செவ்வாய், 13 ஜனவரி, 2015

பொங்கல் ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல்.PONGAL RECIPES



சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல் :-

தேவையானவை :-
சிவப்பரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
பனை வெல்லம் – 2 அச்சு
பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி)
பால் – ½ கப்
ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி கிஸ்மிஸ் – 10.


செய்முறை:-
கோலமிட்ட பொங்கல் தவலையில் பாலும் சிவப்பரிசி களைந்த நீரும் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். பால் பொங்கி வந்ததும் அதில் சிவப்பரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். சிறிது தண்ணீரில் வெல்லத்தையும் பனங்கருப்பட்டியையும் நைத்துப் போட்டு சூடுபடுத்தி கரைந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி நன்கு கிளறிவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கி நைவேத்தியம் செய்யவும்.

2. தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல். :-

தேவையானவை:-
பச்சரிசி – 1 கப்
தேங்காய் – 1
கற்கண்டு – 150 கி
ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் ).
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை.

செய்முறை:-

தேங்காயை அரைத்து மூன்று பால் எடுக்கவும். மூன்றாம் பால் இரண்டு கப், இரண்டாம் பால் ½ கப் முதல் பால் திக்காக ¼ கப் எடுக்கவும். பச்சரிசியை லேசாக வறுத்துக் களைந்து மூன்றாம் பாலில் குக்கரில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்கு கரண்டியால் மசிக்கவும். அதில் கற்கண்டைப் பொடித்துப் போட்டு  இரண்டாம் பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். இறுகி வந்ததும் முதல் பாலையும் ஏலப்பொடியையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். இதற்கு முந்திரி கிஸ்மிஸ் விரும்பினால் நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

3. கோதுமை ரவை முளைகட்டிய பயறுப் பொங்கல். :-

தேவையானவை :-
கோதுமை ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கைப்பிடி
முளைகட்டிய பயறு – ½ கப் ( ஒரு டீஸ்பூன் பாசிப்பயறு, ஒரு டீஸ்பூன் பச்சைப் பட்டாணி, ஒரு டீஸ்பூன் கொண்டைக்கடலையை ஊறவைத்து துணியில் கட்டி முளை விடச் செய்யவும் )
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்.
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – 1 இன்ச் துண்டு
உப்பு – ½ டீஸ்பூன்.
நெய் –2 டீஸ்பூன்.
முந்திரி – 10
உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை :-
கோதுமைரவையையும் பாசிப்பருப்பையும் வறுத்து 31/2  கப் தண்ணீர் சேர்த்து முளைகட்டிய பயறுவகைகளையும் தேங்காய்த் துருவல், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகப் போடவும். இறக்கி சூடாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்து, மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கலந்துவிட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின் உபயோகிக்கவும்.

4. வெள்ளை ரவை காய்கறிப் பொங்கல். :-

தேவையானவை :-
வெள்ளைரவை :- 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
காய்கறிக் கலவை – ½ கப் ( காரட், பீன்ஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் )
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – 1 இன்ச் துண்டு
உப்பு – ½ டீஸ்பூன்.
நெய் –2 டீஸ்பூன்.
முந்திரி – 10
உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:- பாசிப்பருப்பை நன்கு குழைய வேகவிடவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து சதுரமாக நறுக்கிய காய்கறிகளையும் , பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இரண்டாகக் கீறிய மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக விடவும்.

இன்னொரு பானில் ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும். பருப்புக் காய்கறிக் கலவையில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி வறுத்த ரவையைப் போடவும். ரவையும் காய்கறியும் வெந்ததும் உப்பு சேர்த்து மசித்து இறக்கவும்.

நெய்யில் உளுந்து சீரகம் ,மிளகு, முந்திரிப்பருப்பு கருவேப்பிலை தாளித்து கலந்துவிட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின் உபயோகிக்கவும்.

5. சாமை அரிசி பாலக் பொங்கல். :-

தேவையானவை :-
சாமை அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/3 கப்
பாலக் கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – 1 துண்டு
உப்பு – 1/3 டீஸ்பூன்
நெய் –  1 டீஸ்பூன்.
உளுந்து – ½ டீஸ்பூன்.
சீரகம் – 1 டீஸ்பூன்.
மிளகு – ½ டீஸ்பூன்.
முந்திரி – 4

செய்முறை:-
சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும். பாலக் கீரையை சுத்தம் செய்து அலசி பொடிப்பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறி இஞ்சியையும் பொடியாக நறுக்கவும்.

குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு 3 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்ததும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்து சீரகம், மிளகு முந்திரி தாளித்து உபயோகிக்கவும்.


6. குங்குமப்பூ இனிப்பு சாதம் :-

தேவையானவை :-
பாசுமதி அரிசி – 1 கப்
குங்குமப்பூ – 2 கி
பால் – 2 கப்
சீனி – 2 ஸ்பூன்.
உப்பு – 1 சிட்டிகை.
நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
முந்திரி – 6
பாதாம் – 6
கிஸ்மிஸ் – 6
பட்டை  இலை – 1 சிறுதுண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு - 1
ஆப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6
பைனாப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6.

செய்முறை:-
பாதாம் முந்திரியை ஊறவைத்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் ஊற்றி குக்கரில் வேகப் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை சூடுபடுத்து குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும்.

பாசுமதி அரிசி வெந்ததும் உதிர்த்துக்கொள்ளவும். பானில் நெய்யைக் காயவைத்து பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதில் முந்திரி பாதாமைப் போட்டு வதக்கி கிஸ்மிஸ், ஆப்பிள் பைனாப்பிளை சேர்க்கவும். உப்பையும் சீனியையும் சேர்த்து பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும். வேகவைத்த பாசுமதி சாதத்தையும் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து உபயோகப் படுத்தவும்.

-- மார்கழி ரெசிப்பீஸுக்கு வாசகர் கடிதம். !!!


நன்றி சுசீலா , பெரிய நாயக்கன் பாளையம், & குமுதம் பக்தி ஸ்பெஷல். !!!

2 கருத்துகள்:

  1. அனைத்துக் குறிப்புகளும் நன்று. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள், தேனம்மை!

    பதிலளிநீக்கு