வியாழன், 29 ஜனவரி, 2026

ஜவ்வரிசிக் கேசரி

ஜவ்வரிசிக் கேசரி


தேவையானவை:- ஜவ்வரிசி – அரை கப், வெள்ளை ரவை – அரை கப், சர்க்கரை – 1 கப், நெய் – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:- ஜவ்வரிசியை சிறிது சிறிதாக வறுத்து அரை கப் நீரூற்றி வேகவைத்து எடுக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை வறுக்கவும். மிச்ச நெய்யில் ரவையைப் பொன்னிறமாக வறுத்து ஒரு கப் கொதிநீர் ஊற்றி வேகவிடவும். வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்துக் கிளறவும். அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கெட்டியானதும் ஏலத்தூள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலக்கி இறக்கவும்.

திங்கள், 26 ஜனவரி, 2026

கார்ன் கேசரி

கார்ன் கேசரி


தேவையானவை:- சோளமாவு – அரை கப், வெள்ளை ரவை – அரை கப், சர்க்கரை – 1 கப், நெய் – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

 

செய்முறை:- நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை வறுக்கவும். மிச்ச நெய்யில் ரவையைப் பொன்னிறமாக வறுத்து ஒரு கப் கொதிநீர் ஊற்றி வேகவிடவும். சோளமாவில் கால் கப் நீரூற்றிக் கரைத்து இதில் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்து இறுகியதும் ஏலத்தூள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலக்கி இறக்கவும்.

வெள்ளி, 23 ஜனவரி, 2026

தலியா(கோதுமை ரவை) கேசரி

தலியா(கோதுமை ரவை) கேசரி


தேவையான பொருட்கள்:- கோதுமை ரவை – 1 1/2 கப், பால் – 1 லி., சீனி – ¾ கப், நெய் – ¾ கப், முந்திரிப்பருப்பு – 10, கிஸ்மிஸ் – 10, ஏலக்காய் - 3

செய்முறை:- கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துப் பால் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசிலுக்கு வேகப்போடவும். இறக்கிக் கடாயில் போட்டு சீனி சேர்த்துக் கிளறவும். சீனி இளகி இறுகி வரும்போது நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துக் கொட்டவும். ஏலப்பொடியைத் தூவி இறக்கவும். விரும்பினால் பாலில் குங்குமப்பூவைக் கரைத்தும் சேர்க்கலாம்.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

பாசிப்பயறுக் கேசரி

பாசிப்பயறுக் கேசரி


தேவையானவை :- பாசிப்பயறு – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப், நெய் – 2 டீஸ்பூன், துருவிய தேங்காய்– கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிப் பதமாக வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

சனி, 17 ஜனவரி, 2026

கவுனி அரிசிக் கேசரி

கவுனி அரிசிக் கேசரி


தேவையானவை :- கவுனி அரிசி – 1 கப், சீனி – 2 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பால் கால் கப், தேங்காய்ப் பொடி – கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- கவுனி அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு சீனியைச் சேர்த்து மசிக்கவும். தேங்காய்ப் பொடியைப் போட்டுப் பால் ஊற்றி இளக்கிக் கொள்ளவும். உருக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

புதன், 14 ஜனவரி, 2026

கேழ்வரகு அவல் கேசரி

கேழ்வரகு அவல் கேசரி


தேவையானவை:- கேழ்வரகு அவல் – 1 கப், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரைகப், உப்பு  1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6, ஏலப்பொடி -1 சிட்டிகை.

செய்முறை:- கேப்பை அவலை நீரில் நனைத்துக் களைந்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸைப் போட்டு வறுத்து எடுத்து அதில் கேழ்வரகு அவல், தேங்காய்த் துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும். ஒன்று சேர்ந்ததும் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸைச் சேர்த்து இறக்கவும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

கடலைப்பருப்புக் கேசரி

கடலைப்பருப்புக் கேசரி


தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், மண்டை வெல்லம் – 1 கப், நெய் – அரை கப், கொப்பரை – கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- கடலைப் பருப்பை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நறுக்குப் பதமாக வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி மிக்ஸியில் பெரபெரவென அரைத்துத் துருவிய மண்டை வெல்லம் போட்டுக் கிளறவும். இரண்டும் சேர்ந்து வேகும்போது நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றவும். உதிர் உதிராக வந்ததும் கொப்பரையைச் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துப் பரிமாறவும்.

வியாழன், 8 ஜனவரி, 2026

பச்சரிசிக் கேசரி

பச்சரிசிக் கேசரி


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீனி – 2 கப், நெய் – 2 கப், கேசரி பவுடர் – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, பால் கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பச்சைக்கற்பூரம் – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். அதன் பின் களைந்து குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு சீனியைச் சேர்த்து மசிக்கவும். அத்தோடு பாலில் கொதிக்கவைத்த் குங்குமப்பூவையும், கேசரி கலரையும் போட்டு உருக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும்.

திங்கள், 5 ஜனவரி, 2026

கேரட் சேமியா கேசரி

கேரட் சேமியா கேசரி


தேவையானவை:- கேரட் – 200 கி, சேமியா – 1 கப், நாட்டுச் சர்க்கரை – 1 ¼ கப், தண்ணீர் – 3 கப், நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.

செய்முறை:- கேரட்டைத் தோல் சீவித் துருவவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். அதில் பாதி நெய்யில் துருவிய கேரட்டைப் போட்டுப் பச்சை வாசம் போக நன்கு வதக்கவும். அதன் பின் மீதி நெய்யை விட்டு சேமியாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து அதன் மேல் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றவும். இதோடு வதக்கிய கேரட்டையும் சேர்க்கவும். கேரட்டும் சேமியாவும் நன்கு வெந்ததும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். கேசரி சுருண்டு நெய் பிரியும்போது ஏலப்பொடியையும் முந்திரியையும் தூவிப் பரிமாறவும்.