மல்லிப் பச்சடி
தேவையானவை:- கொத்துமல்லி – 1 கட்டு, பாசிப்பருப்பு – அரை கப், பெரியவெங்காயம் – 1, கத்திரிக்காய் -1, தக்காளி -1 பச்சைமிளகாய் – 2, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்பொடி – ஒரு சிட்டிகை, புளி – 1 சுளை, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து , சீரகம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள் சிறிது.
செய்முறை:- பாசிப்பருப்பைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். கொத்துமல்லித்தழையைச் சுத்தம் செய்து தண்டோடு சேர்த்துப் பொடிப் பொடியாக அரிந்து பாசிப்பருப்பில் சேர்க்கவும். தக்காளியையும், கத்திரிக்காயையும், பெரியவெங்காயத்தையும் பொடியாக அரிந்து போடவும். பச்சைமிளகாயை இரண்டாக வகிர்ந்து போடவும். மஞ்சள்பொடி, சாம்பார்பொடி சேர்த்து அரை கப் நீரூற்றிப் ப்ரஷர் பானில் போட்டு இரண்டு விசில் வைத்து இறக்கி மசிக்கவும். இதில் புளியை அரைகப் நீரில் கரைத்து ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்துப் பெருங்காயத்தூளைத் தூவவும். சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.
தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும். செரிமானம் கொடுத்துப் பசியைத் தூண்டும்.