வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தைப்பூச ரெசிப்பிஸ். THAIPOOSAM RECIPES.

தைப்பூச ரெசிப்பீஸ்:-
1.பச்சைத் தேன்குழல்
2.ரவைப் புட்டு
3.ஃப்ரூட் & நட்ஸ் ரோல்
4.பரங்கிப் பிஞ்சு பஜ்ஜி.
5.பழம்பொரி
6.இளந்தோசை
7.வரகரிசிப் பாயாசம்.


1.பச்சைத் தேன்குழல்

தேவையானவை :-



பச்சரிசி - 2 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - அரை கப், உப்புஅரை   டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.



செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து உடனே திருப்பிவிட்டு வெண்ணிறமாக எடுக்கவும்.

2.ரவைப் புட்டு

தேவையானவை :-
வறுத்த வெள்ளை ரவை – 1 கப், பால் – 2 கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன், சீனி – 2 டேபிள் ஸ்பூன். ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
வறுத்த பாசிப்பருப்பையும் ரவையையும் இரண்டு கப் பாலில் போட்டுக் கரைத்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும். ஆறியதும் உதிர்த்து தேங்காய்த்துருவல், நெய், சீனி, ஏலப்பொடி போட்டுக் கலந்து நிவேதிக்கவும்.

3.ஃப்ரூட் & நட்ஸ் ரோல் :-

தேவையானவை :-
மைதா – 1 கப், டூட்டி ஃப்ரூட்டி – கால் கப், பாதாம் முந்திரி பிஸ்தா – தலா 2 டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ் – 20, பேரீச்சை – 6. போரா – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீனி – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
மைதாவில் உப்பு சீனி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் போட்டு ஊறவைக்கவும். டூட்டி ஃப்ரூட்டி, பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி, கிஸ்மிஸ், பொடியாக நறுக்கிய பேரீச்சையுடன் போராவும் போட்டு கலந்து வைக்கவும். மைதாவை மெல்லிய பூரிகளாக திரட்டி இந்தக் கலவையை உள்ளே தூவி உருட்டி ஓரங்களை ஒட்டி எண்ணெயில் பொரித்து நிவேதிக்கவும்.

4.பரங்கிப் பிஞ்சு பஜ்ஜி.

தேவையானவை :-

பரங்கிப் பிஞ்சு – சின்னம் பாதி. கடலைமாவு – 1 கப், மைதா – டீஸ்பூன், அரிசி மாவு – 1 டீஸ்பூன், சோம்பு மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பரங்கிப் பிஞ்சைத் தோல் சீவி நீளமாக பஜ்ஜி வாட்டத்தில் மெல்லிசாக நறுக்கி வைக்கவும். கடலைமாவில் அரிசி, மைதா சேர்த்து சோம்பு மிளகாய்த்தூள் உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பரங்கிப் பிஞ்சை இந்த மாவில் தோய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும்.

5. பழம்பொரி:-

தேவையானவை :-

நன்கு பழுத்த நேந்திரம்பழம் – 2, மைதா – 2 கப், அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, சீனி – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை, பால் – அரை கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

நேந்திரம் பழத்தின் தோலைச் சீவி ஸ்லைசாக நறுக்கிக் கொள்ளவும். மைதா அரிசி மாவு, சமையல் சோடா, சீனி, உப்பு எல்லப்பொடி போட்டுக் கலந்து பால் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் தளரக் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து நேந்திரம் பழ ஸ்லைஸுகளை பஜ்ஜி மாவில் தோய்த்துப் போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

6.இளந்தோசை:-

தேவையானவை :-
வெள்ளைக்கார் அரிசி – 2 கப், உளுந்து – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன் எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-
வெள்ளைக்கார் அரிசியையும் உளுந்தையும் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் அரைத்து உப்பு சேர்த்துக்கரைத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லில் எண்ணெயைத் துணியால் தடவி மாவைக் கரைத்து ஊற்றி மூடி போட்டு சிம்மில் வேகவைத்து அப்படியே வெள்ளையாய் மடித்து வரமிளகாய்த் துவையலோடு பரிமாறவும். இந்தத் தோசை பூப்போல மெல்லியதாய் வெண்மையாய் இருக்கும்.  


7.வரகரிசிப் பாயாசம்.
தேவையானவை :-

வரகரிசி – அரை கப், பாசிப்பருப்பு -  ஒரு டேபிள் ஸ்பூன், வெல்லம் – அரை கப், பால் – 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 10. நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வறுத்து வரகரிசியில் போட்டு குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வெல்லம் போட்டுக்கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் பால் ஊற்றி இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக