எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 நவம்பர், 2017

மாவிளக்கு.

மாவிளக்கு.

பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன்.

சில இடங்களில் சலிக்காமல் மாவை இடித்து அப்படியே வெல்லம் போட்டுப் பிடித்து நான்கு ஐந்து மாவிளக்குகள் கூட தட்டுகளில் ஏந்தி வருவார்கள்.

இங்கே சட்டியில் வைக்கப்படுகிறது. தட்டில் வைப்பதில்லை. அதற்கென்று மாவிளக்குச் சட்டி என்று ஒன்று வைத்திருப்பார்கள்.

தேவையானவை :-

பச்சரிசி - 1 அல்லது 2 ஆழாக்கு, வெல்லம் - 2 முதல் 4 அச்சு, நெய் - 1 டேபிள் ஸ்பூன் , பஞ்சுத்திரி - 1

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். இதை வடிக்க இங்கே எல்லாம் சிவப்பு ஓலைக்கொட்டான்கள் என்று வைத்திருப்பார்கள். இன்று சில்வர் அல்லது ப்ளாஸ்டிக் வடிகட்டிகளில் வடிகட்டுகிறார்கள். அதன் பின் அரிசியை பேப்பரில் போட்டு சிறிது உலர விட வேண்டும்

ஈரப்பதம் ஓரளவு இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். நைஸ் சல்லடையில் சலித்து மிச்ச அரிசியோடு சலித்த கப்பிகளையும் போட்டு திரும்பத் திரும்ப அரைத்துச் சலிக்கவும்.

வெல்லத்தை நைத்து ( நச்சு ) வைத்துக் கொள்ளவும். தூளான வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவை சிறிது சிறிதாகத் தூவி விஸ்பரை சுற்றிச் சுற்றி நிறுத்தவும் . மாவை வெளியே எடுத்து மிச்ச மாவோடு சேர்த்து நன்கு கெட்டியாக உருட்டவும்.

வெல்லம் அச்சின் அளவைப் பொறுத்துக் கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். இல்லாவிட்டால் மாவிளக்கு மாப் பாயாசம் ஆகி விடும்.

இதன் நடுவில் குழி செய்து பஞ்சை நெய்யில் உருட்டி நிறைய நெய் ஊற்றி திரியைப் பதிக்கவும். சாமிக்கு எதிரில் அல்லது கோவிலில் சாமி சன்னிதியின் எதிரில் இதில் விளக்கேற்றி சிறிது நேரம் வைத்திருந்து தேங்காய் உடைத்து வெற்றிலை பாக்கு வைத்து தீபம் காட்டி அதன் பின் உபயோகிக்கவும்.

மறக்காம சாமிக்கு நைவேத்தியம் செய்தபின் தீபம் எரியும்போதே இரண்டு தேங்காய் நார்களாலோ அல்லது அப்பள இடுக்கியாலோ தீபத்தை அப்படியே வெளியே எடுத்து அதற்கென வைக்கப்பட்டிருக்கும் சிமிண்ட் தட்டில் போட்டு விடவும்.

காரைக்குடியில் கார்த்திகை சோம வாரத்தில் குன்றக்குடி முருகனுக்கும், கார்த்திகை வேல் பூசையின் போதும்,  புரட்டாசி சனிக்கிழமைகளில் அரியக்குடி பெருமாளுக்கும் மாவிளக்கு வைக்கும் பழக்கம் உண்டு.

அது போக மகர் நோன்பின்போது குதிரை வாகனத்தில் புறப்படும் கொப்புடையம்மன், சிவன், பெருமாள், திருநெல்லையம்மன் ஆகியோருக்கும் மாவிளக்கு வைத்து வணங்குவார்கள். கோவிலூரிலிருந்து வரும்  திருநெல்லையம்மனுக்கு மாவிளக்கு வைக்கவென்றே மகர்நோன்பு மண்டபம் என்று ஒன்று காரைக்குடியில்  உள்ளது.

லேசாக ஓரங்களில் செந்நிறமான நெய் வாசனையுடன் கூடிய மாவிளக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும்.  அதற்கு பலத்த போட்டி இடுவோம். தேங்காயைக் கீறி அதில் மாவிளக்கை கேக் போலத் துண்டாக வெட்டி வைத்துக் கொடுப்பார்கள். பயங்கர ருசியாயிருக்கும் போங்க :)

புதன், 22 நவம்பர், 2017

சிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.

சிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.

தேவையானவை :- சிவப்பு பட்டர் பீன்ஸ் –  1 கப் உரித்தது. பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – கால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, இலை – சிறிது.


செய்முறை:- சிவப்பு பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயில் பட்டை, இலை, கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து திறக்கவும். இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும்.  நன்கு கலக்கி மூடி வைக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் இறக்கி தயிர்சாதத்துடன் பரிமாறவும். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. 

செவ்வாய், 21 நவம்பர், 2017

கொத்தவரங்காய்ப் பச்சடி. CLUSTER BEANS PACHADI.

கொத்தவரங்காய்ப் பச்சடி :-


தேவையானவை :- கொத்தவரங்காய் - 150 கி, பதமாக வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு. எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா - அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- கொத்தவரங்காயை சிறு சதுரங்களாக வெட்டவும். வெங்காயம் தக்காளியையும் பொடியாக அரிந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுந்து, சீரகம் , கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொத்தவரங்காயை வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும் . இன்னும் இரண்டு நிமிடம் வதக்கி புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சாம்பார் பொடி , உப்பைச் சேர்ந்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் பருப்பை சேர்த்து இன்னும் ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும். தயிர்சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். தோசை இட்லி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

திங்கள், 20 நவம்பர், 2017

வெந்தய வர தோசை. METHI DOSAI.

வெந்தய வர தோசை.
தேவையானவை :- பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், உளுந்து -  1/8 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் களைந்து இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். நைஸாக ஆட்டி உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் ஊறவிடவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைத்து வெந்ததும் எடுக்கவும். மிச்ச மாவையும்  தோசைகளாக சுட்டெடுக்கவும். தக்காளி அல்லது வரமிளகாய் சட்னியுடன் பரிமாறவும். இந்த தோசைக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம். தோசைக்கல்லில் ஒட்டாமல் இருக்க எண்ணெயை லேசாகத் தடவினால் போதும்.




டிஸ்கி :- இது நீரிழிவுக்காரர்களும், கொழுப்புச்சத்து குறைக்க எண்ணுபவர்களுக்கும் ஏற்ற தோசை.
Related Posts Plugin for WordPress, Blogger...