எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

புதினா எலுமிச்சை ஜூஸ்

புதினா எலுமிச்சை ஜூஸ்


தேவையானவை:- புதினா - ஒரு கைப்பிடி, எலுமிச்சை - அரை மூடி, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - கால் துண்டு, பனங்கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது ஜீனி - 2 டீஸ்பூன். 

செய்முறை :- பச்சை எலுமிச்சையாக இருந்தால் அதைத் தோலோடு கால்பாகம் சீவி அரைக்கலாம். இல்லாவிட்டால் பழமாக இருந்தால் எலுமிச்சையைச் சாறு பிழிந்து பயன்படுத்தலாம். மிக்ஸியில் எலுமிச்சை அல்லது சாறுடன் புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், பனங்கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது ஜீனி போட்டு நன்கு அடித்துக் குடிக்கலாம்

மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம். ஜீனி, வெல்லம், பனங்கல்கண்டுக்குப் பதிலாக உப்பு சேர்த்தும் அரைக்கலாம். புத்துணர்வு தரும் ஜூஸ் இது. 
 

புதன், 23 பிப்ரவரி, 2022

பனீர் கிரேவி

பனீர் கிரேவி


தேவையானவை:-பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் (அரைத்தது) - 1, பெரிய தக்காளி (அரைத்தது ) - 1, இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், மல்லி பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், சீனி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :- பனீரை 1 இஞ்ச் அளவு துண்டுகளாக செய்யவும். எண்ணெயைக் காயவைத்து அரைத்த வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அதுவும் சிவக்கையில் மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப் பொடி., கரம் மசாலா பொடி ., உப்பு ., ஜீனி போடவும். தக்காளி விழுதை சேர்த்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் .பனீர் துண்டுகளைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 7 முதல் 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் சமைக்கவும். சப்பாத்தியோடு பரிமாறவும். 
சப்பாத்தி அல்லது நான் கூட சூடாக பரிமாறவும்.
 

திங்கள், 21 பிப்ரவரி, 2022

நண்டுக் குழம்பு

நண்டுக் குழம்பு


தேவையானவை:- நண்டு - 2 ஜோடி,  பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, வரமிளகாய் - 8, தேங்காய் - கால் மூடி, சோம்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 2, உப்பு - 2 டீஸ்பூன்.  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- நண்டை சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும். ( ரொம்ப நேரம் வைக்கக் கூடாது ) சுத்தம் செய்து உடனே சமைக்க வேண்டும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், வரமிளகாய், சோம்பு, சீரகம் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டை மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சோம்பு தாளித்து வெங்காயம் தக்காளியை வதக்கவும். இரண்டும் வதங்கியதும் நண்டைப் போட்டுத் திறக்கி அரைத்த மசாலாவைப் போட்டு நன்கு கிளறவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். கொதி வந்ததும் ஐந்து நிமிட கழித்து உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.  

   

புதன், 16 பிப்ரவரி, 2022

செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு

செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு


தேவையானவை:- கோழி - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 20, பூண்டு - 10 பல், தக்காளி - 1, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- சோம்பு, சீரகம் - தலா அரைடீஸ்பூன்,  பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய்  - தலா 1, கருவேப்பிலை - 1 இணுக்கு,  வறுத்து அரைக்க :- வரமிளகாய் 10, மல்லி - 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 2 பல், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:- கோழியைத் துண்டுகள் செய்து கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மசாலா சாமான்களை வறுத்து ஆறியதும் நீர் சேர்த்து அரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சோம்பு, சீரகம், பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும் கருவேப்பிலை போட்டு கோழியையும் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த மசாலாவைப் போடவும். நன்கு திறக்கி விட்டு 3 கப் நீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து சார்ந்ததும் இறக்கவும். குக்கரில் ஒரு சவுண்ட் கோழியை வேகவைத்து எடுத்தும் இப்படிக் குழம்பு வைக்கலாம். ஆனால் கோழி கரைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

காலிஃப்ளவர் மஞ்சூரியன்


தேவையானவை :- காலிஃப்ளவர் - 1 , குடைமிளகாய் – 1 பெரிய வெங்காயம் – 1. சோயா சாஸ் – 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் , க்ரீன் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்,  உப்பு –அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை, மைதா – 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளோர் – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- காலிஃப்ளவரைப் பூக்களாகப் பிரித்து வெந்நீரில் உப்புப் போட்டுஇரு நிமிடம் வைக்கவும். வெங்காயம் குடைமிளகாயைச் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காலிஃப்ளவரை நீரை வடிகட்டி எடுத்து உப்பு, இஞ்சி பூண்டு மிளகாய்ப் பொடி போட்டுப் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். மைதா, கார்ன்ஃப்ளோரை கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து பூக்களை அதில் நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இரண்டு ஸ்பூன் எண்ணெயைப்  பானில் காயவைத்து சதுரமாக வெட்டிய குடைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து உப்பு சீனி அஜினோமோட்டோ போட்டு ஹை ஃப்ளேமில் வதக்கவும். இதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ்  சேர்த்து சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கார்ன் ஃப்ளோரையும் சிறிது கரைத்து ஊற்றிக் கண்ணாடியாக வேகும்படி வைக்கவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் , பொரித்த காலிஃப்ளவர்  துண்டுகளைப் போட்டுக் கலக்கி இறக்கிப் பரிமாறவும்.
 

புதன், 9 பிப்ரவரி, 2022

வெஜ் பெப்பர் பாஸ்தா

வெஜ் பெப்பர் பாஸ்தா:-


தேவையானவை:- மிக்ஸ்ட் பாஸ்தா ( ஸ்பிரிங்க்,ஸ்பைரல், போவ்) - 1 கப்
காய்கறிக் கலவை ( காரட், பீன்ஸ்,காலிஃப்ளவர்,பட்டாணி, குடை மிளகாய் ) பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன், மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் - 2 டீஸ்பூன், அஜினோமோட்டோ - 1 சிட்டிகை அல்லது உப்பு - 1/2 டீஸ்பூன், சீனி - 1/4 டீஸ்பூன், வெள்ளை மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன், வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

செய்முறை:-பாஸ்தாக்களை தேவையான தண்ணீரில் நன்கு மென்மையாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் போட்டு அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அதில் காய்கறிக் கலவை, வெள்ளை மிளகுப் பொடி, அஜினோமோட்டோ அல்லது உப்பு போட்டு ஒரு நிமிடம் உச்சபட்ச தீயில் வதக்கவும். அதில் வேகவைத்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும். தீயிலிருந்து இறக்கி மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸைத் தெளித்துப் பரிமாறவும். 

 

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

வெல்லச் சீடை

வெல்லச் சீடை:-


தேவையானவை :- பச்சரிசி மாவு - 1 கப், தூள் வெல்லம் - அரைகப். பச்சரிசி மாவில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றிப் பிசைந்து ஒரு நாள் முழுதும் வைக்கவும். தேங்காய்த்துருவல் -  1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 1, எண்ணெய் - பொரித்தெடுக்க.

செய்முற:- வெல்லம் பச்சரிசி போட்ட மாவில் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து லேசாக நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துப் பெரிய சீடைகளாக உருட்டிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 
 

புதன், 2 பிப்ரவரி, 2022

மோதகம்

மோதகம்:- 


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு தலா கால் கப், கருப்பட்டி – கால் கிலோ, வெல்லம் – 50 கி. ஏலக்காய் – 2, நெய் – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வெதுப்பி கரகரப்பாகப் பொடிக்கவும். மூன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கருப்பட்டியையும் வெல்லத்தையும் நைத்துப் போடவும். அது கரைந்ததும் பாதி நெய்யை ஊற்றி இந்த மாவைக் கொட்டிக் கிளறி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். கட்டி தட்டாமல் கிளறி மாவு உருண்டு வெந்ததும் இறக்கி நெய்யில் முந்திரியைப் பொரித்துப் பொட்டு தேங்காய்த்துருவலை வதக்கி இதில் கொட்டி நன்கு பிசைந்து உருண்டைகள் செய்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...