திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஸ்பெஷல் ரெசிப்பீஸ், SPECIAL RECIPES.

ஸ்பெஷல் ரெசிப்பீஸ்:-

1.வெந்தய லட்டு
2.தார்வாட் பேடா
3.கவுனி அரிசி அல்வா
4.கேழ்வரகுப் பாயாசம்
5.தஹி ஆலு பகோடா.
6.காராமணி அரிசிச் சுண்டல்
7.பாசிப்பருப்பு அப்பம்
8.பைனாப்பிள் புட்டிங்.
9.துவரம்பருப்பு தோசை
10.ஆட்டிக் கிண்டும் உப்புமா.

1.வெந்தய லட்டு:-


தேவையானவை :-
வெந்தயம் – அரை கப், கோதுமை மாவு – 1 கப், நெய் – அரை கப், பாதாம் – 6 , பேரீச்சை – 6, வெல்லம் – முக்கால் கப்.

செய்முறை :-
வெந்தயத்தை முதலில் வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். திரும்பவும் நிதானமான தீயில் பாதி நெய்யைக் காயவைத்து பொடியைப் போட்டு வறுத்து எடுக்கவும். மீதி நெய்யை ஊற்றி பொடியாக ஒடித்த பாதாமை வறுத்து எடுத்து அதன்பின் கோதுமை மாவையையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்தை சுத்தம் செய்து கெட்டிப் பாகுவைத்து அதில் பாதாம், பொடியாக அரிந்த பேரீச்சை, வெந்தயம், கோதுமை மாவு போட்டு நன்கு கலக்கி ஆறியபின் உருண்டைகள் பிடித்து நிவேதிக்கவும்.


2.தார்வாட் பேடா:-

தேவையானவை :-
கோவா – 200 கி, பொடித்த சர்க்கரை – 150 கிராம் + ஒரு டேபிள் ஸ்பூன், நெய் -100 கிராம், பால் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:-
கோவாவை உதிர்த்து வைக்கவும். நெய்யைக் காயவைத்துக் கோவாவை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். ஏலப்பொடியையும், பொடித்த சர்க்கரையையும் போடவும். பாலை ஊற்றி ஐந்து நிமிடங்கள் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு எலுமிச்சை அளவு உருண்டைகள் உருட்டி ஜீனியில் புரட்டி நிவேதிக்கவும்.


3.கவுனி அரிசி அல்வா:-

தேவையானவை:-
கவுனி அரிசி – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் , ஏலப்பொடி – 1 சிட்டிகை, பால் அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:-
கவுனி அரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் நேரம் ஊறவைத்து அரை கப் தண்ணீரும் அரை கப் பாலும் ஊற்றி நைஸாக அரைக்கவும். இதில் சர்க்கரையையும் முக்கால் வாசி நெய்யையும் நன்கு கலக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும். மிச்ச நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்து அல்வாவைக் கொட்டிக் கிளறி உருண்டு வந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.


4.கேழ்வரகுப் பாயாசம் :-

தேவையானவை :-
கேழ்வரகு – அரை கப், பால் – ரெண்டு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ரெண்டு டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:-
கேழ்வரகைக் களைந்து காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். இறக்கி அதில் பாலைச் சேர்த்துக் கரைத்து நன்கு கொதிக்க விடவும். கொதித்துக் கண்ணாடிபோல் ஒட்டாமல் இருக்கும்போது சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொடித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கி நிவேதிக்கவும்.

5.தஹி ஆலு பகோடா.

தேவையானவை :-
கெட்டித் தயிர் – 1 கப், வேகவைத்த உருளை – 2, கடலைமாவு – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- கடலைமாவில் உப்பு கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் போட்டு அவித்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து எடுக்கவும். இதை ஒரு பௌலில் போட்டு மேலே தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், அரிந்த வெங்காயம் தூவி அதன் மேல் கெட்டித் தயிரை ஊற்றிப் பரிமாறவும்.  

6.காராமணி அரிசிச் சுண்டல்.

தேவையானவை :-
காராமணி – அரை கப், பொன்னி அரிசி – 1 கப், பொடியாக அரிந்த பெ. வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன். வரமிளகாய் – 1. தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-

காராமணியை வறுத்துக் குக்கரில் வேகப்போடவும். அரிசியையும் தனியாகக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகப்போடவும். இரண்டும் வெந்ததும் உதிர் உதிராக உதிர்த்து உப்பு சேர்த்துக் கலக்கவும். பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வரமிளகாயையும் பொடிப்பொடியாக உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய் கருவேப்பிலை, பெரிய வெங்காயம் போட்டு வதக்கி அரிசியையும் காராமணியையும் போட்டுக் கலக்கவும். தேங்காய்த்துருவலையும் போட்டு நன்கு கலக்கி நிவேதிக்கவும்.  

7.பாசிப்பருப்பு அப்பம்:-

தேவையானவை :-
பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், வெல்லம் + கருப்பட்டி – அரை கப். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து ஊறவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இதில் வெல்லம் கருப்பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை நன்கு மலரும்படி வேகவைத்து இந்த மாவில் போட்டுக் கலக்கி எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.

பைனாப்பிள் புட்டிங்:-

தேவையானவை :-

ரவை – ஒரு கப், பைனாப்பிள் – 2 ஸ்லைஸ், நெய் – கால் கப், பால் – 2 கப் , சர்க்கரை – ஒரு கப், கிஸ்மிஸ் முந்திரி – தலா – 10, யெல்லோ ஃபுட் கலர் – சிறிது.பைனாப்பிள் எசன்ஸ். - சில துளிகள்.

செய்முறை:-

நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து அதிலேயே ரவையையும் பொன்னிறமாக வறுக்கவும். பைனாப்பிளை சின்ன துண்டுகளாகச் செய்து ரவையில் போட்டுப் புரட்டி அதில் இரண்டு கப் பால், ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கரைத்து யெல்லோ ஃபுட் கலர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கவும். பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு மசித்து நிவேதிக்கவும்.

9.துவரம்பருப்பு தோசை:-

தேவையானவை :-
துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி +புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன்,. உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, பொடியாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
துவரம்பருப்பைக் களைந்து தனியாக ஊறவைக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசி , உளுந்தை வெந்தயத்தோடு களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் அரிசி உளுந்தை அரைத்து அதன்பின் துவரம் பருப்பைச் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைக்கவும். 4 மணி நேரம் கழித்து வெங்காயம் சேர்த்துக் கரைத்து தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி காரச் சட்னியோடு பரிமாறவும்.

10.ஆட்டிக் கிண்டும் உப்புமா. :-

தேவையானவை :-
பொன்னி அரிசி – 2 கப், வரமிளகாய் – 10, பெரிய வெங்காயம் – 2, எண்ணெய்- கால் கப். உப்பு – அரை டீஸ்பூன். கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
பொன்னி அரிசியைக் களைந்து ஊறவைத்து வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக உப்புமா பதத்தில் அரைத்து எடுத்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பெரிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் அரைத்த மாவை ஊற்றி நிதானமான தீயில் அவ்வப்போது கிளறி நன்கு வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி உதிர் உதிராக வந்ததும் இறக்கி நிவேதிக்கவும். 

ிஸ்கி:- இந்திவங்கள் 11. 2. 2016 குமம் பக்ி ஸ்பில் வெளியானை .

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. கலக்கறீங்க தேனக்கா..சூப்பர் ரெசிப்பீஸ் !! நீங்களே செய்துப்பார்த்ததா ! பிரமாதம் !

    பதிலளிநீக்கு
  3. தாங்க்ஸ் டா தங்கச்சி கண்மணி :)

    பதிலளிநீக்கு