எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2021

17.காலிஃப்ளவர் சொதி

17.காலிஃப்ளவர் சொதி

 


தேவையானவை:- காலிஃப்ளவர் சின்னம் - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 6, வரமல்லி - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், தாளிக்க - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, இலை, பூ, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.  கருவேப்பிலை - இணுக்கு , உப்பு - 1 டீஸ்பூன்.

 


செய்முறை:- காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வடிக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கீறிய பச்சைமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை வெதுப்பவும். இத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை இலை பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதில் வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டுத் திறக்கவும். இத்துடன் காலிஃப்ளவரைச் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். இன்னும் ஐந்து நிமிடங்கள் வெந்ததும் பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி இறக்கவும்.

 

செவ்வாய், 23 நவம்பர், 2021

16.காலிஃப்ளவர் காரட் ஊறுகாய்

16.காலிஃப்ளவர் காரட் ஊறுகாய்

 


தேவையானவை:- காலிஃப்ளவர் – 1, காரட் – 2, எலுமிச்சைச் சாறு – அரை கப், இஞ்சி துருவியது – ஒரு டீஸ்பூன், வெல்லம் துருவியது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் –அரை டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- காரட்டையும் காலிஃப்ளவரையும் நீளவாக்கில் நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வெந்நிப்படுத்தி வடிகட்டி வைக்கவும். இதை ஈரம் போகும்படி உலரவிடவும். எண்ணெயைக் காயவைத்து இஞ்சியைப் போடவும். அதில் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டுக் கலக்கி உடனே எலுமிச்சைச் சாறை ஊற்றவும்.  அது கொதிக்கும்போது காலிஃப்ளவர், காரட்டைப் போட்டுப் புரட்டவும். இரு நிமிடம் புரட்டியதும் சீரகத்தூளைப் போட்டு வெல்லத்தையும் துருவிப் போட்டு நன்கு கலக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். இரு நாட்கள் கழித்து உபயோகிக்கவும். 

ஞாயிறு, 21 நவம்பர், 2021

15.வாழைப்பூ சாப்ஸ்

15.வாழைப்பூ சாப்ஸ்

 


தேவையானவை:- வாழைப்பூ – இரண்டுமடல்களை உரித்து 30 – 40 பூக்களை எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், கடலைமாவு – அரை கப், மைதாமாவு – 1 டேபிள் ஸ்பூன், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை கப். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:- வாழைப்பூவை நரம்பு எடுத்து வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு உலர வைக்கவும். உலர்ந்ததும் இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைத் தடவிப் பிரட்டி வைக்கவும்.  கடலைமாவு, மைதாமாவு, சோளமாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப் பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். தேங்காய்ப்பால் போதாவிட்டால் சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து வாழைப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  
 

புதன், 17 நவம்பர், 2021

13.வாழைப்பூ பால் கூட்டு

13.வாழைப்பூ பால் கூட்டு

 


தேவையானவை:- வாழைப்பூ - பாதி ( உள்ளிருக்கும் தளிர் பகுதி), துவரம் பருப்பு /பாசிப்பருப்பு - 50 கி, பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்., பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்., சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் அல்லது பால் - 1/4 கப்

 

செய்முறை:- வாழைப்பூவின் நரம்புகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை வேக வைக்கவும். அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேக வைக்கவும். உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் வேக விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தேங்காய்ப் பால் அல்லது பாலைச் சேர்த்து சூடாக வத்தக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

12.ப்ராகோலி சூப்

12.ப்ராகோலி சூப்

 


தேவையானவை:- ப்ராகோலி  – ½ பாகம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, உப்பு – ½ டீஸ்பூன், மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன், வெண்ணெய்/க்ரீம் – 1 டீஸ்பூன் விரும்பினால்

 

செய்முறை:- ப்ராகோலியைத் துண்டுகளாக்கிப் பெரியவெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கி குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும். ஆறியதும் திறந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை சூடுபடுத்தி உப்பு சேர்த்து மிளகு தூவி விரும்பினால் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.

 

புதன், 10 நவம்பர், 2021

11.ப்ராகோலி புலவ்

11.ப்ராகோலி புலவ்

 


தேவையானவ:- பாசுமதி அரிசி – 2 கப், ப்ராகோலி – 1, பட்டர் பீன்ஸ் – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2,பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன், கொத்துமல்லித் தழை – 1 டேபிள் ஸ்பூன், புதினா – 20 இலை., நெய் – 30 கி, அரைக்க:- முந்திரி – 4, கசகசா – 1 டீஸ்பூன், தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- பட்டை கிராம்பு ஏலக்காய் – தலா 2, சோம்பு – 4 டீஸ்பூன்.

 


செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து  சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளி, ப்ராகோலியைத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காயைப் போடவும். பொரிந்ததும் வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். லேசாக சிவந்ததும் ப்ராகோலி, பட்டர் பீன்ஸைப் போடவும். கிளறிவிட்டு பச்சை மிளகாய் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் சேர்த்து மூடி 5 நிமிடம் சிம்மில் வேகவிடவும். இதில் அரிசியையும் அரைத்து வடிகட்டிய தேங்காய் முந்திரித் தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ( அதிகம் வெந்தால் ப்ராகோலி குழைந்துவிடும் ) புதினா கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.

ஞாயிறு, 7 நவம்பர், 2021

10.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

10.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

 


தேவையானவை :- வேப்பம்பூ – 1 கைப்பிடி, எலுமிச்சை – 1., நெய் – 1 டீஸ்பூன், மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 டீஸ்பூன், பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப், கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன்., வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – ½ டீஸ்பூன், கொத்துமல்லித் தழை அரிந்தது – 1 டீஸ்பூன்

 


செய்முறை:- நெய்யைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் வெந்தயம் சீரகம் போட்டு பொரிந்ததும் அதிலேயே இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை போடவும். அதில் வேப்பம்பூவைப் போட்டுப் புரட்டி வறுத்து பருப்பு கடைந்த தண்ணீரை ஊற்றவும். அதில் மிளகு சீரகத்தூளையும் மஞ்சள் பொடியையும் உப்பையும் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கி ஒரு எலுமிச்சையை விதையில்லாமல் சாறு பிழிந்து சேர்த்து கொத்துமல்லித் தழை போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து உபயோகிக்கவும்

 

புதன், 3 நவம்பர், 2021

9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி

9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி

 


தேவையானவை :- வேப்பம்பூ - காயவைத்தது 2 கைப்பிடி, பாசிப்பருப்பு - 1 கைபிடி, வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன், தாளிக்க:-, நெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 இரண்டாக கிள்ளி வைக்கவும்.

 

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவைக்கவும். அதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது நெய்யில் கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய், வேப்பம்பூ ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் போடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும். நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றவும். இதில் உப்பு, புளிப்பு, கசப்பு இனிப்பு காரம் எல்லாம் இருக்கும்

 
Related Posts Plugin for WordPress, Blogger...