எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

சுண்டைக்காய்/வெண்டைக்காய் சூப்

சுண்டைக்காய்/வெண்டைக்காய் சூப்



 

தேவையானவை:- முற்றின வெண்டைக்காய் – 10  அல்லது முற்றின சுண்டைக்காய் – ஒரு கைப்பிடி (  தோராயமாக 30 ) , பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, எண்ணெய் – 1 டீஸ்பூன், சோம்பு – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, பிரிஞ்சி இலை – 1 துண்டு, பட்டை – 1 துண்டு, உப்பு – ½ டீஸ்பூன்

 

செய்முறை:- வெண்டைக்காய் என்றால் கழுவித் துடைத்து நறுக்கிக் கொள்ளவும். சுண்டைக்காய் என்றால் நறுக்கி தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

பாசிப்பருப்பை வேகவைத்து 2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு போடவும், இதில் பிரிஞ்சி இலை பட்டை போட்டு அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சுண்டைக்காய் அல்லது வெண்டைக்காய் போட்டு வதக்கவும் . இரண்டு நிமிடம் வதக்கியபின் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் பொடியைப்போட்டு பருப்பு கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வெந்ததும் உப்பு சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது இது.

 

வியாழன், 27 ஜூலை, 2023

பேபிகார்ன்/ஸ்வீட்கார்ன் சூப்

பேபிகார்ன்/ஸ்வீட்கார்ன் சூப்


 

தேவையானவை:- பேபிகார்ன் என்றால் 2, ஸ்வீட் கார்ன் என்றால் – உதிர்த்தது அரை கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப்,  எண்ணெய் – 1 டீஸ்பூன், சோம்பு – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, கிராம்பு, ஏலக்காய் – தலா 1 உப்பு – ½ டீஸ்பூன், பால் – 1டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- பேபி கார்ன் என்றால் வட்ட வட்டமாக நறுக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு போடவும், இதில் கிராம்பு ஏலக்காய் போட்டு அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் பேபி கார்ன் அல்லது ஸ்வீட்கார்ன் போட்டு வதக்கவும் . இரண்டு நிமிடம் வதக்கியபின் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் பொடியைப்போட்டு பருப்பு கரைத்த தண்ணீரை ஊற்றி உப்புப் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து பரிமாறவும்.

 

புதன், 26 ஜூலை, 2023

கொள்ளு, பார்லி சூப்

கொள்ளு, பார்லி சூப்


தேவையானவை:- வறுத்த கொள்ளுப் பொடி – 1 டேபிள் ஸ்பூன், வறுத்த பார்லிப் பொடி – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலைப் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, வெங்காயம், தக்காளி – பொடியாக அரிந்தது – கால் கப், மிளகு சீரகப் பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், மராட்டி மொக்கு, கிராம்பு – தலா 1.

செய்முறை:- ஒரு ப்ரஷர்பானில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மராட்டி மொக்கு, கிராம்பு தாளித்து அதில் பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும். இதில் இரண்டு கப் நீரூற்றி மஞ்சள் தூள், கொள்ளுப் பொடி, பார்லிப் பொடி, கருவேப்பிலைப் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி ஒரு விசில் வைத்து எடுக்கவும். ஆறியதும் திறந்து மிளகு சீரகப் பொடி போட்டுக் கலக்கி வெதுவெதுப்பாக அருந்தக் கொடுக்கவும். வெயிட் லாஸுக்கான சூப் இது.

 

வெள்ளி, 21 ஜூலை, 2023

கேபேஜ் சூப்

கேபேஜ் சூப்


 

தேவையானவை :- கோஸ் – கால் பாகம், உருளைக்கிழங்கு – 1, பால் – 2 கப், மைதா – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 2 பல், பெரிய வெங்காயம் – 1, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயத்தை குக்கரில் ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை  உருக வைத்து அதில் மைதாவைப் போட்டு வறுக்கவும். அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துக் கண்ணாடி போல் ஆனதும் கோஸ் கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் இறக்கவும். இதில் உப்பு மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். 

 

திங்கள், 17 ஜூலை, 2023

ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்

ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்


 

தேவையானவை :- வெங்காயத்தாள் – 1 கட்டு, உருளைக்கிழங்கு சின்னம் – 1, பூண்டு – 2 பல், ஆரிகானோ – கால் டீஸ்பூன், சோயா சாஸ் – கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், தண்ணீர் – 4 கப், கொத்துமல்லித்தழை – சிறிது. க்ரீம் – சிறிது விரும்பினால்.

 

செய்முறை:- வெங்காயத்தாளைச் சுத்தம் செய்து அலசி பொடிப் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல்சீவிப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயத்தாள், உருளையைப்போட்டு வதக்கி 4 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதைத் திரும்ப பானில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் சோயா சாஸ், உப்பு, ஓரிகானோ, கொத்துமல்லித்தழை, உப்பு போட்டு இறக்கி மிளகுத்தூள் , க்ரீம் சேர்த்து சூப் ஸ்டிக்குகளுடன் & வெண்ணெயில் வறுத்த ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறவும்.

 

வியாழன், 13 ஜூலை, 2023

ப்ராக்கோலி/வயலட் கேபேஜ் சூப்

ப்ராக்கோலி/வயலட் கேபேஜ் சூப்


 

தேவையானவை:- ப்ராகோலி அல்லது வயலட் கேபேஜ் – ½ பாகம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2 உப்பு – ½ டீஸ்பூன், மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன், வெண்ணெய்/க்ரீம் – 1 டீஸ்பூன் விரும்பினால்

 

செய்முறை:- ப்ராகோலி அல்லது வயலட் கேபேஜை துண்டுகளாக்கி பெரியவெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கி குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும். ஆறியதும் திறந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை சூடுபடுத்தி உப்பு சேர்த்து மிளகு தூவி விரும்பினால் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சூப்.


 

செவ்வாய், 11 ஜூலை, 2023

ஓட்ஸ் வெஜ் சூப்

ஓட்ஸ் வெஜ் சூப்


 

தேவையானவை:- ஓட்ஸ் – 50 கி வெங்காயம் – சிறியது 1 – பொடியாக அரியவும்தக்காளி – 1 பொடியாக அரியவும். காரட் , பீன்ஸ் – கால் கப் பொடியாக அரியவும். பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்சீரகம் , மிளகு – பொடித்தது 1 டீஸ்பூன்ஆம்சூர்பொடி – ¼ சிட்டிகைதண்ணீர் – 3 கப்உப்பு – ½ டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஓட்ஸை வேகப் போடவும். காரட், பீன்ஸ், பட்டாணி, தக்காளி வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும்.  வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும் மிளகு சீரகப் பொடியும், ஆம்சூர் பொடியும் போட்டு வெண்ணெய் சேர்த்துக் கலக்கி  இறக்கி ஃப்ரையம்ஸுடன் பரிமாறவும். இதை ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


செவ்வாய், 4 ஜூலை, 2023

சூப்,ரசம், ஷோர்பா, மண்டி வகைகள் குமுதம் சிநேகிதியில்.

மழை குளிருக்கு இதமாக இந்த சூப், ரசம், ஷோர்பா மண்டி வகைகள் 15. 12. 2022 குமுதம் சிநேகிதி இணைப்புப் புத்தகமாக வெளியாகியுள்ளது.



1.ஓட்ஸ் காய்கறி சூப்
2.ப்ராக்கோலி/வயலட் கேபேஜ் சூப்
3.சுண்டைக்காய்/வெண்டைக்காய் சூப்
4.வாழைத்தண்டு/பீட்ரூட்/காரட் சூப்
5.பேபிகார்ன்/ஸ்வீட்கார்ன் சூப்
6.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்
7.கோஸ் சூப்
8.காரட், தக்காளி சூப்
9.கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்
10.காலிஃப்ளவர் சூப்
11.கொள்ளு, பார்லி சூப்
12.பாதாம் ஷோர்பா (ஆல்மோண்ட் சூப்)
13.இளநீர் ரசம்
14.தூதுவளை ரசம்
15.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்
16.வெற்றிலை நெல்லிக்காய் ரசம்
17.இன்ஸ்டண்ட் தக்காளி ரசம்
18.பைனாப்பிள் ரசம்
19.ரோஜாப்பூ பன்னீர் ரசம்


20.அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை)


நன்றி குமுதம் சிநேகிதி. அனைவரும் செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க மக்காஸ். 

 
Related Posts Plugin for WordPress, Blogger...