திங்கள், 16 பிப்ரவரி, 2015

தை அமாவாசை, ரதசப்தமி ரெசிப்பீஸ். THAI AMAVASAI & RATHASAPTHAMI RECIPES,



ஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், அரிசிப்பருப்பு சாதம். ஆனியன் கார்லிக் ரைஸ்


1.ஆரஞ்சு பாசுமதி ரைஸ் :-
தேவையானவை :-
பாசுமதி அரிசி – 1 கப்
ஆரஞ்சு – 4 சுளை உதிர்த்தது.
ஆரஞ்சுச்சாறு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – ¼ டீஸ்பூன்
ஜீனி – 1 சிட்டிகை.
நெய்/வெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:-
அரிசியைக் களைந்து நீரை இறுத்து வைக்கவும். பானில் நெய் அல்லது வெண்ணையைக் காயவைத்து அரிசியை வறுக்கவும். இரண்டு நிமிடங்கள் நிதானமாய தீயில் வறுத்தபின் உப்பு சீனி தண்ணீர், ஆரஞ்சுச்சாறு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வைக்கவும். ஆறியதும் திறந்து ஆரஞ்சு சுளைகள் சேர்த்து பைனாப்பிள் ரெய்த்தா அல்லது பூந்தி ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

2. ஆந்திரா புளியோகரே :-

தேவையானவை :-
சூடான சாதம் – 2 கப்
புளி -1 எலுமிச்சை அளவு
வரமிளகாய் – 3
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
வறுத்த முந்திரிப்பருப்பு – 10
கருவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
வெல்லம் – 1 துண்டு
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
சூடான சாதத்தில் மஞ்சள் பொடி, பச்சைக் கருவேப்பிலை, ½ டீஸ்பூன் உப்பு, 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாகக் கிளறி விடவும்.

புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பைப் போட்டு வைக்கவும். பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். அது வெடித்ததும் உளுந்து கடலைப்பருப்பு, போடவும். இதெல்லாம் சிவக்க வறுபட்டதும் பெருங்காயம் போடவும். அது பொரிந்ததும் கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி போடவும். அதைக் கிளறிவிட்டு மஞ்சள் பொடி போட்டு புளிச்சாறை ஊற்றவும். அவ்வப்போது கிளறிவிடவும். நன்கு கொதித்து சுண்டியதும் எண்ணெய் பிரியும்போது பொடித்த வெல்லம் போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.

ஆறவைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு கலந்து விட்டு வறுத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பை பொறித்துப் போட்டு அலங்கரிக்கவும். அப்பளம், தேங்காய்த் துவையலுடன் பரிமாறவும்.

3. தக்காளித் தொக்கு சாதம்:-
தேவையானவை :-
சாதம் – 2 கப்
நாட்டுத் தக்காளி – ¼ கிலோ பழுத்தது
ஆப்பிள் தக்காளி – ¼ கிலோ பழுத்தது.
வரமிளகாய்த் தூள் – 1  ½ டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
நாட்டுத் தக்காளி, ஆப்பிள் தக்காளியைக் கழுவித் துடைத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் போட வேண்டாம் ஜூஸாகிவிடும். நல்லெண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும் பொரிந்ததும் வெந்தயம் பெருங்காயத்தூள் போடவும். அதில் பொடியாக அரிந்த தக்காளியைப் போட்டுச் சுருள வதக்கவும். பாதி வதங்கும்போது உப்பும் மிளகாய்த்தூளும் சேர்க்கவும். நன்கு சுருண்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்கி ஆறவைத்து சாதத்தை உதிர்த்துச் சேர்த்துக் கலக்கவும். உருளை சிப்ஸ் பட்டாணி மசாலாவுடன் பரிமாறவும்.

4.தோசைக்காய் சாதம்.:-

தேவையானவை :-
தோசைக்காய் – 1 தோல்சீவி சின்னத் துண்டுகளாக்கவும்.
( இது ஆந்திராவில் கிடைக்கும் பார்க்க சாத்துகுடி/பப்ளிமாஸ்போல இருக்கும். வெள்ளரிக்காயில் ஒரு வகை )
சாதம் – 2 கப்
வரமிளகாய் – 2 துண்டுதுண்டாக உதிர்க்கவும்
பச்சைமிளகாய் – 3 வட்டமாக அரியவும்.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி – ½ டீஸ்பூன்
கடுகுப் பொடி – ¼ டீஸ்பூன்
வெந்தயப் பொடி – ¼ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 எலுமிச்சையின் சாறு
கொத்துமல்லித் தழை – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும். அதில் பச்சைமிளகாய், வரமிளகாய் கிள்ளிப் போட்டு தோசைக்காயையும் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும் மஞ்சள் பொடியையும், உப்பையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியபின் கடுகுப்பொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும். நன்கு கலக்கி ஒரு நிமிடம் வெந்ததும் இறக்கி ஆறவைத்து சாதத்தைக் கலக்கவும். அதில் எலுமிச்சை சாறும் கொத்துமல்லித் தழையும் போட்டுக் கலக்கி சிறிது நேரம் மூடிவைத்து உபயோகிக்கவும். சுட்ட மிளகு அப்பளம், சீரக ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

5. காபூலி சன்னா ரைஸ் :-

தேவையானவை :-
பாசுமதி /பச்சரிசி – 1 கப்
காபூலி சன்னா -1/2 கப் ( கறுப்பு/வெள்ளை கொண்டைக்கடலை )
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 இஞ்ச் துண்டு
பூண்டு – 6
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
சாம்பார் பொடி –  1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
இலை – ஒரு துண்டு
கல்பாசிப்பூ – சிறிது
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – ½ டீஸ்பூன்.
உப்பு – ½ டீஸ்பூன்.
கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன்

செய்முறை :-
காபூலி சன்னாவைக் கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து அதே தண்ணீரோடு குக்கரில் ¼ டீஸ்பூன் உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

இன்னொரு பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கி அரைத்து வைக்கவும். ஒரு தக்காளியையும் அரைத்து தனியாக வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து தனியாக வைக்கவும்

கடாயில் எண்ணெயைக் காயவைத்து அரிந்த வெங்காயத்தை வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். பின்  சோம்பு, பட்டை, இலை, கல்பாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். முதலில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். அதுவும் லேசாக சிவந்தவுடன் தக்காளி பேஸ்ட், தக்காளி போடவும். அது சுருண்டு வரும்போது மஞ்சள் பொடி, உப்பு , சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி போடவும். அரிசியையும் போட்டு  நிமிடம் நன்கு கலக்கவும், சன்னா வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும். ஆறியதும் இறக்கி கொத்துமல்லித் தழை வறுத்த வெங்காயம் தூவி பரிமாறவும். ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், ஆனியன் ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

6. மாவடு இஞ்சி சாதம் :-

தேவையானவை :-
சாதம் – 1 கப்
மாவடு இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்  துருவியது
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
உப்பு – ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும். சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும். அதில் மாவடு இஞ்சித் துருவலைப் போட்டு உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். எல்லாம் சேர்ந்ததும் இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை உதிர்த்துச் சேர்க்கவும். அதில் எலுமிச்சை சாறும் கொத்துமல்லித்தழையும் போட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும். இதற்கு தேன்குழல் வற்றல், தக்காளித் தொக்கு நன்றாக இருக்கும்.

7. ஆனியன் கார்லிக் ரைஸ் :-

தேவையானவை :-
சாதம் – 1 கப்
சின்ன வெங்காயம் – 15 வட்டமாக சன்னமாக நறுக்கவும்
பூண்டு – 10 வட்டமாக சன்னமாக நறுக்கவும்
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:-
பானில் எண்ணெயைக் காயவைத்து சின்ன வெங்காயம், பூண்டை வதக்கவும். நன்கு தண்ணீர் போல வதங்கியதும் மிளகாய்ப்பொடி உப்பைச் சேர்க்கவும். ஒன்று சேர்ந்ததும் இறக்கி அதில் சாதத்தை உதிர்த்துக் கிளறவும். சூடாக பொரித்த ஃப்ரையம்ஸ், கருவேப்பிலை கொத்துமல்லி புதினாத் துவையலுடன் பரிமாறவும்.

8. கொத்துமல்லி சாதம் :-

தேவையானவை:-

சாதம் – 2 கப்
கொத்துமல்லி – 1 கட்டு
மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கவும்.
மொளகு பொடி – 1 டீஸ்பூன் ( ஒரு மோர்மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பை வறுத்து அரைக்கவும். )
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:-

கொத்துமல்லியை சுத்தம் செய்து லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை மென்மையாகும்வரை வதக்கவும். அதில் அரைத்த கொத்துமல்லியைப் போட்டு வதக்கவும். உப்பு மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும். 3 நிமிடம் கிளறியபின் இறக்கவும். அதில் சாதத்தை உதிர்த்துக் கலந்து மொளகு பொடியும் நெய்யும் கலந்து உபயோகிக்கவும். துருவிய காரட் தயிர்ப்பச்சடியும் ஜவ்வரிசி வடகமும் சேர்த்து பரிமாறவும்.

9. அரிசிப்பருப்பு சாதம் :-

தேவையானவை :-

அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 1/3 கப்


தாளிக்க :-
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 1
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
சாம்பார் பொடி – ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1/3 டீஸ்பூன்.
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:-

அரிசியையும் பருப்பையும் களைந்து இரண்டரைகப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து கடலைப்பருப்புப் போட்டுச் சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய் கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார்பொடி உப்பு போட்டு லேசாக சுருளத் துவங்கியதும் இறக்கி வைத்து ஆறித பருப்பு சாதக் கலவையை உதிர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும். சிலர் இது போல தாளித்து அதிலேயே அரிசி பருப்பைச் சேர்த்துக் குக்கரில் வேக வைப்பார்கள். அது சில சமயம் குழைந்து விடலாம். இப்படிச் செய்தால் உதிர் உதிராக இருக்கும். கறிவடகம், எண்ணெய் வாழைக்காயோடு பரிமாறவும். 

டிஸ்கி :- இந்த நிவேதனங்கள் ஜனவரி 15 - 31, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் வெளிவந்தவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக