எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2026

கருப்பட்டி மோதகம்

கருப்பட்டி மோதகம்


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு தலா கால் கப், கருப்பட்டி – கால் கிலோ, வெல்லம் – 50 கி. ஏலக்காய் – 2, நெய் – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வெதுப்பி கரகரப்பாகப் பொடிக்கவும். மூன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கருப்பட்டியையும் வெல்லத்தையும் நைத்துப் போடவும். அது கரைந்ததும் பாதி நெய்யை ஊற்றி இந்த மாவைக் கொட்டிக் கிளறி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். கட்டி தட்டாமல் கிளறி மாவு உருண்டு வெந்ததும் இறக்கி நெய்யில் முந்திரியைப் பொரித்துப் பொட்டு தேங்காய்த்துருவலை வதக்கி இதில் கொட்டி நன்கு பிசைந்து உருண்டைகள் செய்து ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். 

புதன், 26 ஆகஸ்ட், 2026

எள்ளு கருப்பட்டிப் பூரண கொழுக்கட்டை

எள்ளு கருப்பட்டிப் பூரண கொழுக்கட்டை


தேவையானவை. :- பச்சரிசி – 2 கப், கறுப்பு எள்ளு – 1 கப், கருப்பட்டி – கால் கப், வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- மேல்மாவு தயாரிக்க:- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைஸாக சிறிது தளர அரைக்கவும். பானில் நல்லெண்ணெயைக் காயவைத்து இந்த மாவைக் கொட்டி ஒட்டாத பதம் வரும் வரை சுருளக் கிளறவும். இறக்கி ஆறவிடவும் பூரணம் தயாரிக்க:- எள்ளைக் களைந்து கல் நீக்கி உலரவைத்து வெறும் வாணலியில் பொரிக்கவும். பொறிந்ததும் இறக்கி கருப்பட்டி வெல்லத்தைத் தூள் செய்து பொடித்துப் போடவும். ஏலப்பொடி சேர்க்கவும். இதை நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்து வைக்கவும். மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து சொப்பு செய்து இந்த உருண்டைகளை வைத்து மூடி இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைக்கவும்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

கருப்பட்டி ஆப்பம். தேங்காய்ப் பால்

கருப்பட்டி ஆப்பம். தேங்காய்ப் பால்


தேவையானவை :- பச்சரிசி – 2 கப், புழுங்கல் அரிசி – 2 கப், வெள்ளை உருண்டை உளுந்து – அரை கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்., கருப்பட்டி – கால் கிலோ, உப்பு – 1 டீஸ்பூன், தேங்காய் – 1, சீனி – 100 கி, ஏலக்காய்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து துவரம் பருப்பு வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நைஸாக அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். கருப்பட்டியை நைத்து அரை கப் தண்ணீரில் கரைய வைத்து வடிகட்டி மாவில் சேர்க்கவும். நன்கு தண்ணியாகக் கரைத்து ஆப்பச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஸ்லாத்தினாற்போலச் சுழற்றி மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும். திருப்பிப் போட வேண்டாம். ஒரு தேங்காயை உடைத்துத் திருகிப் பால் எடுத்து 100 கிராம் சீனி ஏலத்தூள் கலந்து ஆப்பத்தில் ஊற்றி உபயோகிக்கவும். 

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்


தேவையானவை :- சிவப்பரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ¼ கப், பனை வெல்லம் – 2 அச்சு, பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி), பால் – ½ கப், ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் ), நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – 10.

செய்முறை:- பொங்கல் தவலையில் பாலும் சிவப்பரிசி களைந்த நீரும் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். பால் பொங்கி வந்ததும் அதில் சிவப்பரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். சிறிது தண்ணீரில் வெல்லத்தையும் பனங்கருப்பட்டியையும் நைத்துப் போட்டு சூடுபடுத்தி கரைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி நன்கு கிளறிவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

ஹெல்த் ட்ரிங்

.ஹெல்த் ட்ரிங்


தேவையானவை:- காரட் – 1 , வாழைப்பழம் – 1 , கிவி 1 , ஆப்பிள் – பாதி, பைனாப்பிள்- ஒரு ஸ்லைஸ், ஐஸ் க்யூப்- 10,  நுங்கு - 3, இளநீர் -1 இளநீர் வழுக்கையுடன், கிஸ்மிஸ் -10  .

செய்முறை:- காரட்டைத் துருவவும். இதில் வாழைப்பழம் கிவி ஆப்பிள் பைனாப்பிளைத் தோல்சீவிப் பொடியாக அரிந்து போட்டு , கிஸ்மிஸையும் போட்டு நுங்கைத் தோலுரித்து வெட்டிப் போட்டு, இளநீரை வழுக்கையுடன் சேர்த்து அரைக்கவும் சிறிது சிறிதாக இளநீரையும் ஐஸ் கட்டிகளையும் போட்டு நன்கு அடித்துக் குளிரக் குளிரப் பரிமாறவும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

நுங்குப் பாயாசம்

நுங்குப் பாயாசம்


தேவையானவை:- இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன். அரிசி மாவு – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பாலைக்காய்ச்சி அதில் சிறிது எடுத்து அரிசி மாவு சேர்த்துக் கரைத்துத் திரும்பப் பாலில் ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதில் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் ஏலப்பொடி போடவும். இளநுங்கை நீருடன் கையால் மசித்தோ அல்லது மிக்ஸியில் விப்பர் செய்தோ பாலுடன் நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

அவிச்ச பனங்கிழங்கும் கட்ட சம்பலும்

அவிச்ச பனங்கிழங்கும் கட்ட சம்பலும்


தேவையானவை:- பனங்கிழங்கு – 4, சம்பல் செய்ய:- வரமிளகாய் – 8, சின்ன வெங்காயம் – 12, எலுமிச்சை அரை மூடி, கல் உப்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை:- பனங்கிழங்குகளைத் தோலுரித்துக் குக்கரில் வேகவைத்து எடுத்து உள் தோலையும் உரித்துக் கட்டம் கட்டமாக நார் நீக்கி வைக்கவும். வரமிளகாயுடன் கல் உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து மிக்ஸியில் கொர கொரவென அரைத்து எடுக்கவும். அவித்த பனங்கிழங்குத் துண்டங்களுடன் இந்த சம்பலைத் தொட்டுச் சாப்பிடலாம்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

பழம்பாணி

பழம்பாணி


தேவையானவை:- வாழைப்பழம் – 8, வட்டக் கருப்பட்டி – 100 கி, ஏலக்காய் – 4, சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- வட்டக் கருப்பட்டியை நைத்துத் தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும். இதில் ஏலக்காயையும் சீரகத்தையும் வறுத்துப் பொடித்துப் போடவும். இரண்டு வாழைப்பழங்களை மசித்து இந்தக் கருப்பட்டித் தண்ணீரில் போட்டுக் காய்ச்சவும். இதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதற்குக் கருப்பணிப் பாகு என்று பெயர். மிச்ச வாழைப்பழங்களைத் தோலுரித்து வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும். ஆறிய கருப்பணிப் பாகை இந்த வாழைப்பழங்களின் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

பனாட்டு

பனாட்டு


தேவையானவை:- பனம்பழம் – 3

செய்முறை:- பனம்பழங்களை கேஸ் அடுப்பில் மிதமான தீயில் சுட்டுத் தோலை உரிக்கவும். அதன் கூழைப் பிழிந்து நாரை நீக்கி வடிகட்டவும். இரண்டு தட்டுக்களில் எண்ணெய் தடவி இந்தக் கூழை ஸ்பூன் மூலம் தட்டுக்களில் மெல்லியதாகப் பரப்பி இரண்டு நாட்கள் வெய்யிலில் காயவைத்து எடுக்கவும். தகடு போல் ஆன பின் இதைத் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கருப்பட்டிப் பாயாசம்

கருப்பட்டிப் பாயாசம்


தேவையானவை :- பச்சரிசி – ஒரு கைப்பிடி, தேங்காய்த்துருவல் – ஒரு கைப்பிடி கருப்பட்டி – ஒரு கட்டி, நெய் – அரை டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10

செய்முறை:- பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவலோடு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துப் பானில் ஊற்றிக் காய்ச்சவும். வெந்து கண்ணாடி போல் ஒட்டாத பதம் வந்ததும் கருப்பட்டியை நைத்து சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...