எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 செப்டம்பர், 2018

பீர்க்கங்காய் கூட்டு.

பீர்க்கங்காய்க் கூட்டு.

தேவையானவை :- பீர்க்கங்காய் -  1, பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும். சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க - உளுந்து , சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளவும். எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒரு ப்ரஷர் பானில் அரை கப் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு, அதன் மேல் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், தோல் சீவி கட்டமாக அரிந்த பீர்க்கங்காய் போட்டு ஒரு விசில் வைக்கவும்.

வெந்ததும் இறக்கி உப்பு போட்டு லேசாக மசிக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கலக்கி உபயோகிக்கவும்.
  

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சௌ சௌ ( மேரக்காய் = பெங்களூர் கத்திரிக்காய் ) சாம்பார்.



சௌ சௌ சாம்பார்.

தேவையானவை :- சௌ சௌ - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1,பெருங்காயம் - 1 துண்டு.  சாம்பார்தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 2 டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லி தழை - சிறிது.

செய்முறை :- சௌ சௌவைத் தோல் சீவில் ஒரு இஞ்ச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை உரித்து இரண்டாக வெட்டவும். தக்காளியைத் துண்டு செய்யவும். மூன்றையும் வெந்த துவரம்பருப்புடன் ப்ரஷர் குக்கரில் போட்டு மஞ்சள் தூளையும் பெருங்காயத்தையும் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து சாறு எடுத்து உப்பையும் சாம்பார் தூளையும் போட்டு வைக்கவும். வெந்த காயில் இந்த புளிக்கலவையை ஊற்றி இரண்டு கொதி கொதிக்க வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்து சாம்பாரில் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சேர்த்து இறக்கி சூடான சாதம், தோசை, இட்லியுடன் பரிமாறவும்.

    

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

வெண் பூசணிக்காய் சாம்பார்.

பூசணிக்காய் சாம்பார். :-


தேவையானவை :- பூசணிக்கீத்து - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1,பெருங்காயம் - 1 துண்டு.  சாம்பார்தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 2 டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லி தழை - சிறிது.

செய்முறை :- பூசணிக்கீத்தை ஒரு இஞ்ச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை உரித்து இரண்டாக வெட்டவும். தக்காளியைத் துண்டு செய்யவும். மூன்றையும் வெந்த துவரம்பருப்புடன் ப்ரஷர் குக்கரில் போட்டு மஞ்சள் தூளையும் பெருங்காயத்தையும் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து சாறு எடுத்து உப்பையும் சாம்பார் தூளையும் போட்டு வைக்கவும். வெந்த காயில் இந்த புளிக்கலவையை ஊற்றி இரண்டு கொதி கொதிக்க வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்து சாம்பாரில் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சேர்த்து இறக்கி சூடான சாதம், தோசை, இட்லியுடன் பரிமாறவும்.
  

திங்கள், 17 செப்டம்பர், 2018

மோர் மிளகாய் வத்தல்.

மோர் மிளகாய் வத்தல்.

தேவையானவை :-

ஊசி மிளகாய் - கால் கிலோ,புளித்த தயிர் - ஒரு கப் , உப்பு - 2 டீஸ்பூன், ( 10 கிராம்) , எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு. ( அரை கப் )

செய்முறை :-  மிளகாய்களை காம்பு விட்டு லேசாக மேலும் கீழும் கீறிக்கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து உப்பு சேர்த்து பச்சைமிளகாய்களைப் போட்டு நன்கு உரசவும். இரவு உரசி வைத்து மறுநாள் வெய்யிலில் எடுத்துக் காய வைக்கவும். மிச்ச மோரையும் வெய்யிலில் வைக்கவும். அன்று  மாலையும் மிளகாய்களை அதே மோரில் போட்டு நன்கு கலக்கி ஊறவைக்கவும். மறுநாளும் திரும்பக் காய வைக்கவும். இப்படி மோர் தீரும்வரை காயவைத்து நன்கு சுக்காகக் காய்ந்ததும் எடுத்துக் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். தேவையான பொழுது எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் பக்குவமாகப் வறுத்து உபயோகிக்கவும்.
  

புதன், 12 செப்டம்பர், 2018

வாழைத்தண்டு இளங்கூட்டு.

வாழைத்தண்டு இளங்கூட்டு.
தேவையானவை :-

இளம் வாழைத்தண்டு - 1 ( நார் நீக்கி பல்லுப்பல்லாக நைஸாக நறுக்கவும். ) பாசிப்பருப்பு - 1 சின்ன வெங்காயம் - 6. சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 ( விரும்பினால் ) , இளம் கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை;- குக்கரில் அரை கப் தண்ணீரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் சீரகம், கீறிய பச்சைமிளகாய், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் போட்டு அதன் மேல் வாழைத்தண்டைப் பரப்பவும். ஒரு விசில் வெந்ததும் இறக்கி உப்பும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு கலக்கி மசிக்கவும். இது வயிற்றுப் புண் வாய்ப்புண்ணுக்கு மருந்து. பச்சைமிளகாய் இல்லாமலும் செய்யலாம். காரக்குழம்பு, கெட்டிக் குழம்பு, புளிக்குழம்புக்குத் தொட்டுக்கொள்ள நல்ல பக்க பதார்த்தம். 

இக்கூட்டில் அரை டீஸ்பூன் நெய், சிறிது பால், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் அது வாழைத்தண்டுப் பால் கூட்டு. அதுவும் நன்றாக இருக்கும்.
  

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

முட்டைக் குழம்பு.

முட்டைக் குழம்பு :-


தேவையானவை :-

முட்டை - 3. சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல், தக்காளி - 1. புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், தாளிக்க, கடுகு, வெந்தயம், சீரகம் தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை.

செய்முறை:- முட்டையை 5 நிமிடம் வேகவைத்துத் தோலுரிக்கவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறப்போடவும். வெங்காயம் தக்காளி வெள்ளைப்பூண்டை சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு வெந்தயம் சீரகம் தாளித்து கருவேப்பிலை, வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து இரு நிமிடம் வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். தேவையானால் இன்னும் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்புப்புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் முட்டையைப் போட்டு இரு நிமிடம் கழித்து இறக்கி சூடான சாதத்தில் போட்டுப் பரிமாறவும்.
  

வியாழன், 6 செப்டம்பர், 2018

இட்லிப் பொடி.

இட்லிப் பொடி. :-

தேவையானவை :-

காம்பு நீக்கிய வரமிளகாய் - 100 எண்ணிக்கை, உளுந்தம்பருப்பு - 1 உழக்கு , கடலைப்பருப்பு - கால் உழக்கு, துவரம்பருப்பு - கால் உழக்கு, பெருங்காயம் - 10 துண்டு ( நகம் அளவு தட்டையானது ), உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை - இரண்டு கைப்பிடி., எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:-  ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுந்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். அதேபோல் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் சிவக்க வறுத்து வைக்கவும். கருவேப்பிலையை எண்ணெய் இல்லாமல் வெதுப்பவும். உப்பை வாணலியின் எல்லாப் பக்கமும் படும்படி சிலாத்தி வறுத்துக் கொட்டவும். (ஏனெனில் அடுத்துப் பெருங்காயம் வறுத்து வரமிளகாயை வறுக்கும்போது கமறாமல் இருக்கும்.)  அடுத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை வறுத்து எடுத்து அதே எண்ணெயில் வரமிளகாயைப் போட்டு வறுத்து அடுப்பை அணைத்து அதிலேயே வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு நன்கு திரித்துக் கலந்து  காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். இதில் நெய் உருக்கி ஊற்றியும் சாப்பிடலாம். பொதுவாக நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து சூடான இட்லியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பயண உணவாக இட்லியில் எண்ணெய் மிளகாய்ப் பொடி போட்டுத் தூவியும் எடுத்துச் செல்லலாம்.

டிஸ்கி :- இதில் தனியா அல்லது புளி அல்லது , எள் அல்லது பூண்டு  ஆகியன சேர்த்தும் பொடி தயாரிப்பார்கள். சிலர் அரிசியை சிவக்க வறுத்து அரைத்தும் சேர்க்கிறார்கள்.
  

திங்கள், 3 செப்டம்பர், 2018

முருங்கைக்காய் சாம்பார்:-



முருங்கைக்காய் சாம்பார்.

தேவையானவை.:-

முருங்கைக்காய்  - 200 கி
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-


முருங்கைக்காயை 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.


ப்ரஷர் பானில் முருங்கைக்காயுடன் சி.வெங்காயம் தக்காளி, வேகவைத்த பருப்பு, போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.


ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதத்தில் போட்டு  தேன்குழல் வற்றல் , அப்பளத்துடன்  பரிமாறவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...