ஞாயிறு, 31 ஜூலை, 2022

சுக்குடிக்கீரை கழனிச்சாறு

சுக்குடிக்கீரை கழனிச்சாறு


 

தேவையானவை:- மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டுசின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்எண்ணெய் - 2 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்,சீரகம் - 1/2 டீஸ்பூன்வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:- கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும்கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும்சீரகம் போட்டுப் பொறிந்ததும்வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும்ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு சேர்த்து இறக்கவும்இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.

 

வியாழன், 28 ஜூலை, 2022

ஆலு மேத்தி

ஆலு மேத்தி


 

தேவையானவை :- அவித்த உருளைக்கிழங்கு – 2, வெந்தயக் கீரை – 1 கட்டு, மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்- 3 டீஸ்பூன்,சீரகம் – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரிந்தது.

 

செய்முறை:- அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து உதிர்த்து வைக்கவும். வெந்தயக் கீரையை அலசிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துச் சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயக்கீரையைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள்சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் உதிர்த்த உருளையைச் சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 24 ஜூலை, 2022

துளசி ரொட்டி

துளசி ரொட்டி

 


தேவையானவை :- புழுங்கல் அரிசி – 2 கப், பச்சரிசி – 1 கப், சீரகம் – 1 டீஸ்பூன், துளசி – ஆய்ந்தது ½ கப், சின்ன வெங்காயம் – 6 பொடியாக நறுக்கவும்., உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.

 

செய்முறை:-பச்சரிசி புழுங்கல் அரிசி இரண்டையும் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். கெட்டியாக அரைத்து ஒரு துணியில் போட்டு வைக்கவும். துளசியைக் கழுவி கெட்டியாக அரைக்கவும். மாவை ஒரு பேசினில் போட்டு அரைத்த துளசி, சீரகம் ( கையால் கசக்கிப் போடவும். ). பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவிய ஷீட்டில் ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 21 ஜூலை, 2022

கோஸ் சௌமின்

கோஸ் சௌமின்


 

தேவையானவை:- பச்சை முட்டைக் கோஸ் இலைகள் ஆறு, சைனீஸ் நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம் – 2, சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், க்ரீன் சில்லி சாஸ் – 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன். சீனி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- சைனீஸ் நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து வடிகட்டவும். பச்சை நிற முட்டைக் கோஸின் இலைகளையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். கைப்பிடி உள்ள அகலமான பேனில் எண்ணெயைக் காயவைத்து ஹைஃப்ளெமில் வெங்காயம், பச்சை முட்டைக் கோஸ், உப்பு, சீனி, நூடுல்ஸ், க்ரீன் சில்லி சாஸ், தக்காளி சாஸ், கடைசியாக சோயா சாஸ் இந்த வரிசையில் போட்டு பானை நன்கு குலுக்கி விட்டு வேகவைத்து எடுக்கவும்.  

 

சனி, 16 ஜூலை, 2022

சோம்பு இலை ரொட்டி

சோம்பு இலை ரொட்டி


 

தேவையானவை :- அரிசி மாவு – 1 கப், சோம்பு இலை – ஆய்ந்தது ½ கப், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கேரட் திருகியது – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன் , தயிர் – அரை கப், எண்ணெய் – 20 மிலி.


 

செய்முறை:- கடலைப்பருப்பை கழுவிப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். அரிசி மாவை ஒரு பேஸினில் போட்டுப் பெருங்காயம், உப்பு, சீனியைப் போட்டுக் கலக்கவும். சோம்பு இலையைப் பொடியாக அரிந்து போடவும். பச்சைமிளகாய் சீரகத்தைக் கொரகொரப்பாக இடித்துச் சேர்க்கவும்.  பொடியாக அரிந்த வெங்காயம், தயிரைச் சேர்க்கவும். கடலைப்பருப்பை நீரில்லாமல் போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து ரொட்டிகளாக தட்டிச் சுட்டெடுத்துத் தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 14 ஜூலை, 2022

வெங்காயத்தாள் பச்சடி

வெங்காயத்தாள் பச்சடி


 

தேவையானவை :- பாசிப்பருப்பு - 1கப், வெங்காயத்தாள் – 1 கட்டு, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு -  1 டீஸ்பூன், புளி – 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1இணுக்கு, கொத்துமல்லித்தழை - சிறிது.

 


செய்முறை:- பாசிப்பருப்பை அரைகப் நீரில் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். வெங்காயத்தாள், தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வெந்த பருப்போடு சேர்க்கவும். பச்சைமிளகாய்களைக் கீறிப் போட்டு  மஞ்சள்பொடி , பெருங்காயத்துண்டு சேர்த்துவேகவிடவும்.ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் கடுகு, உளுந்து , சீரகத்தைத் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் பச்சடியில் சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் பொடியாக அரிந்த கொத்துமல்லியையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு சூடான இட்லிகளோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 10 ஜூலை, 2022

பாலக் பனீர்

பாலக் பனீர்


 

தேவையானவை:- பாலக்கீரை - 1 கட்டு, பனீர் - 1 பாக்கெட் ( வீட்டிலேயே ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி எலுமிச்சை ஒரு மூடி பிழிந்து திரிய வைத்து பனீர் தயாரித்துக் கொள்ளலாம்), சீரகம் - 1 டீஸ்பூன், பெரியவெங்காயம்  - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன், சீனி - 1/2 டீஸ்பூன், கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்


 

செய்முறை:- பாலக்கீரையை வேகவைத்து ஆறியதும் அரைத்து வைக்கவும். பனீரை சதுரத் துண்டுகள் செய்து எண்ணெயில் பொறித்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து எண்ணெயில் ப்ரவுனாக வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அதில்  தக்காளியை அரைத்துச் சேர்த்து சீனி, உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு வதக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும்போது அரைத்த பாலக்கீரையையும், பனீரையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி சப்பாத்தி நான், ருமாலி ரொட்டியுடன் பரிமாறவும். 

 

வியாழன், 7 ஜூலை, 2022

சேம்பு இலை உசிலி

சேம்பு இலை உசிலி


 

தேவையானவை:- சேம்பு இலை – 2, கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், சோம்புப் பொடி - 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும். , எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:- சேம்பு இலையைக் கழுவவும். கடலை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, சோம்புப் பொடி ,போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து இரு இலைகளிலும் சமமாகப் பரப்பவும். பின் சீராகச் சுருட்டி நூலில் கட்டி ஆவியில் வேகவைத்து ஆறியதும் நூலைப் பிரித்து வட்ட வட்டமாக வெட்டவும். ஒருபெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சேம்புக் கலவையையும் சேர்த்து வதக்கி உதிர் உதிராக வந்ததும் இறக்கவும்.


 

ஞாயிறு, 3 ஜூலை, 2022

பொன்னாங்கண்ணிப் பொரியல்

பொன்னாங்கண்ணிப் பொரியல்



 

தேவையானவை:- பொன்னாங்கண்ணிக்கீரை - 1 கட்டு ( கழுவி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்),  பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), வரமிளகாய் – 1, கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்உப்பு - 1/4 டீஸ்பூன்எண்ணெய் - 1 டீஸ்பூன்வேகவைத்த துவரம் பருப்பு  - 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும்அது வெடித்தவுடன் உளுந்து போடவும்அது சிவந்தவுடன் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., வெங்காயம் போடவும்ஒரு நிமிடம் வதக்கிய பின் பொன்னாங்கண்ணிக் கீரையைச் சேர்க்கவும். 3 நிமிடங்கள் வதக்கியபின் உப்பு சேர்க்கவும்மெல்லியதீயில் இன்னும் 5 நிமிடங்கள் வேகவைத்து வெந்த பருப்பைப் போட்டு நன்கு கலந்து இறக்கவும்.