எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

மட்டர் (பட்டாணி) பனீர் க்ரேவி

மட்டர் (பட்டாணி) பனீர் க்ரேவி



தேவையானவை :- பச்சைப் பட்டாணி – ஒரு கப் ( உரித்தது ), பனீர் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு  அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- எண்ணெயைக் காயவைத்துப் பனீரை ஒரு இன்ச் துண்டுகள் செய்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை அரைத்து ஊற்றி வதக்கவும். வெங்காயம் மென்மையாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் சீனி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து வதக்கிப் பச்சைப் பட்டாணியைப் போடவும் . ஒரு நிமிடம் வதக்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றி கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். மசாலா கொதிக்கத் துவங்கியதும் பனீர் துண்டுகளைச் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.

வியாழன், 11 டிசம்பர், 2025

கருப்பு உளுந்து சப்ஜி

கருப்பு உளுந்து சப்ஜி



தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப், ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை,சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கறுப்பு உளுந்தம் பருப்பைத் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றிப் ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ( விரும்பினால் ராஜ்மாவையும் முதல் நாள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். ). ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் ( ராஜ்மாவையும் சேர்க்கவும் ). 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கி ஸ்லைஸ் செய்த வெங்காயம் , வெள்ளரிக்காய் இவைகளோடு சப்பாத்தி, ருமாலி ரொட்டி, நான் ஆகியவற்றுக்கு சூடாகப் பரிமாறவும்.

திங்கள், 8 டிசம்பர், 2025

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா



தேவையானவை :- பனீர் - 200 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், கசூரி மேத்தி ( காய்ந்த வெந்தயக்கீரை ) - சிறிது, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மலாய் ( பாலாடை ) - 1 டேபிள் ஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், உப்பு - அரை டீஸ்பூன், பட்டை, இலை - சிறிது.

செய்முறை:- பனீரைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் பட்டை இலை அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போடவும். அதையும் சிறிது நேரம் வதக்கி சிவந்ததும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தக்காளி பேஸ்டை போடவும். உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி பனீரைப் போட்டுப் பாலையும் அரை கப் தண்ணீரையும் ஊற்றவும். சிறிது கொதித்ததும் இதில் கசூரி மேத்தி கரம் மசாலா சேர்த்து இன்னும் சில நிமிடம் வேக வைக்கவும். ( தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். ) இறக்கும்போது மலாயையும் வெண்ணெயையும் போட்டு இறக்கி ரொட்டி, நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, குல்ச்சா, ஜீரா ரைஸுடன் பரிமாறவும்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

தால் ஃப்ரை

தால் ஃப்ரை



தேவையானவை:- துவரம்பருப்பு - 1 கப், பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை - சிறிது. கொத்துமல்லி - சிறிது. 

செய்முறை:-துவரம்பருப்பைக் கழுவிக் குக்கரிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி சீரகம், வரமிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய்,  இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கித் தக்காளியைச் சேர்க்கவும். உப்பையும் போட்டால் தக்காளி சீக்கிரம் மசியும். மசிந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போட்டு எண்ணெய் பிரிந்ததும் வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து ஊற்றவும். கொதித்ததும் காய்ந்த வெந்தயக் கீரை, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.சப்பாத்தி, சாதம், மேத்தி பரோட்டா , நான் , ருமாலி ரொட்டி ஆகியவற்றோடு இது நன்றாக இருக்கும்.

செவ்வாய், 2 டிசம்பர், 2025

கரேலா சப்ஜி

கரேலா சப்ஜி



தேவையானவை :- மிதி பாகற்காய் - 250 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி 1, பூண்டு - 4, புளி - 2 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், ஆம்சூர் – அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன், வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை :- மிதி பாகற்காய்களை முழுதாக நான்காகக் கீறவும். பெரியவெங்காயம் தக்காளி பூண்டை சுத்தம் செய்து துண்டுகள் செய்யவும். அரை டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், கரம் மசாலா, ஆம்சூர், உப்பு, மஞ்சள் தூள் போட்டுச் சுண்ட வதக்கிக் கீறி வைத்துள்ள பாகற்காய்க்குள் திணித்து நூலால் கட்டவும். எண்ணெயைக் காயவைத்து சீரகம், சோம்பு தாளித்துப் பாகற்காயை வதக்கவும். பொன்னிறமாய் வதங்கிச் சுண்டி வரும்போது வெல்லதைப் போட்டு நன்கு கிளறி இறக்கி நூலைப் பிரித்துப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...