வியாழன், 30 மே, 2024

19.ரஸ்க் குல்ஃபி

19.ரஸ்க் குல்ஃபி


தேவையானவை:- ரஸ்க் – 5, பால் – ஒரு லிட்டர், முந்திரி பாதாம் – உடைத்தது ஒரு கப், சீனி, அரை கப். ரோஸ் எசன்ஸ் – சிறிது.

செய்முறை:- ரஸ்கின் ஓரங்களை உடைத்துவிட்டு சிறிது காய்ச்சிய பாலில் ஊறவைக்கவும். மிச்சப் பாலை நன்கு வத்தக் காய்ச்சவும். காயும் பாலில் சீனி சேர்த்துக் கரைந்ததும் அரைப்பங்காகக் குறுகியதும் மசித்த ரஸ்கைச் சேர்த்து இறக்கவும். உடைத்த முந்திரி பாதாம், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 26 மே, 2024

18.ரஸ்க் கஸ்டர்ட்

18.ரஸ்க் கஸ்டர்ட்


தேவையானவை:- ரஸ்க் – 4 ஸ்லைஸ், பால் – அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – ஒரு டேபிள் ஸ்பூன். பாதாம் எஸன்ஸ் – சில துளிகள்.

செய்முறை:- ஓரங்களை உடைத்து விட்டு ரஸ்கைக் காய்ச்சிய பால் சிறிதுவிட்டு நனைத்துக் கூழாக்கவும். மிச்சப் பாலில் கஸ்டர்ட் பவுடர் போட்டுக் காய்ச்சவும். நன்கு கொதித்ததும் சீனி சேர்த்துக் கிளறி ரஸ்க் கூழையும் சேர்த்துக் கிளறி ஆறவிடவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்

வியாழன், 23 மே, 2024

17.ரஸ்க் ஃப்ரூட் புட்டிங்

17.ரஸ்க் ஃப்ரூட் புட்டிங்



தேவையானவை:- ரஸ்க் – 4, ரவை – அரை கப், பால் – ஒன்றேகால் கப், சீனி அரை கப், நெய் – கால் கப், ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு , பச்சை திராட்சை – அரைகப், டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் தலா – 2 டேபிள் ஸ்பூன், பேரீச்சம்பழம் – 2, முந்திரி, பாதாம் தலா – 4.ஃப்ரூட் எஸன்ஸ் – சில துளிகள்.

செய்முறை:- கால் கப் பாலில் ரஸ்கை நனைத்து வைக்கவும். இரண்டு டீஸ்பூன் சீனியில் துண்டாக்கிய ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு, பச்சை திராட்சைகளைப் புரட்டி வைக்கவும். அதில் டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸையும் சேர்த்து வைக்கவும். பேரீச்சையைக் கட்டமாக அரிந்து போடவும். ஒரு பானில் நெய்யைக் காயவைத்து ஒடித்த முந்திரி பாதாமை வறுத்தெடுத்தபின் ரவையைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஒரு கப் பாலில் வேகவிடவும். நன்கு வெந்ததும் சீனிபோட்டுக் கரைந்ததும் மசித்த ரஸ்கைச் சேர்த்துக் கிளறவும். பழத்துண்டுகள், வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டுப் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் ஃப்ரூட் எஸன்ஸ் விட்டுக் கலக்கவும்.

திங்கள், 20 மே, 2024

16.ரஸ்க் புதினா பகோடா

16.ரஸ்க்  புதினா பகோடா



தேவையானவை:- ரஸ்க் – 5 ஸ்லைஸ், கடலை மாவு – கால் கப், புதினா – ஒருகைப்பிடி, பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பச்சைமிளகாய் – 2,  இஞ்சி – சிறு துண்டு, கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது, சோம்பு – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலை மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, கருவேப்பிலை கொத்துமல்லி தூவி உப்பு, சோம்பு, பொடித்த ரஸ்க் சேர்த்து நன்கு கலக்கவும். லேசாகத்தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து எண்ணெயைக் காயவைத்துக் கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும். 

வியாழன், 16 மே, 2024

15.மியூஸ்ஜெஸ்

15.மியூஸ்ஜெஸ்


தேவையானவை:- வட்ட ரஸ்க் – 10 வெண்ணெய் அல்லது மார்க்கரின் – அரை கப், பலவண்ண சீரக, சோம்பு மிட்டாய்கள் – ஒரு கப்

செய்முறை:- வட்ட ரஸ்கை ஒரு ட்ரேயில் பரப்பி அதன் மேல் மார்கரின் அல்லது வெண்ணெயைத் தடவ வேண்டும். இதன் மேல் அந்தப் பலவண்ண சீரக சோம்பு மிட்டாய்களை அடர்த்தியாகத் தூவிக் கொடுக்கவும். இதில் ஜாம், சீஸ் தடவி ஸ்ட்ராபெர்ரீஸைப் பரப்பியும் உண்ணலாம்.


சனி, 11 மே, 2024

14.ஹேகல்ஸ்லாக்

14.ஹேகல்ஸ்லாக்


தேவையானவை:- ரஸ்க் – 4, குளிர்ந்த வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், குளிர்ந்த டார்க் சாக்லேட் – துருவியது கால் கப்

செய்முறை:- ரஸ்கை ஒரு ட்ரேயில் பரப்பி மேலே வெண்ணெயைத் தடவவும். ஃப்ரீஸரில் வைத்த டார்க் சாக்லேட்டை எடுத்து அதன் மேல் துருவி ஸ்ப்ரே செய்து பரிமாறவும்.

வியாழன், 9 மே, 2024

13.அங்க்லாமேட்

13.அங்க்லாமேட்


தேவையானவை:- பொடித்த ரஸ்க் – 2 கப், ஆப்பிள் சாஸ் – அரை கப், க்ரீம் – அரை கப், வனிலா எசன்ஸ் – சில துளிகள், மசிக்கப்பட்ட ப்ளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி

செய்முறை:- க்ரீமை நன்கு ஃப்ளஃபியாக வரும்வரை அடிக்கவும். சாஸ், க்ரீம், பழங்கள் எல்லாவற்றையும் அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.  ஒரு பலூடா க்ளாஸில் முதலில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சாஸ், அதன் மேல் இரண்டு டீஸ்பூன் க்ரீம் அதன் மேல் பொடித்த ரஸ்க், இப்படியே மாற்றி மாற்றித் தூவி வரவும். மேலே மசிக்கப்பட்ட ப்ளம்ஸ் ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 5 மே, 2024

12.கேவ்ரா ரஸ்க்

12.கேவ்ரா ரஸ்க்


தேவையானவை:- ரஸ்க் – 8, எம் டி ஆர் பாதாம் மிக்ஸ் – 2 டீஸ்பூன், குங்குமப்பூ/கேவ்ரா -1 சிட்டிகை, பால் – 2 கப், சீனி – 4 ஸ்பூன்.

செய்முறை:- பாலில் குங்குமப்பூவைப் போட்டுப் பொன்னிறமாக மாறும்வரை காய்ச்சவும். பாதியாக பால் சுண்டியதும் இதில் சர்க்கரையைப் போட்டுக் கரைந்ததும் பாதாம் மிக்ஸ் சேர்த்து இறக்கி ஆறவிடவும். ரஸ்குகளைப் பரப்பி இந்தப் பாலை ஊற்றிப் பரிமாறவும்.

வியாழன், 2 மே, 2024

11.ரஸ்க் ஜாமூன்

11.ரஸ்க் ஜாமூன்


தேவையானவை:- மினி ரஸ்க் – 20. சீனி – ஒரு கப், ரோஸ் எசன்ஸ் – சிறிது, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன். நெய் – சிறிது.

செய்முறை:- சீனியுடன் கால் கப் நீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும். ஜீரா கொதிக்கும்போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி லேசாக ஆறியதும் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். ரஸ்குகளின் மேல் நெய்யைத் தடவி ஒரு தோசா பானில் போட்டு லேசாகப் பொன்னிறமானதும் ஒரு ட்ரேயில் எடுத்து அடுக்கவும். வெதுவெதுப்பான ஜீராவை ஊற்றி ரஸ்க் ஊறியதும் பரிமாறவும்