ஞாயிறு, 18 நவம்பர், 2018

பருப்புப் பொடி.

பருப்புப் பொடி.

தேவையானவை :- துவரம்பருப்பு -  கால் கப், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, பூண்டு - 1 பல், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெறும் வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் வரமிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காய்த்தூள், போட்டுப் புரட்டி பூண்டையும் உப்பையும் போட்டு இறக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்தப் பருப்புப் பொடியைச் சேர்த்து உண்ணலாம்.

புதன், 31 அக்டோபர், 2018

முட்டை தேங்காய்க் குழம்பு.:-

முட்டை தேங்காய்க் குழம்பு.:-

தேவையானவை :- முட்டை 4, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, புளி – 2 சுளை, உப்பு – 1 டீஸ்பூன், அரைக்க :- தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு தலா கால் டீஸ்பூன், ஒரு சின்ன வெங்காயம் ஒரு பூண்டு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்.


செய்முறை:- முட்டைகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி வைக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சாறெடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது உரித்த முட்டைகளைக் கீறிப் போடவும். இரு நிமிடங்கள் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து இன்னும் ஒரு கொதி வைத்து இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.
  

சுரைக்காய் கடலைப்பருப்பு மசாலாக் கூட்டு.

சுரைக்காய் கடலைப்பருப்பு மசாலாக் கூட்டு.

தேவையானவை :- சுரைக்காய் -1, கடலைப்பருப்பு - 50 கி, வெங்காயம் - 1, தக்காளி - 1, சாம்பார்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, பச்சைமிளகாய் - 2, கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன். ஆம்சூர் - கால் டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:- கடலைப்பருப்பைக் கழுவி அரை கப் தண்ணீரில் போட்டு குக்கரில் இரண்டு மூன்று விசில் வேகவைக்கவும். சுரைக்காயைக் கட்டம் கட்டமாக நறுக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியையும் நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். குக்கரில் வெந்த கடலைப்பருப்பின் மேல் சுரைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் , சாம்பார் பொடி, கரம் மசாலாபொடி, ஆம்சூர், உப்பு போட்டு நன்கு கலக்கி விட்டு சீரகத்தை எண்ணெயில் தாளித்துப் போட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். ஆறியதும் லேசாக மசித்து சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு பரிமாறவும்.
  

செவ்வாய், 30 அக்டோபர், 2018

சிக்கன்/கோழி குருமா. :-

சிக்கன்/கோழி குருமா. :-

தேவையானவை :- கோழி – அரை கிலோ, பெரியவெங்காயம் – 1, தக்காளி – 1,  அரைக்க :- பச்சைமிளகாய் – 6, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், சின்னவெங்காயம் – 6, தேங்காய் – 1 துண்டு, பொட்டுக்கடலை- 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2. இலை. உப்பு – ஒரு டீஸ்பூன். கருவேப்பிலை, கொத்துமல்லி சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை :- கோழியை ஒரு முறை கழுவிப் பிழிந்து குக்கரில் போட்டு சிறிது நீர் சேர்த்து 3 விசில் வேகவைத்து இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். தக்காளி, பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு  ஏலக்காய் இலை போட்டுத் தாளித்துப் பெரிய வெங்காயம் தக்காளியை நன்கு சுருள வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப் போட்டு சிறிது திறக்கிவிட்டு உப்பு சேர்த்து வேகவைத்த கோழிக்கறியைச் சேர்க்கவும். திரும்ப குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கி கருவேப்பிலை கொத்துமல்லி தூவி பரோட்டாவுடன் பரிமாறவும்.
  

திங்கள், 29 அக்டோபர், 2018

ஜவ்வரிசிப் பாயாசம்.

ஜவ்வரிசிப் பாயாசம்.


தேவையானவை :- ஜவ்வரிசி - 100 கி, பால் - 2 கப், ஜீனி - 150 கி நெய் - 2 டீஸ்பூன், முந்திரி , கிஸ்மிஸ் - தலா 10, ஏலக்காய் - 2.

செய்முறை :- நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ஜவ்வரிசியை வறுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். போதாவிட்டால் இன்னும் சிறிது நீர் ஊற்றி வேக வைத்து கண்ணாடிப் போல் வெந்ததும் ஜீனியும் பாலும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போட்டு வறுத்த முந்திரி கிஸ்மிஸைச் சேர்த்துப் பரிமாறவும்.


  

வெள்ளி, 26 அக்டோபர், 2018

பொடி உருளைப் பொடிமாஸ்.

பொடி உருளைப் பொடிமாஸ்.

தேவையானவை :- பொடி உருளைக்கிழங்கு - கால் கிலோ ( இது கொண்டக்கடலை சைஸில் பொறுக்கி எடுக்கவேண்டும். )  வரமிளகாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், கடுகு , உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- பொடி உருளைக்கிழங்குகளைக் கழுவி குக்கரில் இரண்டு கப் தண்ணீரில் வேகப்போட்டுத் தோலுரித்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சோம்பு போட்டுப் பொரிந்ததும் மிளகாய்த்தூள் உப்பு போட்டு உடனே உரித்த உருளைக்கிழங்குகளையும் போட்டு நன்கு பிரட்டி விடவும். சிம்மில் வைத்து பத்து நிமிடம் புரட்டிப் புரட்டிவிட்டு வேகவிட்டு மொறுமொறுப்பானதும் இறக்கவும். தயிர்சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

திங்கள், 22 அக்டோபர், 2018

சௌசௌ கடலைப்பருப்புக் காரக்கூட்டு. :-

சௌசௌ கடலைப்பருப்புக் காரக்கூட்டு. :-

தேவையானவை :- சௌ சௌ – 1, கடலைப்பருப்பு – கால் உழக்கு, பெரிய வெங்காயம் – பாதி, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுந்து சீரகம் – தலா அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு.


செய்முறை :- சௌ சௌவைத் தோல் சீவி கட்டம் கட்டமாக வெட்டவும். பெரிய வெங்காயத்தையும் நைஸாக வெட்டவும்.  குக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் சௌ சௌ, பெரிய வெங்காயம், சாம்பார் பொடி போட்டு ஒரு விசில் வைத்து  இறக்கவும். உப்பைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்துக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 
  

புடலங்காய் இளங்கூட்டு :-

புடலங்காய் இளங்கூட்டு :-

தேவையானவை :- புடலங்காய் -1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 5, சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 , உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு.


செய்முறை :- புடலங்காயை விதை நீக்கிக் கட்டம் கட்டமாக வெட்டவும். சின்னவெங்காயத்தையும் சிறிதாக வெட்டவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். ப்ரஷர் பானில் ஒரு கைப்பிடி பாசிப்பருப்புப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , புடலங்காய், பச்சைமிளகாய், சீரகம் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். ஆறியதும் திறந்து உப்பு சேர்த்து நன்கு கலக்கி உபயோகிக்கவும். 

வெண்டைக்காய் சாம்பார்.

வெண்டைக்காய் சாம்பார்.

தேவையானவை :-

வெண்டைக்காய் - கால்கிலோ, சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் -  துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில்  ஊறவைத்து சாறெடுத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்க்கவும் . எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து பெருங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும். இதில் வெண்டைக்காயை இரு நிமிடம் வதக்கி அதன் பின் சின்னவெங்காயம் தக்காளி சேர்க்கவும். இன்னுமொரு நிமிடம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்க விடவும். 3 நிமிடங்கள் கொதித்ததும் பருப்பை  மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொடிமாஸ்.

சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொடிமாஸ்.

தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1அல்லது சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, வரமிளகாய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - கால் டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 1டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகவைத்து தோலுரித்து உதிர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் இரண்டாகக் கிள்ளிய வரமிளாய், பச்சைமிளகாய் கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து உதிர்த்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் போட்டு நன்கு கலக்கி வற்றல் குழம்பு / புளிக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

புதன், 17 அக்டோபர், 2018

புடலங்காய் கோளா.

புடலங்காய் கோளா.

தேவையானவை :- புடலங்காய் - 1, துவரம் பருப்பு - அரை உழக்கு, பெரிய வெங்காயம் - 1, அரைக்க :- வரமிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து,  - தலா ஒரு டீஸ்பூன். சோம்பு - கால் டீஸ்பூன்.



செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் . புடலையை விதை இல்லாமல் மெல்லிசாக கட்டமாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.  ஊறவைத்த பருப்பை நீரைக் களைந்து மிளகாய், சோம்புடன் பெரு பெருவென அரைத்து வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் புடலையைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதில் அரைத்த பருப்பு விழுதையும் போட்டு கிளறவும். சிம்மில் வைத்து மூடி போட்டு அவ்வப்போது கிளறி கால் மணி நேரம் வேகவைத்து உதிரியானதும் இறக்கவும்.  சாம்பார் சாதம், அவியல் சாதம்,  தயிர்சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
  

திங்கள், 15 அக்டோபர், 2018

புதினா சட்னி .டைப் - 1.

புதினா சட்னி. டைப் - 1.

தேவையானவை :-

புதினா - 1 கட்டு. வரமிளகாய் - 3, சின்னவெங்காயம் - 6,  தக்காளி - 1, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- புதினாவை சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயம் தக்காளியை துண்டுகள் செய்யவும். மிக்ஸியில் புதினா, வரமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி போட்டு நன்கு அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி உபயோகிக்கவும். இதை தோசை, இட்லி, சப்பாத்தி ப்ரெட் போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம். 
  

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாகற்காய் மசாலா.

பாகற்காய் மசாலா :-

தேவையானவை :- பாகற்காய் - 250 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி 1, பூண்டு - 4, புளி - 2 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், சாம்பார் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, வெல்லம் - வேர்க்கடலை அளவு துண்டு.

செய்முறை :- பாகற்காய்களை நான்காகக் கீறி அதில் விதை நீக்கி கட்டம் கட்டமாக நறுக்கவும். பெரியவெங்காயம் தக்காளி பூண்டை சுத்தம் செய்து துண்டுகள் செய்யவும். புளியைக் கரைத்து சாம்பார்தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பாகற்காயை வதக்கவும் இரு நிமிடங்கள் வதக்கியபின்பு பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி போட்டு வதக்கவும். இரு நிமிடங்கள் கழித்து புளிக்கரைசலை ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். சுண்டி வரும்போது வெல்லதைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இது தயிர்சாதத்துடன் சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்.
  

வியாழன், 11 அக்டோபர், 2018

காளான் பிரியாணி.

காளான் பிரியாணி.
தயிர் வெங்காயம்.

தேவையானவை :- காளான் - 1 பாக்கெட், பாசுமதி அரிசி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பொதினா கொத்துமல்லித்தழை - 1 கைப்பிடி, பச்சைமிளகாய் - 2, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை தலா - 2, சோம்பு - அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை :- காளானை சுத்தம் செய்து நான்காக நறுக்கி கொதிநீரில் போட்டு அடுப்பை அணைத்து  3 நிமிடம் வைத்து வடிகட்டவும். பாசுமதி அரிசியைக் களைந்து வைக்கவும். வெங்காயம் தக்காளியை நறுக்கவும். பொதினா கொத்துமல்லித்தழையையும் பொடியாக நறுக்கவும்.

ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை போட்டுத் தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டுத் தண்ணியாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டுச் சிவக்கும் வரை வதக்கி தக்காளி, காளான், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு நன்கு பிரட்டவும். அதில் அரிசியைப் போட்டு பொதினா கொத்துமல்லித்தழையைப் போட்டு உப்பையும் போட்டு நன்கு கலக்கி விடவும். தேங்காய் பாலை ஊற்றி இன்னும் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். அருமையான காளான் பிரியாணி சுடச் சுட ரெடியாகி இருக்கும்.

தயிர்ப்பச்சடி :- ஒரு பெரிய வெங்காயத்தை நான்காக வெட்டி அதை நைஸாக அரிந்து ஒரு கப் தயிரில் போட்டு கால் டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
  

செவ்வாய், 9 அக்டோபர், 2018

காராமணி (தட்டைப்பயிறு ) மசாலா .

காராமணி (தட்டைப்பயிறு ) மசாலா .

தேவையானவை :- காராமணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, சிறிது, உப்பு - அரை டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தேவையானவை :- காராமணியை லேசாக வறுத்து குக்கரில் நாலைந்து விசில் வரும்வரை வேகவிடவும். பெரியவெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து அரைத்த பெரியவெங்காயம் போட்டு வதக்கவும். அதிலேயே இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கி வாசம் வந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து திறக்கி அரைத்த தக்காளியை ஊற்றவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த காராமணியைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சப்பாத்தி, நான், ருமாலி ரொட்டி பராத்தாவுடன் தொட்டுக் கொள்ளலாம்.


  

கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு.

கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு.


தேவையானவை. :-

பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 6, தக்காளி - 1, சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லி அளவு, உப்பு - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் வெந்தயம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு.

செய்முறை. :- கத்திரிக்காயைக் காம்பு வெட்டி நான்காகக் கீறிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பூண்டை உரித்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும். புளியை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். மஞ்சள்தூள், சாம்பார் தூள் கலந்து வைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் சீரகம் பெருங்காயம் போட்டுத் தாளித்து  கத்திரிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு பிரட்டி சாம்பார்பொடி மஞ்சள் பொடி போடவும்.நன்கு பிரட்டி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்ததும் மூடி போட்டு சிம்மில் பத்துநிமிடம் வைத்து ஒரு சிட்டிகை சீனி அல்லது வெல்லம் கலந்து இறக்கவும்.

சௌ சௌ கூட்டு அல்லது பீர்க்கங்காய்க் கூட்டு, புடலங்காய்க் கூட்டுடன் சூடான சாத்தோடு பரிமாறவும்.
  

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

கொண்டைக்கடலைக் கத்திரிக்காய்க் குழம்பு.

கொண்டைக்கடலை கத்திரிக்காய்க் குழம்பு.

தேவையானவை :- கறுப்புக் கொண்டைக்கடலை  - அரை கப், கத்திரிக்காய் - 2, சின்ன வெங்காயம் - 6, பூண்டு - 2 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை. புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன். அரைக்க :- சோம்பு, சீரகம், கசகசா - தலா கால் டீஸ்பூன், தேங்காய் -  ரெண்டு இஞ்ச் துண்டு, தாளிக்க :- கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை  - 1 இணுக்கு, கொத்துமல்லி - அலங்கரிக்க.

செய்முறை :- கறுப்புக் கொண்டைக்கடலையைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் சிறிது உப்புப் போட்டு 3 விசில் வேகவிடவும். உப்புப் புளியைக் கரைத்து சாம்பார்தூளையும் மஞ்சள் தூளையும் போட்டு வைக்கவும்.  கத்திரிக்காய்  , வெங்காயம்,பூண்டு, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசா, சோம்பு , சீரகம் ஒரு பல் பூண்டு, ஒரு சின்னவெங்காயம் போட்டு அரைத்து வைக்கவும்.

பானில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சீரகம், வெந்தயம் தாளித்து கருவேப்பிலை, கத்திரிக்காய் , வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும் வதங்கியதும் புளி கரைத்த சாம்பார்பொடிக் கலவையை ஊற்றி வேக விடவும். நன்கு கொதித்ததும் கொண்டைக்கடலையைச் சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் அரைத்த தேங்காய்க் கலவையைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்துமல்லித்தழை தூவி சூடான சாதத்தோடு   பரிமாறவும். புடலங்காய்த்துவட்டல் இதற்கு தொட்டுக் கொள்ளலாம்.
 

வெள்ளி, 5 அக்டோபர், 2018

வெந்தயக்கீரை இளங்குழம்பு.


.
தேவையானவை :-


வெந்தயக்கீரை - 1கட்டு.வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, சின்னவெங்காயம் - 6, தக்காளி - 1, புளி  - 2 சுளை, உப்பு - ஒரு டீஸ்பூன். தாளிக்க :- கடுகு,உளுந்து சீரகம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் -  1 டீஸ்பூன்.


செய்முறை :-


வெந்தயக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி வைக்கவும். வேகவைத்த துவரம் பருப்பில் கீறிய பச்சை மிளகாய், இரண்டாய் நறுக்கிய சி வெங்காயம், தக்காளி போட்டு கீரையையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி அதில் சாம்பார் தூளையும் போடவும். நன்கு கொதித்துப் பச்சை வாடை போனதும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் தாளித்துப் போடவும். விரும்பினால் சிறிது சோம்பும் தாளிக்கலாம்.

  

சன்னா ( கருப்புக் கொண்டைக்கடலை) மசாலா.

சன்னா மசாலா :-

தேவையானவை :- கருப்புக் கொண்டைக்கடலை - 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், சோம்பு -  அரை  டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று., உப்பு - அரை டீஸ்பூன். சீனி - 1 சிட்டிகை.

செய்முறை :- கொண்டக்கடலையைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து பிரஷர் பானில் போட்டு உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கருவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டையும் போட்டு சிவக்கும்படி வதக்கவும். அதில் சீனி சேர்த்து மிளகாய், மல்லி பொடியைப் போட்டு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த சன்னாவைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். அலங்கரிக்க பொடியாக அரிந்த வெங்காயம் கொத்துமல்லித் தழை தூவவும். சூடான ரொட்டி, சப்பாத்தி, புல்கா, நான் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
  

புதன், 3 அக்டோபர், 2018

சிக்கன் பெப்பர் சூப். - கோழி மிளகு சூப்.


சிக்கன் க்ளியர் சூப்.


தேவையானவை :- சிக்கன் துண்டுகள் - 10, மிளகு - 15, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தண்ணீர் - 2 கப்.

ஒரு ப்ரஷர் பானில் சிக்கன் துண்டுகளைக் கழுவிப் போட்டு அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். மிளகையும் சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்துப் போடவும். உப்பை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும். சூடாக குடிக்கக் கொடுக்கவும். சளித்தொல்லைக்கு நல்லது.
  

சௌ சௌ பால் கூட்டு.

சௌ சௌ பால் கூட்டு :-

தேவையானவை :- சௌ சௌ  ( மேரக்காய் /பெங்களூர் கத்திரிக்காய் ) - 1. பாசிப்பருப்பு - 1 கைப்பிடி, சீரகம் - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 4, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், கருவேப்பிலை., சீனி - 1 சிட்டிகை, பால் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- சௌ சௌவைத் தோல் சீவி சின்ன சதுரங்களாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தையும் தோலுரித்து சதுரமாக நறுக்கவும். பச்சைமிளகாயை வகிர்ந்து கொள்ளவும். ஒரு ப்ரஷர் பானில் பாசிப்பருப்பைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். அதில் கால் டீஸ்பூன் சீரகம், வகிர்ந்த பச்சை மிளகாய், வெங்காயம், சௌ சௌவைப் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி அதில் உளுந்து, சீரகம் கருவேப்பிலை தாளித்துப் போடவும். இதில் சீனியையும் பாலையும் கலந்து நன்கு கலக்கி சூடான சாதத்தில் நெய் போட்டுப் பரிமாறவும். அல்லது வத்தக்குழம்பு சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
  

திங்கள், 1 அக்டோபர், 2018

பருப்பு போளி & தேங்காய் போளி.

பருப்பு போளி & தேங்காய் போளி. :-

தேவையானவை :-

மைதா - 2 கப், தேங்காய் துருவியது - ஒரு கப், கடலைப்பருப்பு - 1 கப்,  வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய் - 6 பொடிக்கவும் , நெய் - 2 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் - 200 கி , மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை :- மைதாவில் உப்பும் மஞ்சள் தூளும் போட்டு நன்கு கலக்கி முக்கால் கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பிசையவும். அதன்மேல் நல்லெண்ணெய் ஊற்றி 4 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.

 வெல்லத்தைப் பொடிக்கவும். தேங்காயைத் திருகி முக்கால் கப் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். சுருண்டு வரும்போது இறக்கி சிறிது நெய்யும் ஏலப்பொடியும் போடவும்.

கடலைப்பருப்பைக் கிள்ளுபதமாக வேகவைத்து வெல்லத்துடன் லேசாக கரைந்ததும் கிரைண்டரில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். இதில் ஏலப்பொடியும் நெய்யும் போட்டு வைக்கவும்.

மைதாமாவை இரண்டாகப் பிரிக்கவும். ஒன்றில் தக்காளி அளவு உருண்டை எடுத்து கிண்ணம்போல் செய்து அதில் தேங்காய்ப் பூரணத்தை வைத்து உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து தோசைக்கல்லில் நெய்யும் நல்லெணெயும் கலந்து சுடவும். இதற்கு மைதாவில் ஊற்றிய எண்ணெயையே எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் பருப்பு பூரணத்தையும் உள்ளே வைத்து சப்பாத்திபோல் திரட்டி தோசைக்கல்லில் வேகவைத்து எடுக்கவும். வாழை இலையிலும் தட்டி வேகவைக்கலாம். சூடான சுவையான பருப்பு & தேங்காய் போளிகள் தயார். நெய் சிறிது விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



  

புதன், 26 செப்டம்பர், 2018

பீர்க்கங்காய் கூட்டு.

பீர்க்கங்காய்க் கூட்டு.

தேவையானவை :- பீர்க்கங்காய் -  1, பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும். சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க - உளுந்து , சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளவும். எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒரு ப்ரஷர் பானில் அரை கப் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு, அதன் மேல் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், தோல் சீவி கட்டமாக அரிந்த பீர்க்கங்காய் போட்டு ஒரு விசில் வைக்கவும்.

வெந்ததும் இறக்கி உப்பு போட்டு லேசாக மசிக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கலக்கி உபயோகிக்கவும்.