சனி, 2 மே, 2026

சுண்டைக்காய் புளிக்குழம்பு

சுண்டைக்காய் புளிக்குழம்பு



 

தேவையானவை :- சுண்டைக்காய் - 1 கப்சின்ன வெங்காயம் - 10

வெள்ளைப்பூண்டு - 6 பல்தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன். , மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்மஞ்சப் பொடி - 1 சிட்டிகைபெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குகடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்சீனி - 1 சிட்டிகை. , எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியையும்., உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறப் போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி போடவும். நன்கு கொதி வந்தவுடன் சீனி சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

திங்கள், 27 ஏப்ரல், 2026

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு



தேவையானவை:- சின்னக் கத்திரிக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் - 2 இன்ச் துண்டு, வரமிளகாய் - 6, மல்லி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 1, உப்பு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க :- கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. 

 

செய்முறை:- கத்திரிக்காய்களை முழுதாக மேலும் கீழும் கீறித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரில் ஊறப்போடவும். தேங்காயைத் துருவி அத்துடன் வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, ஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அதில் கத்திரிக்காயையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். உப்புப் புளியை ஒரு டம்ளர் நீரில் நன்கு கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். வெந்து கொதிக்கும் போது அரைத்த மசாலாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மசாலா வாடை போக வெந்து குழம்பு நல்ல மணம் வரும்போது இறக்கவும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

மீல்மேக்கர் குழம்பு

மீல்மேக்கர் குழம்பு



தேவையானவை:- மீல் மேக்கர் – ஒரு கைப்பிடிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்அரைக்க:- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்சோம்புகசகசா – தலா அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம், பூண்டு – தலா 2கடுகு - 1 டீஸ்பூன்சோம்பு - 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி.

செய்முறை:- மீல்மேக்கரில் வெந்நீர் ஊற்றி நன்கு பிழிந்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்புமஞ்சள்தூள்மல்லித்தூள்மிளகாய்த்தூள் போட்டு வைக்கவும். தேங்காய் சோம்பு கசகசா பூண்டு வெங்காயத்தை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சோம்பு தாளித்துப் பெரிய வெங்காயம்தக்காளிகருவேப்பிலைமீல்மேக்கர் போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைத்த தண்ணீரை மசாலாப் பொடிகளோடு போட்டுக் கொதிக்க விடவும். தேங்காய் மசாலாவைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டுக் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

வியாழன், 23 ஏப்ரல், 2026

பீன்ஸ் தண்ணிக் குழம்பு

பீன்ஸ் தண்ணிக் குழம்பு



தேவையானவை:- பீன்ஸ் - 200 கிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த துவரம் பருப்புபுளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைவரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி - 1/2 கட்டு.



செய்முறை:- பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய  வெங்காயத்தைத்  தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு, பீன்ஸ், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திங்கள், 20 ஏப்ரல், 2026

அவரைக்காய் இளங்குழம்பு

அவரைக்காய் இளங்குழம்பு



தேவையானவை:- அவரைக்காய் – 150 கிராம்பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1பூண்டு- 2 பல்துவரம் பருப்பு – கால் கப்பெருங்காயம் – 1 சிறுதுண்டுபுளி – நெல்லி அளவுஉப்பு – ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் – அரை  டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்சோம்பு – கால் டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு கொழுந்தாககொத்துமல்லி – 1 கைப்பிடி

 

செய்முறை:- துவரம் பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவி நீளவாக்கில் நறுக்கவும். அவரைக்காயை நரம்பு எடுத்து இரண்டாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து நைத்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து வைக்கவும். கொத்துமல்லியைச் சுத்தம் செய்து கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். 8 கப் தண்ணீரில் அவரைக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வேகப்போடவும். பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடி போட்டு உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். பருப்பை மசித்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்குமுன் கொத்துமல்லியும் தட்டிய பூண்டும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தக்காளிக் குழம்பு

தக்காளிக் குழம்பு



தேவையானவை:- தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 8 பல், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6 உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க பட்டை கிராம்பு - தலா 2. 

 

செய்முறை:- தக்காளிகளை முழுதாக ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவு நீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும். அப்படியே இறக்கி வைத்து ஆறியதும் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டை உரித்து வைக்கவும். வரமிளகாய் , சோம்பு, தேங்காயை அரைத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப்பருப்பையும் தனியாக அரைத்து வைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும்.  கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு தாளித்துப் பெரிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். அதில் உப்புடன் தேங்காய் அரைத்த கலவையைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். சில நிமிடம் கொதித்தபின் கசகசா முந்திரி அரைத்த கலவையைச் சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்த்து கொதித்து  எண்ணெய் பக்கவாட்டில் பிரிய ஆரம்பிக்கும்போது இறக்கவும்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு

மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு


தேவையானவை:- மாங்கொட்டைப் பருப்பு – 2 (மாங்காய் கொட்டையை உரித்து காயவைத்த பருப்பு) , சின்ன வெங்காயம் – 10 உரித்து பொடியாக நறுக்கவும்வெள்ளைப்பூண்டு – 8 உரித்துப்பொடியாக நறுக்கவும்தக்காளி – 1 பொடியாக நறுக்கவும்புளி – 1 நெல்லி அளவுஉப்பு – 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி – 1 சிட்டிகைசாம்பார் பொடி – 2 டீஸ்பூன் அல்லது மிளகாய் – 6 மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு சீரகம் து.பருப்பு தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைக்கவும்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மாங்கொட்டைப் பருப்பை வெந்நீரில் ஊறப்போடவும். புளியையும் உப்பையும் ஊறவைத்து 3 கப் சாறெடுத்து சாம்பார் பொடி அல்லது அரைத்த மசாலா பொடிபோட்டுக் கரைத்து வைக்கவும். மாங்கொட்டைப் பருப்பை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து வெந்தயம் போட்டுச் சிவந்ததும் வெங்காயம் வெள்ளைப்பூண்டு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதங்கியதும் அரைத்த மாங்கொட்டைப் பருப்பு விழுதைப் போடவும். அரை நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி போட்டு மசாலாப்பொடியோடு கரைத்து வைத்த புளியை ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

சனி, 11 ஏப்ரல், 2026

கறிவடகக் குழம்பு

கறிவடகக் குழம்பு


தேவையானவை:- கறிவடகம் - 20, சின்ன வெங்காயம் - 10வெள்ளைப்பூண்டு - 5தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைதேங்காய்த் துருவல் –கால் கப்,  எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். 2 கப் நீரில் புளியை ஊறவைத்துச் சாறெடுத்து அதில் உப்புமிளகாய்த்தூள்மஞ்சள்தூள் மல்லித்தூள் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு வெந்தயம் சீரகம் போட்டுத் தாளித்துக் கறிவடகம் கருவேப்பிலையை வறுக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டுப் பெருங்காயப் பொடியைத் தூவி வறுத்து அதில் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காயை அரைத்துச் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.

புதன், 8 ஏப்ரல், 2026

சும்மா குழம்பு

சும்மா குழம்பு


தேவையானவை:- சின்ன வெங்காயம் - 10தக்காளி - 1பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்,  பூண்டு - 2 பல்புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து வட்டமாக நைசாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் சோம்பு, வெந்தயம் போடவும். அதில் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போடவும். 2 நிமிடம் வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றவும். பொங்கி நுரைத்து வரும்போது இறக்கி சூடாக இட்லி அல்லது சாதத்தோடு பரிமாறவும்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

பாசிப்பயறுக் குழம்பு

பாசிப்பயறுக் குழம்பு


தேவையானவை:- பாசிப்பயறு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், புளி - இரண்டு சுளை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம்  - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை. பூண்டு - ஒரு பல். 

செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில்  வேகவிடவும். வெந்த பயரில் வெங்காயம் தக்காளியை அரிந்து போட்டு உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், சாம்பார் தூள் போடவும். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துப் பூண்டைத் தட்டிப்போட்டு இறக்கவும்.

வியாழன், 2 ஏப்ரல், 2026

வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு

வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு


தேவையானவை:- சின்ன வெங்காயம் - 50 கி, வெள்ளைப்பூண்டு - 50 கி, தக்காளி - 1 பெரியது, சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்கத்தேவையான அளவு 1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு துண்டு, சீரகம் -1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 இணுக்கு, தண்ணீர் - 3 கப்

 

செய்முறை:- வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்., உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்., சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கொதித்து வந்தவுடன்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்..10 நிமிடம் கழித்துப் பூண்டு வெந்திருக்கிறதா எனப் பார்த்து இறக்கவும். இந்தக் குழம்பும் அப்பளமும் சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு


தேவையானவை:- வாழைக்காய் – 1, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப்பூண்டு – 4, தக்காளி – 1, நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 2 இணுக்கு, புளி – 1 நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன். மஞ்சள் பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- வாழைக்காயைத் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கித் தண்ணீரில் போடவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து குறுக்குவாட்டில் வெட்டவும். தக்காளியைக் கழுவி வெட்டி வைக்கவும்.

 

ஒரு கடாயில் உப்புப் புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம், வெந்தயம், பூண்டு வெங்காயம், தக்காளி, வாழைக்காயைப் போட்டு ஒரு கரண்டியால் நன்கு கலக்கிவிட்டு அடுப்பில் ஏற்றவும். கொதி வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து மூடிபோட்டு வேகவைத்து இறக்கவும். தாளிக்க வேண்டாம்.

வியாழன், 26 மார்ச், 2026

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு


தேவையானவை:- மொச்சை - 1 கப், மாங்காய் வற்றல் - 10, கத்திரி வத்தல் - 8, அவரை வத்தல் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை. , புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- மொச்சையை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்.,கத்திரி வற்றல், அவரை வற்றல்,  தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

திங்கள், 23 மார்ச், 2026

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு


தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோசின்ன வெங்காயம் – 8, வரமிளகாய் - 5வரமல்லி – 2 டீஸ்பூன்சீரகம்மிளகு – தலா ஒரு டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – அரை மூடிதேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்உப்பு - டீஸ்பூன்கடுகுவெந்தயம் – தலா அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- சேனைக்கிழங்கைத் தோல் சீவிக் கால் இஞ்ச் அளவு சதுரத் துண்டுகளாக வெட்டவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வேக விடவும்முக்கால் பதம் வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய்வரமல்லிமிளகுசீரகம்தேங்காயை வதக்கி அரைத்து சின்ன வெங்காயத்துடன் சேனைக்கிழங்கில் போட்டு அரை கப் நீரூற்றி வேக விடவும்வெந்ததும் உப்பு சேர்த்து எண்ணெயில் கடுகுவெந்தயம்கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்

வெள்ளி, 20 மார்ச், 2026

புடலங்காய் பொரிச்ச குழம்பு

புடலங்காய் பொரிச்ச குழம்பு


தேவையானவை:- புடலங்காய் -1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 5, சீரகம் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 2 டேபிள்தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

 

 

செய்முறை:- புடலங்காயை விதை நீக்கிக் கட்டம் கட்டமாக வெட்டவும்சின்னவெங்காயத்தையும் சிறிதாக வெட்டவும்ப்ரஷர் பானில் ஒரு கைப்பிடி பாசிப்பருப்புப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , புடலங்காய் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் பச்சை மிளகாய்சீரகம், தேங்காய்த் துருவலை வதக்கி அரைத்து உப்போடு சேர்த்துப் புடலங்காயில் கொட்டி ஒரு கொதி வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

செவ்வாய், 17 மார்ச், 2026

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு


தேவையானவை:- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் - 10, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தைச் சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மில் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும்.

சனி, 14 மார்ச், 2026

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு


தேவையானவை:- மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில்  நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

புதன், 11 மார்ச், 2026

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு


தேவையானவை:- பூசணிக்காய் – 1தயிர் – அரை லிட்டர் பாலை உறைய வைக்கவும். , தேங்காய் – பாதி துருவவும்பச்சைமிளகாய் – 4சீரகம் – அரை டீஸ்பூன்துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைஉப்பு – 1 டீஸ்பூன்தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- பூசணிக்காயைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத்தில் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு அரை கப் நீரூற்றி வேகவிடவும். தயிரைக் கடைந்து வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியைப் பச்சைமிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலோடு சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பூசணிக்காயில் ஊற்றவும். லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்துக் கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.