திங்கள், 28 அக்டோபர், 2019

11.ஹனுமத் ஜெயந்தி – வெண்ணெய் ரொட்டி

11.ஹனுமத் ஜெயந்தி – வெண்ணெய் ரொட்டி

தேவையானவை:- மைதா – அரை கப், கோதுமை மாவு – அரைகப், சோடா உப்பு – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, சீனி – 1 டீஸ்பூன், வெண்ணெய் –அரை கப், அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பொடி + சீனிப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- மைதா, கோதுமை மாவுடன் சோடா உப்பு, உப்பு, சீனியை சேர்த்து நன்கு கலந்து பாதி வெண்ணெயையும் போட்டுக் கலக்கவும். தண்ணீரைத் தெளித்துத் தெளித்துப் பிசைந்து பத்து நிமிடம் ஊறவிடவும். மீதி வெண்ணெயில் அரிசிமாவைப் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து நன்கு குழப்பி வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து அரிசி வெண்ணெய்க் கலவையைத் தடவி மடித்து மடித்துத் தேய்க்கவும். பலமுறை மடித்துத் தேய்த்தபின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டவும். தோசைக்கல்லை சூடு செய்து இந்தத் துண்டுகளை எல்லாப் பக்கமும் படும்படி அப்பள இடுக்கியால் புரட்டிப் புரட்டிப் பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தேங்காய்ப்பொடி சீனிப்பொடி தூவி நிவேதிக்கவும்.

  

வெள்ளி, 25 அக்டோபர், 2019

10.ராமநவமி – பாசிப்பயறு கோசுமரி

10.ராமநவமி – பாசிப்பயறு கோசுமரி

தேவையானவை:- முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், தக்காளி – பாதி, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 1, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், வெள்ளரிக்காய் – 1, மாங்காய் – 1 துண்டு, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.
செய்முறை:- முளைவிட்ட பாசிப்பயறை ஒரு பௌலில் போடவும். இதில் பொடியாக அரிந்த கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி, வெள்ளரி, மாங்காய்த்துண்டுகள் , தேங்காய்த்துருவல், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கலந்து நிவேதிக்கவும். 
  

புதன், 23 அக்டோபர், 2019

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

தேவையானவை:- பச்சரிசி – 3 கப், தூள் வெல்லம் – 100 கி , அச்சு வெல்லம் – 100 கி, மண்டை வெல்லம் – 100 கி. நெய் – 1 டேபிள் ஸ்பூன், திரி.
செய்முறை:- மூன்று கப் பச்சரிசியையும் ஒவ்வொரு கப்பாக எடுத்துக் களைந்து தனித்தனியாக ஊறவைக்கவும்.
அரியரிசி:- ஒரு கப் ஊறவைத்த அரிசியை அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.
துள்ளுமா:- இன்னொரு கப் ஊறவைத்த அரிசியை எடுத்து பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றிநிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இது துள்ளுமா.)
மாவிளக்கு :- மூன்றாவதாக ஒரு கப் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவி மாவுடன் மிக்ஸியில் போட்டுச் சுற்றி எடுத்து உருண்டையாகக் கைகளால் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு நெய் ஊற்றி மாவிளக்கை ஏற்றி நிவேதிக்கவும்.

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

தேவையானவை :- ரோஸ் அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- ரோஸ் அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், தூள் வெல்லம் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.
  

செவ்வாய், 22 அக்டோபர், 2019

7.ஆடிப்பெருக்கு – அரிசிப்பருப்பு சாதம்

7.ஆடிப்பெருக்கு – அரிசிப்பருப்பு சாதம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – கால் கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை:- பச்சரிசியையும் துவரம்பருப்பையும் கழுவி குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து வரமிளகாயையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூளும் கருவேப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்தூள் சேர்த்து சுருள வதங்கியதும் இறக்கி ஆறவைக்கவும். இதில் வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைப் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.
  

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம்

6.நரசிம்மர் ஜெயந்தி – மாதுளை பானகம்

தேவையான பொருட்கள் :- செம்மாதுளை – 2 பழம், எலுமிச்சை – அரை மூடி, வெல்லம் – 150 கி, தண்ணீர் – 4 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, சுக்குத்தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
செய்முறை :- செம்மாதுளை முத்துக்களை அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதில் எலுமிச்சையைப் பிழிந்து சுக்குத்தூள், ஏலத்தூள், மிளகுத்தூள் கலந்து நிவேதிக்கவும்.
  

வெள்ளி, 18 அக்டோபர், 2019

5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை

5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை

தேவையானவை :- இட்லி அரிசி – 2 கப், தேங்காய் – 1, வெல்லம் – 300 கி, ஏலக்காய் – 4.
செய்முறை:- இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் இருந்தால் இஞ்சுவதற்காக அதை ஒரு சுத்தமான வெண்துணியில் கட்டி வைக்கவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். அதன் பின் இருமுறை ஒரு கப் தண்ணீர் விட்டுப் பால் எடுத்து வைக்கவும். மூன்றாம் பாலில் வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இரண்டாம் பாலைப் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிவரும்போது அரைத்த மாவை சீடைக்காய் அளவில் கொழுக்கட்டைகளாகத் தட்டிப் போடவும். பாதி வேகும்போது வெல்லம்சேர்த்த தண்ணீரையும் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து கொழுக்கட்டைகள் வெந்ததும் முதல் பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
  

புதன், 16 அக்டோபர், 2019

4.அட்சய திருதியை – பூந்தி கீர்

4.அட்சய திருதியை – பூந்தி கீர்

தேவையானவை:- கடலைமாவு – 1 டேபிள் ஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், சோளமாவு – 2 டீஸ்பூன், அரிசிமாவு – 2 டீஸ்பூன். சோடா உப்பு – 1 சிட்டிகை., உப்பு – 1 சிட்டிகை. பால் – ஒரு லிட்டர், சீனி – கால் கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், முந்திரி பாதாம் – தலா 5, கிஸ்மிஸ் – 10, நெய் – 2 டீஸ்பூன். பூந்தி பொறிக்கத் தேவையான எண்ணெய். வனிலா எசென்ஸ் – சிலதுளிகள்.
செய்முறை:- கடலைமாவு, மைதா, சோளமாவு, அரிசிமாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உப்பும், சோடா உப்பும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து பூந்திகளாக வேகவைத்து எடுக்கவும். பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து பதினைந்து நிமிடம் சிம்மில் கொதிக்க விடவும். இதில் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, கிஸ்மிஸை சேர்த்து ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது பூந்தியும் வனிலா எஸென்ஸும் சேர்த்து நிவேதிக்கவும்.

  

திங்கள், 14 அக்டோபர், 2019

3.மகாசிவராத்திரி – கேப்பைப் புட்டு

3.மகாசிவராத்திரி – கேப்பைப் புட்டு

தேவையானவை :- கேழ்வரகு – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – அரை கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
கேழ்வரகைக் கழுவிக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிச் சலிக்கவும். இத்துடன் உப்புக் கரைத்த நீரைத் தெளித்துப் பிசறவும். கட்டிகள் இல்லாமல் பிசறி ஈரப்பதம் இருக்கும்போதே பெருங்கண்ணிச் சல்லடையில் சலிக்கவும். இதைப் புட்டுப் பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து உதிர்க்கவும். இதில் உருக்கிய நெய், தூள் வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நிவேதிக்கவும்.
 

சனி, 12 அக்டோபர், 2019

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், கருப்பட்டி – 200 கி, தேங்காய்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். கருப்பட்டியைப் பொடியாக்கி அரைகப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி தேங்காய்த்துருவல், எள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இட்லிப் பாத்திரத்தில் பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைத்து 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
 

வியாழன், 10 அக்டோபர், 2019

1.தமிழ் புதுவருஷம் – பனானா புட்டிங்

1.தமிழ் புதுவருஷம் – பனானா புட்டிங்

தேவையானவை :- செவ்வாழைப்பழம் -1, ரஸ்தாளி – 1, தேன்கதலி/கற்பூரவல்லி – 1, சிறுமலைப்பழம் – 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை :- செவ்வாழைப்பழம், ரஸ்தாளி, தேன்கதலி, சிறுமலைப்பழம் ஆகியவற்றின் தோலை உரித்து மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தட்டில் வாழைப்பழத் துண்டுகளைப் பரப்பி அவற்றின்மேல் தேங்காய்த் துருவலைத் தூவவும். அதன் மேல் தேனை ஊற்றி ஏலப்பொடியைத் தூவி நிவேதிக்கவும்.