திங்கள், 30 செப்டம்பர், 2024

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்


 

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – 1 கப், தக்காளி – 1, பெரியவெங்காயம் – 1 ,சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன். நெய் – 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- பச்சரிசி பாசிப்பருப்பைக் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றவும். இதில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் தக்காளியை சின்னத் துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும் பட்டாணியையும் போடவும். பச்சைமிளகாயைக் கீறிப் போடவும். குக்கரில் இரண்டு விசில் வேகவைத்து இறக்கவும். உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். நெய்யில் உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் , முந்திரி, கருவேப்பிலை வறுத்துப் பொங்கலில் கொட்டிக் கிளறி இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து உபயோகிக்கவும்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

15.காரட் பீட்ரூட் வெல்லப் பொங்கல்

15.காரட் பீட்ரூட் வெல்லப் பொங்கல்

 

தேவையானவை :- காரட் – 1 சின்னம், பீட்ரூட் – 1 சின்னம், பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு + கடலைப்பருப்பு – தலா கால் கப், மண்டை வெல்லம் – துருவியது ஒரு கப், வனிலா எஸன்ஸ் – சில துளிகள், பால் – 4 கப். நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10,

 

செய்முறை :- பச்சரிசியைக் களைந்து பாசிப்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து இரண்டு கப் பால் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் சன்னமாகத் துருவிய காரட் பீட்ருட்டை வதக்கவும். நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் 2 கப் பால் ஊற்றி குக்கரில் இருக்கும் சாதத்தில் போட்டுத் திரும்பவும் இரண்டு விசில் வேகவைத்து எடுத்து நன்கு மசிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவிச் சேர்க்கவும். நன்கு கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வனிலா எஸன்ஸையும் வறுத்த முந்திரி கிஸ்மிஸையும் சேர்த்து இன்னும் சிறிது நெய் விட்டுப் பரிமாறவும்.

புதன், 25 செப்டம்பர், 2024

14.குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்

14.குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்


தேவையானவை :- குதிரைவாலி அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – ஒரு கப், பால் – சிறிது, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை, கிராம்பு – 1 நெய் –  2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

 

செய்முறை :- குதிரைவாலி அரிசியுடன் பாசிப்பருப்பை சேர்த்துக் களைந்து கல்லரித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரை வைத்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். நன்கு மசித்து வெல்லத்தைச் சேர்க்கவும். அடுப்பில் வைத்துக் கிளறி வெல்லம் கரைந்ததும் இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போட்டு ஏலப்பொடி பொடித்த கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.

சனி, 21 செப்டம்பர், 2024

13.குங்குமப்பூ இனிப்பு சாதம்

13.குங்குமப்பூ இனிப்பு சாதம்


 

தேவையானவை :- பாசுமதி அரிசி – 1 கப், குங்குமப்பூ – 2 கி, பால் – 2 கப், சீனி – 2 ஸ்பூன்., உப்பு – 1 சிட்டிகை., நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 6, கிஸ்மிஸ் – 6, பட்டை  இலை – 1 சிறுதுண்டு, ஏலக்காய் – 3, கிராம்பு – 1, ஆப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6, பைனாப்பிள் – ½ இன்ச் துண்டுகள் - 6.

 

செய்முறை:- பாதாம் முந்திரியை ஊறவைத்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் ஊற்றி குக்கரில் வேகப் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை சூடுபடுத்து குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும். பாசுமதி அரிசி வெந்ததும் உதிர்த்துக்கொள்ளவும். பானில் நெய்யைக் காயவைத்து பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதில் முந்திரி பாதாமைப் போட்டு வதக்கி கிஸ்மிஸ், ஆப்பிள் பைனாப்பிளை சேர்க்கவும். உப்பையும் சீனியையும் சேர்த்து பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும். வேகவைத்த பாசுமதி சாதத்தையும் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து உபயோகப் படுத்தவும்.

வியாழன், 19 செப்டம்பர், 2024

12.கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல்

12.கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல்


 

தேவையானவை :- கோதுமை ரவை – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, முளைகட்டிய பயறு – ½ கப் ( ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு, ஒரு டீஸ்பூன் பச்சைப் பட்டாணி, ஒரு டீஸ்பூன் கொண்டைக்கடலையை ஊறவைத்து துணியில் கட்டி முளை விடச் செய்யவும் ), துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்., பச்சைமிளகாய் – 1, இஞ்சி – 1 இன்ச் துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், நெய் –2 டீஸ்பூன், முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு

 

செய்முறை :- கோதுமைரவையையும் பாசிப்பருப்பையும் வறுத்து 31/2  கப் தண்ணீர் சேர்த்து முளைகட்டிய பயறுவகைகளையும் தேங்காய்த் துருவல், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகப் போடவும். இறக்கி சூடாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்து, மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கலந்துவிட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின் உபயோகிக்கவும்.

புதன், 18 செப்டம்பர், 2024

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்


 

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், தேங்காய் – 1, கற்கண்டு – 150 கி, ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )., பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை.

 

செய்முறை:- தேங்காயை அரைத்து மூன்று பால் எடுக்கவும். மூன்றாம் பால் இரண்டு கப், இரண்டாம் பால் ½ கப் முதல் பால் திக்காக ¼ கப் எடுக்கவும். பச்சரிசியை லேசாக வறுத்துக் களைந்து மூன்றாம் பாலில் குக்கரில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்கு கரண்டியால் மசிக்கவும். அதில் கற்கண்டைப் பொடித்துப் போட்டு  இரண்டாம் பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். இறுகி வந்ததும் முதல் பாலையும் ஏலப்பொடியையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். இதற்கு முந்திரி கிஸ்மிஸ் விரும்பினால் நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

சனி, 14 செப்டம்பர், 2024

10.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

10.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல்

 

தேவையானவை :- சிவப்பரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ¼ கப், பனை வெல்லம் – 2 அச்சு, பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி), பால் – ½ கப், ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் ), நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – 10.

 

செய்முறை:- பொங்கல் தவலையில் பாலும் சிவப்பரிசி களைந்த நீரும் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். பால் பொங்கி வந்ததும் அதில் சிவப்பரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். சிறிது தண்ணீரில் வெல்லத்தையும் பனங்கருப்பட்டியையும் நைத்துப் போட்டு சூடுபடுத்திக் கரைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி நன்கு கிளறிவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

வியாழன், 12 செப்டம்பர், 2024

9.சாமை அரிசி இனிப்புப் பொங்கல்

9.சாமை அரிசி இனிப்புப் பொங்கல்




தேவையானவை:- சாமை  அரிசி  –  2 கப், பாசிப்பருப்பு -  ¼ கப், கடலைப்பருப்பு – ¼ கப், பால்  - 5 கப், ஜீனி – 1 கப், முந்திரிப்பருப்பு – 10, திராக்ஷை – 10., நெய் – ¼ கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

 

செய்முறை:- பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வெதுப்பவும். சாமை அரிசியையும் பருப்புகளையும் கழுவி குக்கரில் போட்டுப் பால் சேர்த்து ஓரளவு வெந்தவுடன் வெயிட் போட்டுக் குழைய வேக விடவும். ஆறியதும் திறந்து ஜீனி சேர்த்து நன்கு மசிக்கவும்.  நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். வாசனைக்கு ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

8.வரகரிசிப் பொங்கல்

8.வரகரிசிப் பொங்கல்




தேவையானவை:- வரகரிசி - 1 கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6.

செய்முறை:- வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி , பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்

வியாழன், 5 செப்டம்பர், 2024

7.குறுவை அரிசி தக்காளிப் பொங்கல்

7.குறுவை அரிசி தக்காளிப் பொங்கல்


தேவையானவை:- குறுவை அரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், பழுத்த தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, இஞ்சி - 1 இஞ்ச் துண்டு, உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், ஜீரகம் - 1 ஸ்பூன், நெய்+ எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- குறுவை அரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் போட்டு பொடியாக அரிந்த தக்காளி, பச்சை மிளகாய் , இஞ்சி , மிளகு , ஜீரகம், உப்பு போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்தபின் இறக்கி நன்கு மசிக்கவும். அதில் நெய்+ எண்ணெயைக் காயவைத்து முந்திரி கருவேப்பிலை தாளித்து போடவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

6.மிளகி அரிசி அன்னாசிப் பொங்கல்

6.மிளகி அரிசி அன்னாசிப் பொங்கல்




தேவையானவை:- மிளகி அரிசி - 1 கப், வெல்லம் - 1 1/2 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்., அன்னாசித் துண்டுகள் - 1 கப் மசிக்கவும், அன்னாசி எசன்ஸ் - 1/8 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, திராக்ஷை – 10, ஏலப்பொடி - 1 சிட்டிகை

 

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். எடுத்து மசித்து வெல்லம் சேர்த்து வேகவிடவும். மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் அன்னாசித்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும். அன்னாசி எசன்ஸ்., ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.