எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 நவம்பர், 2014

ஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள், RECIPES FOR SUNDAY, MONDAY & TUESDAY

ஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள் :-

1.கறுப்பு உளுந்து மிளகு வடை :- ஞாயிறு ஹனுமான்.

தேவையானவை :-

கறுப்பு உளுந்து – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்.
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

கறுப்பு உளுந்தைத் தோலோடு கழுவி ஊறவைக்கவும். 10 நிமிஷம் ஊறியதும் மிக்ஸியில் உப்பு மிளகு போட்டு கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து இன்னொரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரால் மூடி நன்கு மெலிசாகத் தகடுபோல் தட்டவும்.
பாலிதீன் ஷீட்டை எடுத்து விட்டு நடுவில் ஓட்டை போட்டு தட்டிய வடையை எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும். ஆஞ்சநேயருக்கு நிவேதனம் செய்யவும்.

2. இனிப்புச் சீயம் (சுகுண்டலு) – திங்கள் சிவன்.

தேவையானவை :-

பச்சரிசி – 1 கப்
உளுந்து – ½ கப்
உப்பு – 1 சிட்டிகை.
கடலைப்பருப்பு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
தூள் வெல்லம் – ½ கப்
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

பச்சரிசி உளுந்தை நன்கு கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து ஆட்டி உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

கடலைப்பருப்பைக் கழுவி வேகவைத்து தண்ணீரை வடித்து அரைக்கவும். அதில் தூள் வெல்லம் தேங்காய் , ஏலக்காய்த் தூள் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி அரைத்த அரிசி உளுந்து மாவில் தோய்த்து எண்ணெயைக் காயவைத்துப் பொறித்தெடுக்கவும் . சிவனுக்கு நிவேதனம் செய்யவும்.


3.ட்ரைஃப்ரூட்ஸ் பேணி
வெஜ் பேணி – செவ்வாய் துர்க்கை.

.ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-

வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:-

பச்சரிசி – 2 கப்
ஃபில்லிங் :-
பாதாம் -15
பிஸ்தா – 15
முந்திரி – 15
பேரீச்சை – 6
கிஸ்மிஸ் – 30
செர்ரி – 10
டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

மேல்மாவு.
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவம் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதனம் செய்யவும்

.வெஜ் பேணி :-

எப்போதும் போல உளுந்து அரைத்து வேகவைத்து வதக்கிக் காரக் கொழுக்கட்டை செய்யாமல் இப்படியும் செய்யலாம்.

தேவையானவை:-

பச்சரிசி – 2 கப்
ஃபில்லிங்க் செய்ய:-
அவித்த உருளைக்கிழங்கு – 1 ( பெரியது)
பீட்ரூட் சின்னம் – 1 துருவவும்
காரட் – 1 துருவவும்.
பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்.
இஞ்சி – 1 இன்ச் – பொடியாக நறுக்கவும்.
மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்.
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்

செய்முறை:-

மேல்மாவு.

பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் தாளித்து பச்சைமிளகாய், இஞ்சி, காரட், பீட்ரூட் துருவலை வதக்கி இறக்கி வைத்து அதில் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக அரிந்த  கொத்துமல்லித் தழை, மிளகு ஜீரகத்தூள், வெண்ணெய் போட்டு நன்கு பிசைந்து பதினாறு உருண்டைகளாக உருட்டவும்.

மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதனம் செய்யவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...