சனி, 29 ஜூன், 2024

7.ஜெர்மன் பெர்லினர் டோநட்ஸ்

7.ஜெர்மன் பெர்லினர் டோநட்ஸ்



தேவையானவை:- மைதா – 3 கப், சீனி – அரை கப், ஈஸ்ட் – 2 ¼ டீஸ்பூன், பால் – கால் கப், எலுமிச்சங்காய் தோல் துருவியது – 1 டீஸ்பூன், பால் – 2/3 கப், முட்டை – 1, முட்டை மஞ்சள் கரு – 2, வெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், வினிகர் – 1 டேபிள் ஸ்பூன், வனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. பொடித்த சீனி – 1 கப்.

செய்முறை:- மைதாவை ஒரு பெரிய பௌலில் போட்டு சீனி, ஈஸ்ட், பால் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது நேரம் மூடி வைத்திருந்து அதில் எலுமிச்சைத் தோலைத் துருவிச் சேர்த்து, பால், முட்டை, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், உப்பு, வினிகர் வனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸரால் நன்கு பிசையவும். மிருதுவானதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்து சிறிது தட்டி பட்டர் பேப்பரில் வைத்து மூடி வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சீனிப்பொடியில் புரட்டிப் பரிமாறவும்.

வியாழன், 27 ஜூன், 2024

6..ஆப்பிள்குக் (ஆப்பிள் கேக்)

6..ஆப்பிள்குக் (ஆப்பிள் கேக்)



தேவையானவை:- மைதா – 2 1/2 கப், பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா – ¾ டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், பொடித்த பட்டை – 2 டீஸ்பூன், பொடித்த ஜாதிக்காய் – அரை டீஸ்பூன், பொடித்த இஞ்சி மற்றும் ஸ்பைசஸ் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், சீனி – அரை கப், பொடித்த வெல்லம் – அரை கப், ஆப்பிள் சாஸ் (இனிப்பில்லாதது) – 1 கப்,முட்டை -4, வனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன், ஆரஞ்ச் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன், அரை இஞ்ச் துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் – 3 கப்

செய்முறை:- அவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும். பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி வைக்கவும். மைதாவில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, பட்டை, ஜாதிக்காய், இஞ்சி, ஸ்பைசஸ் ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டுக் கலக்கவும். எண்ணெய், பொடித்த சர்க்கரை, வெல்லம், ஆப்பிள் சாஸ், முட்டை, வனிலா எஸன்ஸ், ஆரஞ்ச் ஜூஸ் ஆகியவற்றை இன்னொரு பௌலில் போட்டு அடிக்கவும். இரண்டு பவுலில் இருப்பதையும் ஒன்று சேர்த்து நன்கு கலக்கி ஆப்பிள் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பானில் பரப்பி 45 – 50 நிமிடங்கள் பேக் செய்யவும். வெந்தது டூத் பிக்கால் குத்திப் பார்த்து இறக்கி ஆறியதும் துண்டுகள் செய்து பரிமாறவும்.

திங்கள், 24 ஜூன், 2024

5.ஃப்ரென்ச் மக்ரூன்

5.ஃப்ரென்ச் மக்ரூன்


தேவையானவை :- முட்டையின் வெண்கரு – 2, சீனி - 150கி, முந்திரி – 125 கி, உப்பு – ஒரு சிட்டிகை, வனிலா எஸன்ஸ் – சில துளிகள்.

செய்முறை:- முதலில் முட்டையின் வெண்கருவை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 நிமிடம் நன்கு அடிக்கவும். சீனியைப் பொடிக்கவும். அதில் ஒரு ஒரு ஸ்பூனாக பொடித்த சீனியைப் போட்டு அடிக்கவும். முந்திரியைக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். சீனி முட்டைக் கலவையில் பொடித்த முந்திரி, உப்பு, வனிலா எஸன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பைபிங் பையில் ஸ்பூன் செய்து வெண்ணெய் பேப்பர் வைத்த ட்ரேயில் மக்ரூன்களை பைப் செய்யவும். முற்சூடு செய்த அவனில் 100 டிகிரி செண்டிகிரேடில் 90 நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும். 

புதன், 19 ஜூன், 2024

4.பிசி பிசி

4.பிசி பிசி


தேவையானவை:- தண்ணீர் – 2 ½ கப், கார்ன் ஸ்டார்ச் – ½ கப், ஐஸ் – 4 கப். சிரப் செய்ய – தண்ணீர் – 1 கப், பொடித்த சர்க்கரை – ½ கப், தர்ப்பூஸ் – 1 கப், ரோஸ் வாட்டர் – கால் கப்.

செய்முறை:- ஒரு பேனில் கார்ன் ஸ்டார்ச் போட்டு இரண்டரைக் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அடுப்பில் வைத்துத் திக்காகும் வரை கிளறவும். ஒரு செவ்வக பாத்திரத்தை ஐஸ் தண்ணீரால் கழுவி அதில் இந்த புட்டிங்கை ஊற்றி செட்டாகும் வரை வைக்கவும். ஒரு கப் தண்ணீரில் பொடித்த சர்க்கரை, தர்ப்பூஸ், ரோஸ் வாட்டர் ஊற்றி மிக்ஸியில் மென்மையாகும்வரை நன்கு அடித்து சிரப் செய்யவும். புட்டிங்கை சிறிய துண்டுகளாக வெட்டி கப்புகளில் போடவும். 4 கப் ஐஸை ஸ்நோ போல் ஆகும்வரை ஃபுட் ப்ராஸஸரில் போட்டு அடிக்கவும். புட்டிங்கின் மேல் ஸ்நோவைப் பரப்பி அதன் மேல் ஃப்ரூட் சிரப்பை ஊற்றவும். வாழைப்பழம், தர்ப்பூசணித் துண்டுகள், புதினா இலைகள் வைத்துப் பரிமாறவும்.

திங்கள், 17 ஜூன், 2024

3.பாலக் லசான்யா

3.பாலக் லசான்யா



தேவையானவை:- லசான்யா நூடுல்ஸ் ஷீட் – 1 பாக்கெட், பாலக் கீரை – 1 கட்டு, வெங்காயம் – 1 , பூண்டுப்பல் - 4, வெண்ணெய் – 4 க்யூப்ஸ், ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மைதா – 1 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை, முட்டை – 1. பனீர் & பரமேசன் சீஸ் – அரை பாக்கெட்.

செய்முறை:- லசான்யா பாஸ்டா ஷீட்டுக்களை வெந்நீரில் கொதிக்க வைத்துக் குளிர்ந்த நீரில் வடிகட்டி நீரில்லாமல் உலரவைக்கவும். ஒரு பானில் இரண்டு க்யூப் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போட்டுப் பொடியாக அரிந்த பூண்டு, வெங்காயம், பாலக் கீரை போட்டு, சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பனீரைத் துருவவும். இரண்டு க்யூப் வெண்ணெயில் மைதாவை வறுத்துப் பால் ஊற்றிக் கொதிக்க விட்டு உப்பு மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். இது வொயிட் சாஸ். பனீரையும் பரமேசன் சீஸையும் உப்பு, ஜாதிக்காய், முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும். வெந்த பாலக்கையும் நன்கு அரைத்து நீரை வடியவிட்டு இத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். லசான்யா செய்யும் பேக்கிங் ட்ரேயில் முதலில் வொயிட் சாஸ், அதன் மேல் வெந்த லசான்யா நூடுல்ஸ் ஷீட், அதன் மேல் அரைத்த பாலக், வொயிட் சாஸ், என்ற வரிசையில் 12 தடவைகள் தடவி அடுக்கி மேலே காட்டேஸ் சீஸைத் தூவி மிச்ச வொயிட் சாஸையும் ஊற்றி சில்வர் ஃபாயிலால் மூடி முற்சூடு செய்த அவனில் 30 – 40 நிமிடங்கள் வைத்துப் பொன்னிறமானதும் கட் செய்து பரிமாறவும். 

சனி, 15 ஜூன், 2024

2.குனாஃபா

2.குனாஃபா



தேவையானவை:- சேமியா – 300 கிராம், வெண்ணெய் – அரை கப், பால் – ஒருகப், சீனி – ஒரு டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் – அரை டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன், ஏதேனும் ஒரு சீஸ் – 100 கிராம், கேசரி கலர் – 1சிட்டிகை, சர்க்கரைப் பாகு தயாரிக்க :- தண்ணீர் – அரை கப், சீனி – அரை கப். பொடித்த பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- சேமியாவை ஒரு பெரிய பேஸினில் கொட்டி நான்கு டேபிள் ஸ்பூன் வெண்ணையை உருக்கி ஊற்றி கேசரி கலரையும் போட்டு நன்கு கிளறவும். சிறிய பேனில் வெண்ணெய் தடவி பாதி சேமியாவைப் பரப்பவும். இன்னொரு பானில் ஒரு கப் பாலைக் காய்ச்சிச் சீனி சேர்த்துக் கொதிக்கும்போது கார்ன்ஃப்ளோரைக் கரைத்து ஊற்றவும். அது கெட்டியாகும்போது சீஸைத் துண்டுகள் செய்து போட்டு ரோஸ் வாட்டர் கலந்து இறக்கவும். இதைப் பானில் பரத்திய சேமியாவின் மேல் ஊற்றி மிச்ச சேமியாவை அதன் மேல் போட்டு சீராக அமுக்கவும். இதனைப் பானோடு அடுப்பில் ஒரு நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன்பின் ஒரு அப்பளம் சுடும் ஸ்டாண்டின் மேல் சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். ஒரு புறம் சிவந்ததும் வெண்ணெய் தடவிய இன்னொரு பானில் மாற்றி இதே போல் ஒருநிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன் பின் அப்பள ஸ்டாண்டில் வைத்து சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். அரை கப் தண்ணீரில் அரை கப் ஜீனி போட்டுக் கம்பிப் பாகு காய்ச்சவும். குனாஃபாவில் இந்த ஜீராவைச் சீராக ஊற்றிப் பொடித்த பிஸ்தாவைத் தூவி அலங்கரித்துத் துண்டுகள் செய்து பரிமாறவும்.

புதன், 12 ஜூன், 2024

1.பஹ்க்லாவாஹ்

1.பஹ்க்லாவாஹ்


தேவையானவை:- பேஸ்ட்ரி ஷீட்ஸ் – 1 பாக்கெட், பொடித்த நட்ஸ் – ஒரு கப், வெண்ணெய் – 1 கப், பொடித்த பட்டை – 1டீஸ்பூன், தண்ணீர் – 1கப், சீனி – 1 கப், வனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன், தேன் – அரை கப்

செய்முறை:- ஓவனை 350 டிகிரி செண்டிகிரேடுக்கு முற்சூடு செய்யவும். பேக் செய்யும் பானில் வெண்ணெய் தடவவும். பேஸ்ட்ரி ஷீட்டைப் பிரித்து பான் அளவுக்கு வெட்டி விரிக்கவும். அதன் மேல் வெண்ணெய் தடவி இன்னொரு ஷீட்டைப் பரப்பவும். இப்படியே 8 லேயர் செய்யவும்.இதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் நட்ஸ், பட்டைக் கலவையைப் பரப்பவும். அதன் மேல் இரண்டு லேயர் பேஸ்ட்ரி ஷீட்டுக்களை வெண்ணெய், நட்ஸ் கலவையைப் பரப்பி மூடவும். கூர்மையான கத்தியால் டயமண்ட் ஷேப்பில் வெட்டி அவனில் 50 நிமிடங்கள் வைத்துப் பொன்னிறமானதும் எடுக்கவும். தண்ணீர், சீனி சேர்த்துப் பாகு காய்ச்சி, வனிலா எசன்ஸ், தேன் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி பஹ்க்லாவாஹின் மேல் ஊற்றிக் குளிரவைத்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 9 ஜூன், 2024

பொங்கல் 20 விதம்

 இந்தப் பொங்கல் ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 




பொங்கல் 20 விதம்

1.திணையரிசி சர்க்கரைப் பொங்கல்

2.வெண்பொங்கல்

3.அக்கார அடிசில்

4.பாற்சோறு

5.சீரகச்சம்பா மாம்பழப் பொங்கல்

6.மிளகி அரிசி அன்னாசிப் பொங்கல்

7.குறுவை அரிசி தக்காளிப் பொங்கல்

8.வரகரிசிப் பொங்கல்

9.சாமை அரிசி இனிப்புப் பொங்கல்

10.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்

12.கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல்

13.குங்குமப்பூ இனிப்பு சாதம்

14.குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்

15.காரட் பீட்ரூட் வெல்லப் பொங்கல்

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்

17.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்

18.சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்

19.பால் பொங்கல்

20.ஜவ்வரிசிப் பொங்கல்

இந்த ரெசிப்பீஸ் 12.1.2024 குமுதம் சிநேகிதியில் வெளியானவை.  

திங்கள், 3 ஜூன், 2024

20.ரஸ்க் பனீர் கோலா

20.ரஸ்க் பனீர் கோலா



தேவையானவை:- ரஸ்க் – 10, பனீர் – 5 கிராம், துருவிய வெங்காயம், சிவப்பு, பச்சை குடைமிளகாய்கள் – கால் கப், துருவிய சீஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், மைதா – கால் கப். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- ரஸ்கைப் பொடிக்கவும். பனீரைத் துருவவும். ஒரு பௌலில் ரஸ்க், பனீர், துருவிய சீஸ், வெங்காயம், சிவப்பு பச்சைக் குடைமிளகாய்கள், மிளகுத்தூள், மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். லேசாகத் தண்ணீர் தெளித்து கோலா உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்