இதை சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி போட்டு வதக்கிப் புளிக்குழம்பு போல வைத்துக் கடைசியில் வெந்த துவரம்பருப்பைப் போட்டு இறக்கலாம். இது இன்னொரு டைப்பில் பருப்புகளை ஊறவைத்துத் தேங்காய் சோம்போடு அரைத்துச் செய்திருக்கிறேன்.
தேவையானவை :- கத்திரிக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் - 2 இன்ச் துண்டு, வரமிளகாய் - 6, மல்லி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 1, உப்பு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க :- கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.
செய்முறை:- கத்திரிக்காயைத் துண்டங்களாக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரில் ஊறப்போடவும். தேங்காயைத் துருவி அத்துடன் வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, ஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அதில் கத்திரிக்காயையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். உப்புப் புளியை ஒரு டம்ளர் நீரில் நன்கு கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். வெந்து கொதிக்கும் போது அரைத்த மசாலாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மசாலா வாடை போக வெந்து குழம்பு நல்ல மணம் வரும்போது இறக்கவும். இது சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
What to do with soaked Thor dhal and Chana dhal.
பதிலளிநீக்குஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும்.
பதிலளிநீக்கு