புதன், 13 நவம்பர், 2024

10.நார்த்தை ஸ்வீட் பச்சடி


10.நார்த்தை ஸ்வீட் பச்சடி


தேவையானவை:- நார்த்தங்காய் – 2, பச்சைமிளகாய்  4, வெல்லம் – 1 அச்சு, உப்பு – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- நார்த்தங்காயைக் கழுவித் துடைத்துத் துண்டுகளாக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நார்த்தங்காயைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

9. மாவடு இஞ்சி சாதம்

9. மாவடு இஞ்சி சாதம்



தேவையானவை:- உதிராக வடித்த சாதம் – 1 கப், மாவடு இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்  துருவியது, எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வேர்க்கடலை – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும். சிவந்ததும் வரமிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும். அதில் மாவடு இஞ்சித் துருவலைப் போட்டு உப்பும் மஞ்சள் பொடியும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். எல்லாம் சேர்ந்ததும் இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை உதிர்த்துச் சேர்க்கவும். அதில் எலுமிச்சை சாறும் கொத்துமல்லித்தழையும் போட்டுக் கலந்துவிட்டுக் கொஞ்ச நேரம் மூடி வைத்திருந்து உபயோகிக்கவும்.

புதன், 6 நவம்பர், 2024

8.கறிவடகத் துவையல்

8.கறிவடகத் துவையல்


தேவையானவை:- கறிவடகம் – 6, வெள்ளை உருண்டை உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவியது – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், தக்காளி – சின்னம் 1, உப்பு – கால் டீஸ்பூன், புளி – 1 சுளை, எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:- கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுந்தை சிவப்பாக வறுக்கவும்.அதிலேயே கறிவடகம் மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, புளி தேங்காய் எல்லாம் போட்டு நன்கு புரட்டிவிட்டு இறக்கி ஆறவைத்துத் தேவையான தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.

திங்கள், 4 நவம்பர், 2024

7.சுண்டைவற்றல் புளிக்குழம்பு

 
7.சுண்டைவற்றல் புளிக்குழம்பு



தேவையானவை:- சுண்டைவத்தல் – 30, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10, தக்காளி – 1, சாம்பார்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 50 மிலி. உப்பு – 2 டீஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு. கருவேப்பிலை 1 இணுக்கு. கடுகு, வெந்தயம் பெருங்காயம் – சிறிது, வெல்லம் - சிறுதுண்டு.

செய்முறை:- புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும். நல்லெண்ணையைக் காயவைத்து சுண்டை வத்தலைப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் பெருங்காயம் தாளித்துச் சுத்தம் செய்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார்த் தூளைப் போட்டுப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் வறுத்த சுண்டை வத்தலைச் சேர்த்து இறக்கவும்.

சனி, 2 நவம்பர், 2024

6.வெந்தயக் கீரை இளங்குழம்பு

6.வெந்தயக் கீரை இளங்குழம்பு


தேவையானவை:- வெந்தயக்கீரை – 1 கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, சின்னவெங்காயம் - 6, தக்காளி - 1, புளி  - 2 சுளை, உப்பு - ஒரு டீஸ்பூன். தாளிக்க :- கடுகு,உளுந்து சீரகம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் -  1 டீஸ்பூன்.

செய்முறை:- வெந்தயக்கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்து அலசி வைக்கவும். வேகவைத்த துவரம் பருப்பில் கீறிய பச்சை மிளகாய், இரண்டாய் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டுக் கீரையையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி அதில் சாம்பார் தூளைப் போடவும். நன்கு கொதித்துப் பச்சை வாடை போனதும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் தாளித்துப் போடவும். விரும்பினால் சிறிது சோம்பும் தாளிக்கலாம்.