து முந்திரி கருவேப்பிலை தாளித்து போடவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

6.மிளகி அரிசி அன்னாசிப் பொங்கல்

6.மிளகி அரிசி அன்னாசிப் பொங்கல்




தேவையானவை:- மிளகி அரிசி - 1 கப், வெல்லம் - 1 1/2 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்., அன்னாசித் துண்டுகள் - 1 கப் மசிக்கவும், அன்னாசி எசன்ஸ் - 1/8 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, திராக்ஷை – 10, ஏலப்பொடி - 1 சிட்டிகை

 

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். எடுத்து மசித்து வெல்லம் சேர்த்து வேகவிடவும். மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் அன்னாசித்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும். அன்னாசி எசன்ஸ்., ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.

சனி, 31 ஆகஸ்ட், 2024

5.சீரகச்சம்பா மாம்பழப் பொங்கல்

5.சீரகச்சம்பா மாம்பழப் பொங்கல்



தேவையானவை:- சீரகச்சம்பா - 1 கப், வெல்லம் - 1 1/2 கப்,பாசிப்பருப்பு - 1/4 கப், மில்க் மெயிட் - 2 டேபிள்ஸ்பூன், மாம்பழக்கூழ் - 1 கப், மாம்பழ எசன்ஸ் - 1/8 டீஸ்பூன், பேரீச்சை - 2 மசித்தது, நெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, திராக்ஷை – 10, ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:- சீரகச்சம்பா, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறக்கி வெல்லம் சேர்த்து கொஞ்சம் வேக விடவும். பின் அதில் மில்க் மெயிட் சேர்க்கவும். மாம்பழக்கூழும் பேரீச்சையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

புதன், 28 ஆகஸ்ட், 2024

4.பாற்சோறு

4.பாற்சோறு



தேவையானவை :-, பச்சரிசி - 1 கப், வெல்லம்+கருப்பட்டி - 2 கப், தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்., தண்ணீர் - 4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியை தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பல்லுகளை சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யை சேர்த்து இறக்கவும்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

3.அக்கார அடிசில்

3.அக்கார அடிசில்




தேவையானவை:- பச்சரிசி - 1 கப், வெல்லம் - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி, பால் - 6 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 15, திராஷை – 10, பேரீச்சை - 2 ( விரும்பினால் சேர்க்கலாம்), கிராம்பு – 2, பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை களைந்து குக்கரில் பால் விட்டு 2 சவுண்ட் வேக விடவும். அல்லது அடி கனமான பாத்திரத்தில் நிதானமான தீயில் வேகவிடவும். நன்கு குழைய வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப்பொடி., பச்சைக்கர்ப்பூரப் பொடி, பொடித்த கிராம்பு சேர்க்கவும். பேரீச்சையை நன்கு மசித்து சேர்க்கவும். நன்கு கிளறி பரிமாறவும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

2.வெண்பொங்கல்

2.வெண்பொங்கல்



 

செய்முறை:- பச்சரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/3 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும். மிளகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 15 ( முழு), கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்., உப்பு - 1/2 டீஸ்பூன்.

 

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

புதன், 14 ஆகஸ்ட், 2024

1.திணையரிசி சர்க்கரைப் பொங்கல்

1.திணையரிசி சர்க்கரைப் பொங்கல்


 

தேவையானவை:- திணையரிசி - 1 கப், பால் - 3 கப், பாசிப்பருப்பு - 1 /3 கப், வெல்லம் - 1 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்., ஏலக்காய் – 4, முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10, பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை ( விரும்பினால்)


செய்முறை:- திணையரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் + 3 கப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியபின் குக்கரைத் திறந்து மசித்து வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். வெல்லம் கரைந்தபின் சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி., கிஸ்மிஸ் பழத்தை பொன்னிறமாக பொறித்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து தூவிப் பரிமாறவும்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

20.ப்ளம் கேலேட்

20.ப்ளம் கேலேட்



தேவையானவை:- பேரீச்சை – அரை கப், முந்திரி – கால் கப், பாதாம் – 2 டேபிள் ஸ்பூன், வால்நட் – கால் கப், பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த கருப்பு திராட்சை – 2 டேபிள் ஸ்பூன், செர்ரிப் பழம் – 10. இனிப்பு ஆரஞ்சுத் தோல் – 40 கிராம், ஆப்பிள் ஜூஸ் – 1 கப், கேரமல் செய்ய:- சீனி – அரைகப், தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன். எண்ணெய் – 1/3 கப், எலுமிச்சை சாறு – 1 ½ டேபிள் ஸ்பூன், ஆப்பிள் சிடர் வினிகர் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், மைதா – 2 கப், பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், பொடித்த பட்டை – கால் டீஸ்பூன், பொடித்த ஜாதிக்காய் – கால் டீஸ்பூன், பொடித்த கிராம்பு – 1/8 டீஸ்பூன், பொடித்த ஏலக்காய் – அரை டீஸ்பூன். ஆல் ஸ்பைஸ் பவுடர் – கால் டீஸ்பூன், இஞ்சி பவுடர் – கால் டீஸ்பூன்.

செய்முறை:- எல்லா பருப்புகளையும் பழங்களையும் துடைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு தோலையும் பொடியாக நறுக்கிப் போடவும். இதில் ஆப்பிள் ஜூஸை ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அரை கப் சீனியில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கேரமல் தயாரிக்கவும். பாகு முற்றி ப்ரவுன் கலர ஆனதும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். நன்கு ஆறியதும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் எலுமிச்சை சாறையும் வினிகரையும் சேர்த்துக் கலக்கவும். 8 இஞ்ச் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி வைத்து அவனை 180 டிகிரி முற்சூடு செய்யவும். மைதாவில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பட்டை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய் பொடிகளைப் போட்டுக் கலந்து நன்கு சலிக்கவும். இதில் ஆல் ஸ்பைஸ் பவுடரையும் இஞ்சிப் பவுடரையும் சேர்க்கவும். ஃபிரிட்ஜில் வைத்த நட்ஸை அறை வெப்பத்தில் வைத்து இந்த மாவில் சேர்க்கவும். நன்கு புரட்டி கேரமல்லை சேர்க்கவும். பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 180 டிகிரியில் ஒன்றரை மணி நேரம் பேக் செய்யவும். ஆறியதும் துண்டுகள் செய்யவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...